மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

இங்கு பத்து வயது சிறுமி இருக்கிறாள், உள்ளே வராதீர்!

இங்கு பத்து வயது சிறுமி இருக்கிறாள், உள்ளே வராதீர்!

கேரளாவில், “உள்ளே வராதீர், எங்கள் வீட்டில் பத்து வயது சிறுமி இருக்கிறாள்” என்கிற வாசகம் வீட்டு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராகவே இந்த வாசகம் என்று தெரிகிறது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிஃபாவை எட்டு பேர் சேர்ந்து கோயிலில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோன்று, உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் மாணவி ஒருவரை பாஜக எம்எல்ஏ மற்றும் கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் முதல்வர் யோகியின் வீடு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இறுதியில் மாணவியின் தந்தை உயிரிழந்தார்.

இந்த சம்பவங்களுக்கு எதிராக நாட்டின் பல இடங்களிலிருந்தும் கண்டனங்கள் மற்றும் நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன.

இந்நிலையில்,கேரள மக்களின் கோபம் பாஜகவைப் புறக்கணிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக உள்ளது. ஒரே நாள் இரவுக்குள் கேரளாவில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களிலும் பாஜகவுக்கு எதிரான பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் உள்ள உரை மாறுபடும், ஆனால் அனைத்தும் ஒரே செய்தியைத் தெரிவிக்கின்றன.

அதாவது, ”உள்ளே வராதீர், எங்கள் வீட்டில் பத்து வயது சிறுமி இருக்கிறாள்” என்ற வாசகம்தான் அனைத்து வீடுகளின் சுவர்களில் ஓட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கேரளாவில் உள்ள வீடுகளில் இடைத்தேர்தலுக்காக வாக்கு கோரி பாஜகவினர் வீட்டிற்குள்ளே வரக் கூடாது என்பதற்காக, பாஜகவுக்கு எதிரான வாசகம் இடம்பெற்ற நோட்டீஸை கதவின் வெளியே தொங்க விட்டுள்ளனர்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon