மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சித்திரை 1: தலைவர்கள் வாழ்த்து!

சித்திரை 1: தலைவர்கள் வாழ்த்து!

சித்திரைத் திருநாளை முன்னிட்டு, தமிழ் மக்கள் அனைவருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனிய புத்தாண்டில், தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்றும், நலமும் வளமும் பெருகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “நமது வாழ்வில் அமைதியும், வளங்களும், மகிழ்ச்சியும் பிறப்பதற்கான அறிகுறியாக சித்திரை திங்களை புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். இந்தப் புத்தாண்டு நம்பிக்கை, வெற்றி ஆகியவை நிறைந்த ஆண்டாக அமையட்டும். இந்த சிறப்புக்குரிய விழாவின்போது எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கவர்னர் மாளிகையில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். சித்திரை திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்களில் திளைக்க வேண்டிய தமிழகம், அதன் உரிமைகளைக் காக்கவும், மீட்கவும் கொளுத்தும் வீதிகளிலும், சாலைகளிலும் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை இடைவிடாது தொடர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். அதற்காக நாமெல்லாம் ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம். அதன் அடிப்படையிலே வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் உருவாக்க துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் நெடிய பெருமையினையும் இயற்கை அன்னை வழங்கிய வளங்களையும், நம் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்கும் ஆண்டாக இந்த ஆண்டை அமைத்து நம் தாய் தமிழ்நாட்டின் சிறப்புக்கு ஏற்பட்ட இடர்கள் அனைத்தையும் களைந்து தமிழக மக்களின் பெரு வாழ்வுக்கு எதிரான சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடித்து நமது வெற்றி வரலாற்றை நிலைநாட்டி தலைநிமிர்ந்த தமிழகத்தை, வளமான மக்கள் வாழ்வை அமைத்திட உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “இந்தப் புத்தாண்டு உலக அளவிலே தமிழர்களுக்கு எழுச்சி தரக்கூடிய ஒரு நாளாக தமிழுக்கு வளர்ச்சி தரக்கூடிய ஒரு நாளாக தமிழ் சமுதாயத்துக்கு உயர்வு தரக்கூடிய ஒரு நாளாக அமைய வேண்டும். என் தமிழ் சமுதாயம் உலகை வென்ற சமுதாயமாக மீண்டும் உருவாக வேண்டுமென்று இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளிலே வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என்று உறுதி ஏற்போம். மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திட வேண்டும் என்று முழங்குவாம்” என்று பதிவிட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், "வந்தாரை வாழ்விக்கும் வான்புகழ் தமிழ்நாடு, கையேந்தி நிற்பதைக் காண்பது பொறுக்காமல், கண்ணீரோடு பிறக்கிறது தமிழ்ப் புத்தாண்டு. இருந்தாலும், தமிழர்களின் உரிமைக்கான உணர்ச்சிப் போராட்டத்துக்கு, வெற்றி நிச்சயம் என்னும் உண்மையையும் உணர்த்த விளம்பி என்னும் பெயரில் விடியப்போகும் இப்புத்தாண்டை, நம்பிக்கையோடு நாம் வரவேற்போம்” என்று தனது வாழ்த்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon