மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 ஜூலை 2020

எங்களை மன்னித்துவிடாதே ஆசிஃபா...

எங்களை மன்னித்துவிடாதே ஆசிஃபா...

ஆசிஃபா ஃபாத்திமா

வாழ்க்கை என்ற சொல்லைப் பிறழ்ச்சி இல்லாமல் நீ உச்சரிக்கத் தொடங்குவதற்கு முன்பே, உன் வாழ்க்கையை அழித்த மனிதர்கள் நாங்கள். உன் மரணத்துக்குப் பின்னால், எங்கள் ஒவ்வொருவரின் ஆற்றாமையும் கனன்றுகொண்டே இருக்கிறது. அன்று குதிரைகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுமி ஆசிஃபா வீடு திரும்பாமல் போனபோது அவளின் பெற்றோரின் நிலை என்னவாக இருந்திருக்கும்? புலனாய்வுத் துறையினர் கூறுகையில், ‘அவள் கற்பழிக்கப்பட்டதற்கான காரணம் அவளின் நாடோடி சமூகத்தின் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்புதான்’ என்று கூறியிருக்கின்றனர்.

மதத்தையும் சமூகத்தையும் காரணம் காட்டி இப்படிக் கொடூரமாக நடந்துகொள்வதைத்தான் நாம் இறையாண்மை என்று மார்தட்டிக் கொள்கிறோம். அது மட்டுமில்லாமல், குற்றம் செய்த எட்டு பேரை விடுவிக்கக் கோரி போராட்டம் நடக்கிறது. இதை என்னவென்று சொல்வது? இருப்பதிலேயே உச்சபட்சக் கேவலம். இங்கு ஒன்றைச் சரி, தவறு என்று தீர்மானிப்பதற்குக்கூட சாதியும் மதமும் தேவைப்படுகின்றன. இதைவிட மோசமான நிலை ஒன்று இருக்க முடியுமா?

ஆசிஃபாவைக் கடத்திச் சென்று, தூக்க மாத்திரைகளைக் கழுத்தை நெரித்து உட்கொள்ளச் செய்து, மூன்று நாட்கள் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தலையில் கல்லால் அடித்து, கழுத்தை நெரித்து வாயிலும் உடலிலும் ரத்தம் வழிய அந்த பிஞ்சைக் கொல்லும் அளவுக்கான குரோதம் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? அன்பையும், அறத்தையும் மட்டுமே போதிக்கும் மதங்களைக் காரணம் காட்டி இச்செயல்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இதற்கான உண்மையான காரணம், மனதில் படிந்து கிடக்கும் அழுக்கு. குற்றப்பத்திரிகையை வாசித்த யாராலும் இந்தச் சம்பவத்தை உள்வாங்காமல் இருக்க முடியாது. மனதை உலுக்கி எடுக்கக்கூடிய தகவல்களை கூறியிருக்கின்றனர். அவளைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து, ஒவ்வொருவரும் பாலியல் வன்கொடுமை செய்து, மீருட் என்ற இடத்தில் இருந்து வேறொரு நபரை “காம வேட்கையைத் தீர்த்துக்கொள்ள” அழைத்து, இன்னொரு நபர் பாலியல் கொடுமை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவளைக் கொல்லாமல் உயிருடன் நீட்டித்து வைத்திருந்து, கடைசியாக அனைவரும் சேர்ந்து கொன்றுள்ளதாகக் குற்றப்பத்திரிகை சொல்கிறது.

பெண்களுக்கு நாம் தரும் பரிசு!

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் உத்தரப்பிரதேசத்தில், 17 வயதுப் பெண், எம்.எல்.ஏ ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டுக்கான வழக்கைக்கூடப் பதிவு செய்ய முடியாமல் போராடுகிறாள். அவளது குடும்பமே கொடுமை செய்யப்படுகிறது. அவளது அப்பா காவல் துறையில் இறந்து போகிறார். அந்தப் பெண்ணின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? வலி, அவமானம், அப்பாவின் மரணம் அனைத்துக்குமான ஒரே காரணம், தைரியமாகப் புகார் கொடுக்க வெளியில் வந்ததுதான். இனிமேல் இப்படியான குற்றங்களை எளிதில் செய்யலாமே? யார் புகார் கொடுக்க வருவார்கள்? பெண்களுக்கு நம்மால் கொடுக்க முடிந்த ஒரே விஷயம் பயம்தான். பயம் மட்டும்தான். பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்ணியம் என்று கூக்குரலிட்டாலும், அடிப்படையில் பயத்தை மட்டுமே காலம் காலமாகப் பெண்களுக்குள் கடத்திவருகிறோம்.

இப்போது நம் நிலைமை என்ன? எதற்காகவெல்லாம் போராடப் போகிறோம்? பல ஆயிரம் வருடங்களாகப் போராடிப் பெற்ற விஷயங்களை ஒவ்வொன்றாகத் தொலைத்து வருகிறோம். பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை, கௌரவக் கொலை, குடும்ப வன்முறை, குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமணம், வீட்டுக்குள் அடக்கி வைப்பது, தியாகி என்ற பட்டத்தைத் தலையில் சூட்டிவிட்டுக் கேவலமாக நடத்துவது என்று பெண்கள் முதுகில் ஏராளமான சிலுவைகள், கைகளைப் பிணைக்கும் சங்கிலிகள். இதில் குழந்தைகளும் அடங்குகிறார்கள்.

பச்சிளம் குழந்தை முதல் யாரை வேண்டுமானாலும் பேதமின்றி பாலியல் வன்கொடுமை செய்யும் இந்த நாட்டில், எந்தச் சுதந்திரத்தை, எந்தத் தைரியத்தை யாருக்கு நம்மால் கொடுக்க முடியும்? நம்பிக்கை என்ற சொல்லே வலுவிழந்து கூனிக் குறுகிப்போய் நிற்கிறது. வாழ்க்கை எவ்வளவு மோசமாகப் போனாலும், மனிதர்கள் மேல் இருக்கும் தீராத நம்பிக்கைதான் நமக்குத் துணையாக இருக்கிறது. இன்று அதுவும் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் ஒரு குற்றம் நடக்கும்போது, போராடிப் போராடி நியாயம் பெற வேண்டியதுதான் நம் நிலை. அப்படியும் நமக்கு நியாயம் வழங்கப்படுகிறதா என்றால் இல்லை. இத்தகைய ஒரு குற்றம் செய்தவர்களைக் காப்பாற்றவும் போராட்டம் நடப்பதென்பது எவ்வகையிலும் தாங்கிக்கொள்ள முடியாத செயல்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இன்று ஆசிஃபா, நாளை நம்மில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீண்டுகொண்டே செல்லும் பட்டியல்

இப்போது இருப்பவர்களுக்கும் சரி, இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி, நம்மால் ஒன்றுமே கொடுக்க முடியாது. அடிப்படைத் தேவைகளில் இருந்து, பாதுகாப்பு வரை எதுவும். நம்பிக்கை என்ற ஒன்றை நாம் அறவே மறக்கக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை நிகழ்கிறது. அவற்றில் சிலவற்றைத்தான் நாம் அறிகிறோம். நிர்பயா, நந்தினி, ஜிஷா, ஹாசினி, வேலம்புதூர் சிறுமி, தற்போது ஆசிஃபா எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இப்போது #Justiceforaasifa மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலன் இருக்கிறதா? #Justiceforhasini, #Justiceforjisha என்று இப்பட்டியலும் நீள்கிறது.

ஒவ்வொரு முறையும் ‘எங்களை மன்னித்து விடு’ என்று கேட்டுக் கேட்டு வெறுப்பாக இருக்கிறது. இப்போது கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைத்தான் பதிவிட்டுள்ளார். எத்தனை முறை, எத்தனை பேரிடம்தான் மன்னிப்பு கேட்பது? சாதத் ஹசன் மாண்டோ என்ற எழுத்தாளர், குஜராத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் கற்பழிக்கப் பட்ட செய்தி அறிந்து அதனால் மனம் உடைந்து இறந்து போனார். அதேபோலத்தான் இப்போது மனம் துயர்கொள்கிறது. ஆனால் என்ன செய்வது, ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து, மறுபடியும் வேறொரு துயரத்தில் வீழ்த்தப்படுகிறோம். நமக்கு என்றுமே மன்னிப்பு கிடையாது. அதனால், இப்போது நான் இறைஞ்சுகிறேன், ‘எங்களை மன்னித்துவிடாதே ஆசிஃபா!’. உன் வலி, அதனால் உனக்கு ஏற்பட்ட கோபம், நீ மனிதர்கள் மேலும் உலகின் மேலும் கொண்டுள்ள வெறுப்பு நிச்சயமாக எங்களைப் பொசுக்கும். அறிவியல் உலகில் சாபங்களை யாரும் மதிப்பதில்லை. ஆனால், உன் குருதியின் சாபம் அனலாகக் கொதிக்கிறது. இனியொரு ஆசிஃபா நமக்கு வேண்டாம். இனியொரு ஜிஷாவின், இனியொரு ஹாசினியின், இனியொரு ஆசிஃபாவின் சாபத்தைத் தாங்கும் வலிமை நமக்குக் கிடையாது.

ஆசிஃபா, நீ நடந்து சென்ற அந்தப் புல்வெளியில் உன் பாதச்சுவடுகள் இப்போதும் கொதித்துக்கொண்டிருக்கின்றன. உன் அலறல் காற்றில் கலந்து ஒவ்வொரு நொடியும் கேட்கிறது. நீ காணவிருந்த ஆயிரம் ஆயிரம் கனவுகளுக்காக எங்கள் கையறு நிலையைத் தவிர காணிக்கையாக்க வேறொன்றும் இல்லை.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon