மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

மௌனம் கலைத்த பிரதமர்!

மௌனம் கலைத்த பிரதமர்!

கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாகப் பிரதமர் மோடி மௌனம் காத்துவருவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உ.பி உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். கடந்த ஆண்டு செங்கரும் அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று உன்னாவ் நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் மரணமடைந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் 18 காயங்கள் இருந்ததாகவும், செப்டிசிமியாவால் (ரத்தம் மூலம் தொற்று பரவுதல்) காரணமாக அவர் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக குல்தீப் சிங் செங்கரை சிபிஐ போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரம் கழித்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் வழிபாட்டுத்தலம் ஒன்றில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், கலைஞர்கள் உட்பட பலரும் இந்தச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு டெல்லியில் விழிப்புணர்வு போராட்டம் நடத்தினார். தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனிலிருந்து மெழுகுவத்தி ஏந்திய பேரணி நேற்று நடைபெற்றது.

மேலும், ‘பிரதமர் அவர்களே... உங்களின் மவுனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கொலைகாரர்களையும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளையும் மாநில அரசு பாதுகாப்பது ஏன்? உங்கள் பதிலுக்காக இந்தியா காத்திருக்கிறது. பேசுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் ராகுல் பதிவிட்டிருந்தார் .

பிரதமரின் மௌனத்தைக் கிண்டல் செய்யும் விதமாக ஆங்கில ஊடகங்கள், ‘உன்னாவ் மற்றும் கத்துவா வன்கொடுமைகளைப் பற்றிய பிரதமரின் கருத்து’ என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டிருந்தன. அதனுள், ‘இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பிரதமர் பதிலளித்தால் பின்னர் செய்தி வெளியிடப்படும்’ என்று தெரிவித்திருந்தன. இவ்வாறு, பல்வேறு தரப்பினரும் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். டெல்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற அம்பேத்கர் தேசிய நினைவு இல்லத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், “சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிகள் எந்தக் காரணத்துக்காகவும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள். நமது நாகரிக சமுதாயத்தில் இத்தகைய பாலியல் குற்றங்கள் என்பது வெட்கக்கேடானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய வரலாற்றில் இருந்து அம்பேத்கர் பெயரை அழிக்க காங்கிரஸ் முயற்சித்ததாகக் குற்றம்சாட்டிய அவர், “வாக்கு வங்கி அரசியலுக்காக அம்பேத்கரை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அம்பேத்கரை காங்கிரஸ் மரியாதைப்படுத்தியது என ஏதாவது ஒன்றைக் குறிப்பிட முடியுமா? தலித்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களைக் கடந்த 2015ஆம் ஆண்டு நாங்கள் பலப்படுத்தினோம். எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போக விடமாட்டோம்” என்று குறிப்பிட்டார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon