மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம்?

கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம்?

இந்தியா டுடே – கார்வி நிறுவனங்கள் கர்நாடகாவில் நடத்திய கருத்துக்கணிப்பில், அம்மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மே 12ஆம் தேதியன்று கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, இந்திய டுடே - கார்வி இன்சைட்ஸ் நிறுவனங்கள் சார்பில் கடந்த மாதம் தேர்தல் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று (ஏப்ரல் 13) வெளியானது.

கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் மூலமாக, 224 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஆங்கிலோ இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரை அம்மாநில ஆளுநர் நியமிப்பார். இதனால் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க 112 உறுப்பினர்களைப் பெறவேண்டுமென்பது கட்டாயம். ஆனால், இதற்கு மாறான தகவல் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.

தற்போது ஆட்சியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 90-101 தொகுதிகளும், பாஜகவுக்கு 78-86 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 34-43 தொகுதிகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, அம்மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

இந்தத் தகவல் மூலமாக, இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித்தலைவர் ஹெச்.டி.தேவகவுடா அதிக முக்கியத்துவம் பெறுகிறார். அவரது கட்சியில் கைகாட்டுபவரே முதலமைச்சர் ஆவார் என்ற நிலைமையை, தொங்கு சட்டமன்றம் உருவாக்கும்.

காங்கிரஸ் கட்சி 37 சதவிகிதமும், பாஜக 35 சதவிகிதமும், ஜனதாதளம் (ம)-பகுஜன் சமாஜ் கூட்டணி 19 சதவிகிதமும் வாக்குகளைப் பெறும் என்று இந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு எதிரான மனநிலை, முதலமைச்சர் வேட்பாளர் மீதான நம்பகத்தன்மை, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயப் பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் வாக்குகளை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, சித்தராமையா மற்றும் எடியூரப்பாவின் செல்வாக்கு இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக்கணிப்பில் 27,919 பேர் பங்குபெற்றுள்ளனர். இதில் 62 சதவிகித பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon