மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஆளுநர்!

ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஆளுநர்!

காவிரி உரிமைக்கான நடைப் பயணத்தை முடித்த கையோடு நேற்று (ஏப்ரல் 13) அறிவாலயத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களோடு ஆலோசனை நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அவர்களோடு ஆளுநர் மாளிகைக்கு நேற்று பகலில் புறப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்ட கோரிக்கை மனுவோடு ஆளுநரை சந்தித்தனர் ஸ்டாலினும் மற்ற கட்சியினரும். இதில் மதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஆளுநருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் இறுதியில் இருந்த தலைவர்கள் பெயரிலும் வைகோ பெயர் சேர்க்கப்படவில்லை.

காவிரி பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னையும் ஆளுநரிடம் முறையிடுவது வீண் என்று நினைக்கிறாராம் வைகோ. சில நாட்களுக்கு முன்பு கூட ‘பன்வாரிலால் புரோகித்தா அல்லது புரோக்கரா?’ என்று மிகக் கடுமையாக சாடியிருந்தார் வைகோ. இந்நிலையில் திமுக அணியின் இந்த ஆளுநர் சந்திப்பை மதிமுக புறக்கணித்துவிட்டது. இதனால், திமுகவுக்கும் தர்மசங்கடம் இல்லாமல் போய்விட்டது.

அதனால் மதிமுக நீங்களாக மற்ற தலைவர்களோடு ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின். சென்றவுடனேயே கடுமையான வெயிலை சுட்டிக்காட்டிய ஆளுநர் அனைவருக்கும் வெல்கம் ட்ரிங்க் அளித்திருக்கிறார்.

ஸ்டாலினைப் பார்த்ததும் கைகளை பிடித்துக் கொண்டவர், ‘உங்க நடைப்பயணத்தை டிவில பார்த்துக்கிட்டிருக்கேன். மக்களோடு நல்லா மிங்கிள் ஆகறீங்க. இதுதான் ஒரு தலைவருக்கு வேணும். உங்களுக்கு என்னோட வாழ்த்துகள்’ என்று சொல்ல ஸ்டாலினுக்கு புன்னகை தாங்க முடியவில்லை.

தேங்க்யூ சார்.. தேங்க் யூ சார் என்படியே சக தோழமைக் கட்சித் தலைவர்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

இப்படியாக ஐந்து நிமிடங்கள் ஓட... தான் கொண்டு வந்திருந்த நான்கு பக்க ஆங்கில மனுவை தலைவர்களோடு சேர்ந்து ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்திப்பதற்கு ஆளுநர் நேரம் பெற்றுத் தரவேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

மனுவைப் படித்துப் பார்த்த ஆளுநர்,

‘இங்க பாருங்க. இந்த மனுவை நான் அப்படியே பிரதமருக்கு ஃபார்வர்டு பண்ணிடறேன். அதுதான் என்னால முடியும். மத்தபடி உங்க கோரிக்கை நிறைவேற வாழ்த்துகள்’ என்று மீண்டும் வாழ்த்து சொல்லி விடை கொடுத்திருக்கிறார்.

சில நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், தனது நடைப் பயணத்தை சிலாகித்து ஆளுநர் கூறிய வாழ்த்தில் மகிழ்ந்து போயிருக்கிறார் ஸ்டாலின். ஆளுநர் ஸ்டாலினுக்கு கூறிய வாழ்த்து என்பது நடைப் பயணத்துக்கு மட்டுமானதா என்பதை அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கும் என்கிறார்கள் நோக்கர்கள்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon