மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஏப் 2020

மோடியைத் தாக்கிய பாடல்: கோவன் கைதாகி விடுதலை!

மோடியைத் தாக்கிய பாடல்: கோவன் கைதாகி விடுதலை!

பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவதூறாகச் சித்திரித்து பாடினார் என்னும் குற்றச்சாட்டின்பேரில் நாட்டுப்புறப் பாடகர் கோவன் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க போலீஸ் வலியுறுத்தியும் நீதிபதி அதை மறுத்து கோவனை ஜாமீனில் விடுதலை செய்தார்.

ஏற்கனவே, ’மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலின் மூலம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவைக் கடுமையாகத் தாக்கிப் பாடல் இயற்றிப் பாடியிருந்தார் கோவன். மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட இந்த பாடல் வீடியோ மதுவிலக்குப் போராட்டத்துக்குப் பெரும் ஆயுதமாக இருந்தது. சமூக தளங்களில் இந்தப் பாடல் பரவியதால், கோவன் மீது கோபமானார் ஜெயலலிதா. கோவன் மீது தேச துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் 24ஆம் தேதி திருச்சி தலைமை தபால் நிலையம் எதிரே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்பாட்டம் செய்தனர். அப்போது கோவன் அண்மையில் நடந்த ராம ராஜ்ய ரத யாத்திரை பற்றிய பாடல் ஒன்றை காவிரிப் பிரச்னையோடு இணைத்துப் போராட்டக் களத்தில் பாடலை அரங்கேற்றினார். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கோவனின் பாடல் வரிகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இந்த பாடல் சமூக தளங்களில் ஹிட் ஆனதால், பாஜகவினர் கோபம் அடைந்தனர்.

திருச்சி நகர பாஜகவின் இளைஞரணித் தலைவர் கௌதமன் இந்தப் பாடல் குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக நேற்று அதிகாலை உறையூர் அருகிலுள்ள அரையனூரில் இருக்கும் கோவனின் வீட்டுக்கு மஃப்டியில் சென்றனர் போலீசார். வந்திருப்பது போலீஸார் என்று தெரிந்துகொண்ட கோவனின் மனைவி உள்தாழ்ப்பாளைப் போட்டுக்கொண்டார். போலீஸார் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தனர். அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். தகவல் கிடைத்து கோவன் தரப்பு வழக்கறிஞர்களும் வந்துவிட்டனர். அப்போது போலீஸார் வீட்டுக் கதவை உடைத்து கோவனைக் கைது செய்தனர்.

கோவன் மீது இரு குழுக்களுக்கு இடையே விரோதத்தை வளர்க்கும் மொழி, இன துவேஷத்தை உருவாக்குதல் என்ற குற்றத்துக்காக 153 ஏ, மற்றும் 506 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு கூட்டி செல்லப்பட்ட கோவனை விசாரணை என்ற பெயரில் பகல் முழுதும் அங்கேயே வைத்து நேற்று மாலை திருச்சி மாஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி ரிமாண்ட் செய்யுமாறு கோரிக்கை வைத்தனர் போலீஸார்.

ஆனால் நீதிபதியோ கோவனை ஜாமீனில் விடுதலை செய்து, 15 நாட்களுக்கு தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நிபந்தனை விதித்தார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon