மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

சிறப்புக் கட்டுரை: மோடி கூறியிருப்பது மெய்யா?

சிறப்புக் கட்டுரை: மோடி கூறியிருப்பது மெய்யா?

ஜெ.ஜெயரஞ்சன்

கறுப்புக் கொடி போராட்டத்துக்கு இடையே சென்னை வந்து திரும்பியிருக்கிறார் தலைமை அமைச்சர் மோடி. கறுப்புக் கொடிப் போராட்டம் எதற்கு நடந்ததோ அதைப் பற்றி வாய் திறக்காதவர் தென்மாநிலங்கள் கொதித்துப் போயிருக்கும் மற்றொரு சங்கதிக்குப் பதிலளித்துச் சென்றுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை விழாவில் உரையாற்றியவர், “நிதிக் குழுவின் வரையறைகள் குறித்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நம்மைக் குறை கூறுவோர் காணத் தவறியதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். எந்த மாநிலங்களலெல்லாம் மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் ஊக்கம் அளிக்கப்படும். இதன் வாயிலாகத் தமிழகம் உறுதியாகப் பயன்பெறும்” எனக் கூறியதாக ஏப்ரல் 13, இந்து ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

தலைமை அமைச்சரின் இந்தக் கூற்று உண்மையானதா?

15ஆவது நிதிக் குழு பற்றிய அரசாணை எண் 3292 நவம்பர் 27, 2017 அன்று வெளியிடப்பட்டது. நிதிக் குழுவின் தலைவராக முன்னாள் அரசுச் செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.கே.சிங் நியமிக்கப்பட்டார். முழு நேர உறுப்பினராகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது ஒன்றிய அரசின் தினந்தோறும் மாறிய நிலைப்பாடுகளை ஓயாமல் தாங்கிப்பிடித்த ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரன்றி மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் வரையறைகள் அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதிக் குழுவானது equity, efficiency and transparancy ஆகிய மூன்று கொள்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களின் சீற்றத்திற்குக் காரணமாக விளங்குவது ஆணையின் வரையறையிலுள்ள 8ஆவது உத்தரவு. குழு தனது பரிந்துரைகளை வழங்கும்போது 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பினைப் பயன்படுத்த வேண்டும் என அறுதியிட்டுக் கூறுகிறது அந்த ஆணை. ஆங்கிலத்தில் தெளிவாக "shall use" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பாதகங்கள் குறித்து நாம் ஏற்கெனவே விரிவாக மின்னம்பலத்தில், ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 1, ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 2, நம்மை வஞ்சிக்கிறதா நிதிக்குழு? ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளாகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். பல செய்தித்தாள்களும் இதை விளக்கியுள்ளன. தென்மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு குறையும் என்பதே தென் மாநிலங்களின் அச்சத்துக்குக் காரணம். “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் நலனைக் கவனத்தில் கொண்டுதான் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு ஊக்கம் கொடுக்கப்படும்” எனக் கூறுகிறார்.

அரசாணை என்ன கூறுகிறது?

ஆணையின் வரையறை எண் 7 கூறுவது “measurable performance - based incentives" வழங்க ஆலோசனை வழங்கலாம் என்பதாகும். அதாவது அளந்து பார்க்கும் வண்ணமுள்ள செயல்திறனுக்கு ஊக்கம் கொடுக்கலாம் என்பதாகும். என்ன செயல்களில் திறன் என்று ஒன்பது நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறது ஆணை. அதில் இரண்டாவதாகக் காணப்படுவது ‘Efforts and progress made in moving towards replacement rate of population growth’ என்பதாகும்.

Replacement rate of population growth என்றால் என்ன?

நாட்டின் மக்கள்தொகையில் ஓராண்டு காலத்தில் பிறப்பும் இறப்பும் நடைபெறும். பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்திற்குச் சமமாக இருந்தால் நாட்டின் மக்கள்தொகை கூடுதல், குறைதல் இல்லாமல் நிலைபெறும். அந்த விகிதம்தான் Replacement rate. தற்போதைய replacement rate என்பது 2.1 என்பதாகும். அந்த விகிதத்தில் பிறப்புகள் இருந்தால் இறப்பை ஈடுகட்டி மக்கள்தொகை நிலைபெற்று விடும். “2.1 என்ற பிறப்பு விகிதத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளையும் அதில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் கணக்கில் கொள்க” என்று கூறுகிறது அரசு ஆணை.

இந்திய மாநிலங்களில் என்ன நிலவரம்?

கேரளம் (1.6), தமிழகம் (1.7), ஆந்திரமும் கர்நாடகமும் (1.8) என்ற அளவில் பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. ஆனால் உத்தரப் பிரதேசம் (2.7), பீகார் (3.4), ராஜஸ்தான் (2.4), மத்தியப் பிரதேசம் (2.3) என்ற அளவில் பிறப்பு விகிதம் கொண்டுள்ளன. எங்கு பிறப்பு விகிதம் 2.1 என்ற அளவுக்கு மேலுள்ளதோ அங்குதான் அதற்கான திட்டங்களும் முயற்சிகளும் தேவை. அதற்கான ஊக்குவிப்பும் தேவை. ஏற்கெனவே இந்தப் பிறப்பு விகிதத்தை விடவும் குறைவாகப் பிறப்பு விகிதம் கொண்டுள்ள மாநிலங்கள் என்ன ஊக்குவிப்பைப் பெற முடியும்? “Incentive” என்ற சொல்லின் பொருள் என்ன? அகராதி கூறும் பொருள் “A thing that motivates or encourages someone to do something" என்பதாகும். எது ஒன்று ஒருவரை ஒரு செயலைச் செய்யத் தூண்டுகிறதோ அதுவே Incentive ஆகும்.

ஒருவன் ஒரு செயலைச் செய்து முடித்தபின் அவனை அச்செயலைச் செய்ய எப்படி ஊக்குவிக்க முடியும்? செய்து முடித்த செயலுக்கு மெச்சி பரிசளிக்கலாம். அதற்குப் பெயர் Incentive அல்ல. அதற்கு “reward" என்று பெயர். ‘reward’ என்ற சொல்லின் பொருளாக அகராதி கூறுவது: “A thing given in recognition of a service, effort or acheivement." எந்தவொரு சேவைக்கோ, உழைப்புக்கோ அல்லது சாதனைக்கோ வழங்கப்படுவது பரிசு (reward). ஆகவே, ஆணையில் கூறப்பட்டிருப்பது incentive தானே தவிர reward அல்ல. மேலும், அந்த ஆணையில் குறிப்பிடப்படும் சொற்றொடர் “moving towards" என்பதாகும். அதாவது 2.1 என்ற பிறப்பு விகிதத்தை நோக்கி நகர்தல் என்பதே. நகர்தல் என்பது தொடரும் செயல். முடிந்த செயல் அல்ல. வடமாநிலங்கள் நகர முயற்சிக்கும்போது தென் மாநிலங்கள் நகர்ந்து முடித்து விட்டன. அந்த வகையிலும் ஆணை தெளிவாக உள்ளது. முயற்சிக்கும் வடமாநிலங்களுக்கு ஊக்கம் வழங்குக என்பதுதானே இதன் பொருளாக இருக்கிறது. தென்மாநிலங்களைப் பொறுத்தவரையில் அவை அடைந்துள்ள இலக்கைக் கணக்கில்கொள்ள ஆணை “reward" என்பதையும் “acheived" என்பதையும் குறிப்பிடவில்லை எனும்போதும் தென் மாநிலங்கள் எப்படிப் பயன்பெற முடியும்?

இது ஒருபுறம் இருக்க, நிதிக் குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தென்மாநிலங்களின் சாதனைகளுக்கு ஏதாவது வழங்க நினைத்தாலும் கிள்ளிதான் வழங்கும். ஏனெனில் அள்ளி வழங்க வேண்டுமெனில் அதன் கருதுகோள்கள் இடம் கொடுக்காது. ஒதுக்கப்படும் நிதியைத் தீர்மானிக்க மக்கள்தொகையையும் வளர்ச்சியில் பின்தங்கிய அளவும் ஏறத்தாழ 80 விழுக்காடு முக்கியத்துவம் பெறும். அதனால் தென்மாநிலங்கள் மிகப் பெரிய பங்கை இழக்கும். சாதனைகளுக்குப் பரிசு வழங்க ஆணையிடப்படவில்லை. பரிசு கிடைத்தாலும் ஆறுதல் பரிசு மட்டுமே கிட்டும்.

ஆக, மோடியின் சென்னைப் பேச்சு அவரின் மற்ற வாக்குறுதிகளை ஒத்ததுதான். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும், வருடம் 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் போன்ற வெற்று அறிவிப்புகளைப் போன்றதே இதுவும். அதற்கான எந்தத் தடயமும் ஆணையில் காணப்படவில்லை என்பதே உண்மை. உண்மையைப் பற்றி அவரோ அவரது கட்சியோ என்று கவலைப்பட்டார்கள் இன்று கவலைப்படுவதற்கு?

கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon