மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

பியூட்டி ப்ரியா: பாத துர்நாற்றத்தைப் போக்க...

பியூட்டி ப்ரியா: பாத துர்நாற்றத்தைப் போக்க...

சோடியம் பை கார்பனேட் என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா பாதத்தில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். இது வியர்வையில் உள்ள pH அளவை நீர்க்கச் செய்து, பாக்டீரியாவைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவைச் சேர்த்து கலந்து, அந்த நீரில் 15 - 20 நிமிடங்கள் பாதங்களை ஊற வையுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்துவர, பாத துர்நாற்றம் நீங்கும். வேண்டுமானால், ஷூக்களில் பேக்கிங் சோடாவைத் தூவி பிறகு அணியுங்கள். இதனால் பாதங்களில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்

கைகளில் வைத்து அழகு பார்க்கும் மருதாணியைச் சிறிதளவு எடுத்து கால்களிலும் வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு, சுத்தமான நீரில் கழுவி துடைக்கவும். மேலும் வேப்பிலை, சுண்ணாம்பு, மஞ்சள் சேர்த்து அரைத்த கலவையுடன் சிறிதளவு விளக்கெண்ணெயைச் சேர்க்கவும். இதன் மூலம் பாத வெடிப்பும்கூட எளிதில் சரியாகும்.

லாவண்டர் எண்ணெய் நல்ல நறுமணத்துடன் இருப்பதோடு, பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.

வினிகர் பாதங்களில் அமிலத்தன்மையை அதிகரித்து, பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தைத் தடுக்கும். எந்த வகையான வினிகரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

அகலமான வாளியில் எட்டு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் ஒன்றரை கப் வினிகர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். அதில் பாதங்களை 10 - 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இறுதியில் பாதங்களை சோப்பு பயன்படுத்தி நீரால் கழுவுங்கள்.

பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி நாற்றம் குறைந்து விடும். வீட்டுக்குள்ளும் காலணிகளைப் போட்டுக்கொள்ளுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் எலுமிச்சைப் பழத் தோலால் பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும்; கிருமிகளை ஒழிக்கும்.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon