மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 14 ஏப் 2018

மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்

மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்

'மெர்க்குரி' திரைப்படத்தைத் தமிழகத்தில் வெளியிட முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மெர்க்குரி. சைலண்ட் த்ரில்லர் பாணியில் வசனமே இல்லாமல் இப்படம் உருவாகியுள்ளது. படம் முழுவதுமாக முடிந்து ரிலீஸுக்குத் தயாரானது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகத் தமிழகத்தில் புதிய படங்களின் படப்பிடிப்புகளும், புதிய திரைப்படங்கள் வெளியீடும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தப் படம் நேற்று (ஏப்ரல் 13) உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் வேலைநிறுத்தத்தின் காரணமாக இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மெர்க்குரி உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் 1,000 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. உலக அளவில் என் படம் வரவேற்பைப் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் வியாபாரம் காரணமாக தமிழகத்தைத் தாண்டி இந்தப் படத்தின் வெளியீட்டை எங்களால் தள்ளிவைக்கமுடியவில்லை. இந்தப் படத்தின் இந்திப் பதிப்பைக்கூட எங்களால் தமிழகத்தில் வெளியிட முடியவில்லை. நானும் எனது குழுவினரும் எதுவும் செய்யமுடியாமல் மிகுந்த வலியுடன் இருக்கிறோம். இந்தப் படம் விரைவில் தமிழகத்தில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் ரசிகர்கள் திரையரங்குளைத் தவிர வேறு ஏதேனும் வழிகளில் இந்தப் படத்தினைக் காண முயற்சிக்க வேண்டாம் எனும் கோரிக்கையை வைக்கிறேன். பைரசியை ஆதரிக்காதீர்கள். என் அன்பார்ந்த தமிழ் ரசிகர்களே என்னை மன்னியுங்கள்" என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon