மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

சிறப்புக் கட்டுரை: அம்பேத்கர் எனும் இந்திய ஜனநாயகத்தின் சிற்பி!

சிறப்புக் கட்டுரை: அம்பேத்கர் எனும் இந்திய ஜனநாயகத்தின் சிற்பி!

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

த.நீதிராஜன்

மன்னராட்சியையும் மக்களாட்சியையும் பொதுவாக எதிரெதிராக வைப்பார்கள். ஆனால், அவ்வளவு எளிதாகப் பேசக்கூடிய நிலைமை இன்று இல்லை.

உலகிலேயே எந்த நாட்டின் மக்கள் மிகச் சிறப்பான, தரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்ற அதிகாரபூர்வமான தரவரிசையில் முதலிடத்தில் இன்று இருப்பது மன்னராட்சி நடக்கும் நார்வே நாடுதான்.

இன்னமும் மன்னராட்சி நீடிக்கிற ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் பழைய கால மன்னராட்சியோடு இப்போது யாரும் ஒப்பிடுவதில்லை.

ஜனநாயகம் எனும் பெருமாளிகையில் பழம்பெருமை வாய்ந்த பொருள்கள் வைக்கப்பட்டுள்ள அறைபோல அங்கேயெல்லாம் மன்னராட்சியும் மக்களாட்சியோடு பொருந்திவாழ்கிறது.

மன்னராட்சி போன்ற பரம்பரையாட்சி நடக்கும் கம்யூனிஸ்ட் நாடு வடகொரியாவைப் பாருங்கள்.

உலகில் எத்தனையோ விதமான ஜனநாயக முறைமைகள் இருக்கின்றன.

அந்தந்த நாடுகளின் மக்களின் மத்தியில் எழுந்து பரிணமித்துள்ள ஜனநாயக உணர்வுகளின் வானவில்கள் அவை. அவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று தோன்றும்போது அந்த நாடுகளின் மக்கள் அமைத்துக்கொள்வார்கள்.

அப்படிப்பட்ட வானவில் போன்ற ஜனநாயக உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்த தருணத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்பட்ட பெரும் ஜனநாயகவாதிகளில் டாக்டர் அம்பேத்கர் முதன்மையானவர்.

தலித் மக்களுக்காகப் போராடியவர் அம்பேத்கர் என்று மட்டும் புரிந்துகொள்வதைவிட அதிகமாக அவரை ஒருவர் அவமதித்துவிட முடியாது.

அம்பேத்கர்தான் என்னமோ இடஒதுக்கீடு என்னும் முறையைக் கொண்டுவந்து இந்தியாவையே கெடுத்துவிட்டார் என்று பேசுகிற அளவுக்குத் தைரியமான அறிவாளிகளும் நமது நாட்டில் உண்டு.

உண்மைதான் என்ன?

2200 வருடங்களுக்கு முன்னே மனு அதர்மத்தை எழுதியவர்கள்தான் உண்மையில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தவர்கள். அது ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவான , பிராமணர்களுக்கு ஆதரவான இடஒதுக்கீடு.

உண்மையில் அம்பேத்கர் செய்திருப்பது என்ன?

உழைக்கும் மக்களுக்கு ஆதரவான இடஒதுக்கீடு முறையை இந்தியாவில் அமலாக்கியதுதான்.

மகர் சாதியில் முதன்முதலில் நவீன ஆங்கிலக் கல்வி கற்றவராக அவர் உருவானார். தன்னைப் போலவே தனது சமூகத்தில் பலரும் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடினார் என்பதும் உண்மைதான்.

ஆனால், அது மட்டுமா?

தலித் மக்களின் உரிமைகளை அரசு அதிகார மையங்களில் வாதாடி வெற்றிகரமாகப் பெறுவதற்கு வழிசெய்த தனிப்பெரும் தலைவர் அவர்.

பழங்குடி மக்களுக்கு ஒரு தேசியத் தலைவர் கிடையாது. தனது சமூகத்துக்கு கிடைத்த உரிமைகள், பழங்குடிகளுக்கும் சுதந்திர இந்தியாவில் போராடாமல் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தியவர் அவர்.

பழங்குடி மக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் சாசனத்தின் சட்டக்கூறு 340இல் Other Backward Class (OBC) என்ற வரிகளைச் சேர்த்ததன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமைகள் கிடைக்கவும் வழிசெய்தவர் அவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்நிலையைக் கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டும் என சட்டக்கூறு 340 சொல்கிறது. ஆனால் , அரசியல் சாசனம் அமலாக்கப்பட்டு ஓராண்டு ஆகியும், அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஆணையமும் அமைக்கவில்லை என்று பிரதமர் நேருவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

அதன் பின்னர்தான் 1953இல் கலேல்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டுக்கான குழு அமைக்கப்பட்டது.

ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதைச் செய்து முடிக்கிற பணிகள் பி.எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் அதிகாரியாகவும் ராம்விலாஸ் பாஸ்வான் அமைச்சராகவும், வி.பி. சிங் பிரதமராகவும் வர வேண்டும் என்பதற்காக காத்துக் கிடந்தன. 1990இல் மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கப்பட்டதோடு அம்பேத்கரின் லட்சியத் திட்டம் நிறைவேறியது. அம்பேத்கர் இறந்து பல காலம் ஆகிய பிறகும் இந்தியச் சமூகத்தில் அவரது கருத்துகள் மேலும் முன்னேறுகின்றன.

அம்பேத்கரின் இடஒதுக்கீடு முறையால்தான் திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்பார்கள் சிலர்.

உண்மை என்ன?

ஆங்கிலேயர் ஆட்சியில் அரசு வேலையில் சேர வேண்டும் என்றால் சிபாரிசு வேண்டும். ஏற்கெனவே, உயர் பதவிகள் எங்கும் பிராமணர்கள் இருந்தார்கள். அவர்கள் யாருக்கு சிபாரிசு செய்வார்கள்? பிராமண இளைஞர்களுக்கே வேலைகள் கிடைத்தன.

இந்த முறையை முறைப்படுத்தியவர் அம்பேத்கர்தான். நவீனக் கல்வி படித்தவர்கள் வேலை கிடைப்பதற்காகப் பதிவு செய்ய தேசிய வேலைவாய்ப்பு நிறுவனம் (National Employment Agency) கொண்டுவந்தவர் டாக்டர் அம்பேத்கர்தான். இதையே தற்போது வேலைவாய்ப்பு மையம் (Employment Exchange) என்கிறோம்.

உண்மையான தகுதி, திறமை என்பது சிபாரிசு இல்லாமல் தனது சொந்த முயற்சியில் வேலைக்குத் தகுதி ஆவதுதான். அதை உண்மையில் செய்தவர் அம்பேத்கர்தான்.

இந்தியாவுக்கு என்ன மாதிரியான உரிமைகள் வேண்டும் என்பதை ஆய்கிற கமிட்டியாக சவுத் பாரோ கமிட்டி 1919இல் இந்தியா வந்தது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று அதனிடம் கோரிக்கை வைத்தார் டாக்டர் அம்பேத்கர். சொத்து உடையவர்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை என்ற நிலை இருந்த அந்தக் காலகட்டத்தில் அவரது கோரிக்கை மிகவும் புரட்சிகரமானது.

தொழிலாளர் நலன்

ஆபத்தான பணிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வேலை செய்வதைத் தடுக்கச் சட்டம் கொண்டுவந்தார். தொழிலாளர்களின் நலனுக்காகத் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தைக் கொண்டுவந்தார். முதன்முறையாகத் தொழிற்சாலைச் சட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்கச் சட்டம் கொண்டுவந்தார்.

அது மட்டுமல்ல, ஆங்கிலேய அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் 1942இல் தொழிற்சாலைச் சட்டத்தைத் திருத்தினார். அதன் மூலம்தான் தினசரி 14 மணிநேரம் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்த தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரப் பணி என்பது நடைமுறைக்கு வந்தது.

எட்டு மணி நேர வேலைக்காகப் போராடிய அமெரிக்க நகரின் சிகாகோ தியாகிகளை நினைவுகூர்கிற அக்கறையில் லட்சத்தில் ஒரு பங்கைக்கூட அம்பேத்கரின் பணிகளின்பால் காட்டாத தொழிலாளி வர்க்கத்தை என்னவென்று சொல்வது?

பட்டியல் மேலும் பெரிதாக நீளும்.

மத்திய நீர் ஆணையம், தேசிய மின்சார இணைப்பு ஒழுங்குமுறைக் கழகம், மத்திய திட்டக் கமிஷன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அம்பேத்கரின் கருத்துகளின் செயல்வடிவம்தான் என்பதை இன்றைய தலைமுறை புரிந்துகொண்டால் போதும்.

காத்திருந்த சிங்கம்

அம்பேத்கரின் ஜனநாயகச் செயல்பாடுகள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்டவை அல்ல. தெளிவான தத்துவக் கண்ணோட்டம் கொண்டவை.

அந்தத் தத்துவக் கண்ணோட்டத்தின் ஆரம்பம்தான் என்ன?

இந்தியச் சமூகத்தில் காலகாலமாக சமூக நீதிப் போர் நடைபெறுகிறது. அந்தப் போரின் திருப்புமுனைகள் பல. மகர் சாதிகளைச் சேர்ந்த போர் வீரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் உதவியோடு மகாராஷ்டிரத்தில் பேஷ்வா பிராமண மன்னரை முறியடித்து தங்களைச் சாதிய அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டது அத்தகைய ஒரு திருப்புமுனை.

அந்தத் திருப்புமுனையையும் கடந்து வளர்ந்தோடிய சமூக நீதி வேரின் நவீனத் துளிர்ப்புதான் அம்பேத்கர்.

மெக்காலேயின் உருவத்தில் இந்திய சமூகத்தில் நுழைந்த நவீனக் கல்வியைப் பயில்வதற்கான போராட்டத்தில் குழந்தைப் பருவ அம்பேத்கரான பீம்ராவ், தீண்டாமைக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டே முன்னேறுவதற்கான தத்துவார்த்த மனோபலத்தை எங்கிருந்து பெற்றிருப்பார்?

ராணுவ வீரரான அவரது அப்பா சொன்ன வார்த்தைகளாகத்தான் அது இருக்க முடியும்.

“ஆடுகளைத்தான் பலியிடுவார்கள். சிங்கங்களை அல்ல” என்று அவருடைய அப்பா அவருக்குச் சொல்லியிருந்தார்.

தீண்டாமைக் கொடுமை எனும் மனநோய்க்கு ஆட்பட்ட பல ஆடுகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் பொறுமையாகக் காத்திருந்தது.

சாதியச் சமூகத்திடமிருந்து விடுபட்டு ஜனநாயகக் காற்றை வெளிநாடுகளில் சுவாசித்தபடி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘ இந்தியாவில் சாதிகள்’ எனும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தபோது அம்பேத்கருக்கு வயது 25. ‘ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி’ எனும் தனது முதல் நூலை எழுதியபோது லெனினுக்கு வயது 29. இரு சம்பவங்களுமே தங்களது சொந்த சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காக இரு பெரும் ஆளுமைகள் செய்த முதல் முயற்சிகள். வெற்றிகரமான முயற்சிகள்.

இந்த வெற்றிகரமான முயற்சிகள்தான் அம்பேத்கரின் ஜனநாயகம் பற்றிய தத்துவக் கண்ணோட்டத்தின் அடித்தளம்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவர் படித்தபோது அவரது பேராசிரியர் ஜான் டேவி. அவர் பெரும் ஜனநாயகச் சிந்தனையாளர். அவரின் தாக்கமும் அம்பேத்கர் மீது இருந்திருக்கலாம். நவீன ஜனநாயகத்தின் சிந்தனைகளைப் புரிந்துகொண்டாலும் இந்தியச் சமூகத்தின் தனித்தன்மைகளைப் பற்றிய தனது சொந்தக் கருத்துகளையும் அம்பேத்கர் தொடர்ச்சியாக வளர்த்துவந்துள்ளார்.

வர்க்கமும் சாதியும்

சுதந்திரத் தொழிலாளர் கட்சியை அவர் 1936இல் உருவாக்கினார். அப்போதைய அவரது முழக்கம் “முதலாளித்துவமும் பார்ப்பனியமும் இந்திய மக்களின் எதிரிகள்” என்பதாக இருந்தது.

வர்க்கப் போராட்டத்தை அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார் என்பதை இந்த வாக்கியம் காட்டுகிறது. ஆனால், வர்க்கப் போராட்டங்களின் தொகுப்பாக மட்டுமே சமூகத்தின் வளர்ச்சியை ஆராயும் பார்வையிலிருந்து அம்பேத்கர் வேறுபட்டார் என்பதையும் இது காட்டுகிறது.

சாதி என்பது வெறும் கருத்துதான். மனப்பான்மைதான் என்கிற விவாதம் இன்னும்கூட இருக்கிறது. கருத்துமுதல்வாத மனநிலை இது. அறிவியல் விரோதப் பார்வை. அம்பேத்கர் “சாதி என்பது தொழிற்பிரிவினை அல்ல. தொழிலாளர்களின் பிரிவினை” என்று விவாதிப்பதன் மூலம் இந்த அறிவியல் விரோதப் பார்வையை ஒழிக்கிறார். சமூக யதார்த்தமான சாதியை, வாழ்க்கையின் சூழல்களில் இயங்குகின்ற ஒன்றாக ஆய்வு செய்கிற இயக்கவியல் பார்வைக்கு முன்னேறுகிறார்.

அதிநவீன மனிதர் முதல் ஆடையற்ற வாழ்நிலையிலேயே தேங்கிவிட்ட தொல்குடி மனிதர் வரையிலான மனித வரலாற்றின் பல்வேறு கட்டங்கள் இந்தியச் சமூகத்தில் உயிர்ப்போடு இயங்குகின்றன. அதனால் இந்தியாதான் மனிதகாட்சி சாலை என்றார் அம்பேத்கர். “பன்ம படிநிலை ஏற்றத்தாழ்வு சமூகம்” என்று அவர் இந்தியச் சமூகத்தை வரையறுத்தார்.

இத்தகைய வரையறைகளுக்குப் பிறகு அவர் உருவாக்கிய ஜனநாயகக் கோட்பாடுதான் “போதுமான ஜனநாயகம்”. அதை சமூகநீதி ஜனநாயகம் என்றும் அழைக்கலாம்.

சமூகத்தில் முன்னேறிய சாதிகளின் அளவுக்கு முன்னேறுவதற்கு வரலாற்றுரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதே “போதுமான ஜனநாயகம்”.

பல்வேறு அடுக்குகளாய் இந்தியாவில் ஏற்றதாழ்வுகள் இருப்பதால் அதைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் பல்வேறு அடுக்குகளாய் ஏற்றத்தாழ்வாய்தான் இருக்கும். அதன் ஒரு வடிவம்தான் இடஒதுக்கீடு.

ஜனநாயகம் பற்றிய அம்பேத்கரின் இந்தக் கோட்பாடு சாதி சமத்துவத்துக்கு இட்டுச்செல்லும். சாதி சமத்துவமே இந்தியாவின் சோசலிஷம்.

அம்பேத்கரின் இந்த ஜனநாயகக் கோட்பாட்டுக்கும் ஆன்மிகத்தில் சனாதன தர்மம் என்றும் சமூகத்தில் பார்ப்பனியம் என்றும் அரசியல் களத்தில் இந்துத்துவா என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தியாவின் சுரண்டல் தத்துவங்களுக்கும் நடக்கும் போராட்டமே இன்று நாம் காணும் சமூகத்தின் போராட்டக் களம்.

அம்பேத்கருக்கு உதவியாக காரல் மார்க்ஸும் பெரியாரும் இன்ன பிற சமூகப் புரட்சியாளர்களும் இருக்கிறார்கள்.

இறுதி வெற்றி எப்போதும் மக்களுக்கே! மக்களின் வெற்றி சாதிக்கப்படும்போது அம்பேத்கர் இன்னும் பிரமாண்டமாக வளர்ந்திருப்பார்.

(கட்டுரையாளர் த.நீதிராஜன், காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon