மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

தேசிய விருது: அதிர்ச்சியும் முதிர்ச்சியும்!

தேசிய விருது: அதிர்ச்சியும் முதிர்ச்சியும்!

இந்திய அரசினால் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த திரைப்படமாக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் செழியனின் டூலெட் திரைப்படம் வென்றிருக்கிறது. உலக விருது அரங்குகள் பலவற்றிலும் அங்கீகரிக்கப்பட்ட டூலெட் தேசிய விருது தேர்வாளர்களின் மூலமும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதைக்கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுபோலவே, ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது இசைத் துறையில் வழங்கப்பட்டிருக்கும் விருதுகள்.

சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர் ரஹ்மான் (மாம்)

சிறந்த பாடகர்: கே.ஜே.ஜேசுதாஸ்

சிறந்த பாடகி: சாஷா திரிபாதி

ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றிருப்பதற்கு மகிழ்வதா... எட்டாவது முறையாக கே.ஜே.ஜேசுதாஸ் தேசிய விருது வென்றிருப்பதற்கு மகிழ்வதா இல்லை... சாஷா திரிபாதி என்ற பாடகிக்கு முதன்முறையாக விருது கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்வதா எனத் தெரியாமல் ரசிகர்கள் திண்டாடுகின்றனர்.

தேசிய விருது பெற்றது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்துடன் பணிபுரிவது சுவாரஸ்யமான நிகழ்வு என்கிறார். அதேசமயம், ஏதாவது புதியதாக முயற்சி செய்தால், அதை எப்படி சிறப்பாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதைத் தெரிந்துவைத்திருப்பவர் மணிரத்னம் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தேசிய விருது குறித்து ரஹ்மான் பேச்சு-வீடியோ

சாஷா திரிபாதிக்குத் தேசிய விருது அறிவிக்கும்போது, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 போன் கால்கள் வந்த பிறகு எழுந்து என்ன என்று கேட்டபோதுதான் அவருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது தெரிந்திருக்கிறது. அடுத்த அரைமணி நேரம் உட்கார்ந்தபடியே அழுதிருக்கிறார். அவரது அம்மா வந்து, கொண்டாட வேண்டியதற்கு யாராவது அழுவார்களா என்று கேட்டபிறகே முதல் போன் ரஹ்மானுக்கு செய்திருக்கிறார்.

எட்டாவது முறையாகத் தேசிய விருது வென்ற கே.ஜே.ஜேசுதாஸ் எவ்வித சலனமும் இல்லாமல் இந்தத் தேசிய விருதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். பாடகர்களுக்கான ராயல்டியைப் பெற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்ட ‘பாடகர்கள் உரிமைக் குழு’வின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், கே.ஜே.ஜேசுதாஸ், சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.பி.பி, சித்ரா, மனோ உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் இருந்தபோது ஜேசுதாஸுக்கு தேசிய விருது கிடைத்தது தெரிந்ததால், அங்கேயே கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ஆனால், மேடையில் ஜேசுதாஸ் பேசியபோது தேசிய விருது வென்றது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், ராயல்ட்டி பற்றி பேசுவதுபோல, பாடல் மூலமாகத் தனக்குக் கிடைப்பவற்றை எப்படி அணுகுகிறார் என்பதை ஜேசுதாஸ் உணர்த்தத் தவறவில்லை.

“நான் பாடும்போது எதையும் விரும்பி பாடுறது இல்லை. பாட்டுல எவ்வளவு சுத்தமா... ஸ்ருதி சுத்தமா, தாள சுத்தமா, அதோட எஃபெக்ட் எப்படி? ஃபீலிங் எப்படி? இதுதான் முக்கியம். இதைத்தவிர, பணம் எவ்வளவு வரும்னு எல்லாம் நான் நினைச்சதே கிடையாது. என் குரு எப்பவும் சொல்வாரு. ‘லட்சுமிகூட நம்மளை கை விட்டுடுவா, ஆனா சரஸ்வதி விடமாட்டா’. நான் இன்னிக்கும் அதை நம்புறேன். கணக்கைப் பத்தி ஏன் நினைக்கணும்? காலைல தூங்கி எழுந்ததும் அஞ்சு, ஐநூறு ரூவா இருக்கு சார்னு சொல்வாங்க. என்னப்பா இதுன்னா, கணக்கெல்லாம் அப்பறம் பாத்துக்கோங்க, இப்ப இதை வெச்சுக்கோங்கன்னு சொல்றாங்க. தூங்கிக்கிட்டு இருக்கவனை எழுப்பி குடுக்குற மாதிரி ஆகிடுச்சு எல்லாம்” என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மாம் படத்தின் பின்னணி இசைக்காகத் தேசிய விருது பெற்றது குறித்துப் பேசியபோது, ஸ்ரீதேவி நேரில் வந்து தன்னிடம் இசையமைக்கச் சொல்லி கேட்டதை நினைவுகூர்ந்தார். ஸ்ரீதேவியின் திரைப்படமாக இருந்தாலும், அந்தக் கதை சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துச் சொல்லி ரஹ்மானிடம் கேட்டது, அவர் எந்தளவுக்கு அந்தப் படத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை உணர்த்துகிறது.

ஸ்ரீதேவிக்கு மாம் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்திருக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மிகவும் பொருத்தமான ஒன்று. இவ்விருது வழங்கப்பட்டதற்கு நன்றி கூறி, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீதேவியின் உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வெகுமதி மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் ஸ்ரீதேவி கறாரானவர். அவர் இன்று நம்முடன் இல்லை. அப்படி இருந்தாலும் அவரது திறமை போற்றப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon