மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ஒரு மதிப்பெண் கேள்விகள்: கட்டுப்பாடு நீக்கம்!

ஒரு மதிப்பெண் கேள்விகள்: கட்டுப்பாடு நீக்கம்!

ப்ளஸ் 2 தேர்வில் ஒரு மதிப்பெண் விடைகளுக்கான கட்டுப்பாட்டைத் தேர்வுத் துறை நீக்கியுள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கின. அன்று, தலைமை விடை திருத்துனர்கள், விடைத்தாள்களைத் திருத்தம் செய்தனர். அப்போது, அரசு தேர்வுத் துறை புதிய கட்டுப்பாடு விதித்தது.

அப்ஜெக்டிவ் வகையான ஒரு மதிப்பெண் வினாக்களில், நான்கு விடைக் குறிப்புகள் வழங்கப்படும். அந்த நான்கு குறிப்புகளில், சரியானதை மாணவர்கள் எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிரில் அதற்கான சரியான விடையை மாணவர்கள் எழுதுவர். மாணவர்கள் சிலர் சரியான விடையை, 'ஏ அல்லது பி' என்று ஆப்ஷனை மட்டும் குறிப்பிடுவர். சிலர் 'ஏ அல்லது பி' என்று எழுதாமல், விடையை மட்டுமே குறிப்பிடுவர். ஆனால், இந்த ஆண்டு ஆப்ஷன் குறியீட்டையும், விடையையும் சேர்த்து எழுதாவிட்டால் மதிப்பெண் வழங்க வேண்டாம் என தேர்வுத் துறை உத்தரவிட்டது.

ஒரு மதிப்பெண் வினாக்களில், பெரும்பாலான மாணவர்கள், ஏதாவது ஒன்றைத்தான் எழுதி உள்ளனர். எனவே, அவர்களுக்கு மதிப்பெண் கிடைக்காது என்ற நிலை இந்த உத்தரவால் உருவானது. இதனால், 90% மாணவர்களுக்கு, 20 - 30 மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். எனவே,ஒரு மதிப்பெண் விடைக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விதிமுறை வினாத்தாளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாளைப் படிக்க 10 நிமிடம் கூடுதல் நேரச் சலுகை வழங்கப்படுகிறது. எனவே, விதிகளை, பின்பற்றாத மாணவர்களுக்கு மதிப்பெண் கிடையாது என தேர்வுத் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று (ஏப்ரல் 13) அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு மதிப்பெண், அப்ஜெக்டிவ் வகை வினாக்களில், விடைக்கான குறியீடு அல்லது விடையில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதியிருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கப்படும். விடைக் குறியீடு மற்றும் விடை என இரண்டையும் எழுதி, அதில் ஒன்று விடைக்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டால் அந்தக் கேள்விக்கு மதிப்பெண் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon