மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்பு நேர்காணல்: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சமூக விளைவுகள்!

சிறப்பு நேர்காணல்: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சமூக விளைவுகள்!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 6

சந்திப்பு: த.நீதிராஜன்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அமலாக்கம் ஏற்படுத்தியிருக்கிற சமூக விளைவுகள் என்ன?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தலித் - பழங்குடி மக்கள் ஒரு பாதுகாப்பு வளையமாகப் பார்க்கின்றனர். அவர்களுக்கு ஓரளவு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வன்கொடுமைகள் புரிபவர்களிடம் காலப்போக்கில் இந்தச் சட்டம் ஓர் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தலித் - பழங்குடி மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அக்கறை உள்ள, அரசியல் சாசனத்தில் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு உள்ள, மனிதநேயமுள்ள அதிகாரிகளுக்கு இந்தச் சட்டம் விலைமதிப்பற்ற ஆயுதமாக இருக்கிறது.

ஆனாலும் வன்கொடுமைகள் தொடர்கின்றனவே என்று நீங்கள் கேட்கலாம். சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளும் அவற்றின் பாதிப்புகளும் அடிப்படையான காரணங்களும் மாறவில்லை. அவற்றை மாற்றுவதற்கான முயற்சிகள் திறன்மிக்கதாக இல்லை. அதனால் வன்கொடுமைகள் தொடர்கின்றன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றனவா?

இந்தச் சட்டத்தின் சில பலவீனங்களால் இதன் முழுமையான தாக்கம் உணரப்படாத நிலை இருந்தது. 1989இல் இந்தச் சட்டம் உருவாகும்போதே நான் சுட்டிக்காட்டியவைதான் அவை. அதனால் இந்தச் சட்டத்தின் பயன் முழுமையாகக் கிடைக்கவில்லை. தலித் - பழங்குடி மக்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய அளவுக்குக்கூட நியாயம் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது. ஒருபக்கம் இந்தச் சட்டத்தில் உள்ள சிறு சிறு குறைபாடுகள். மறுபக்கம் இந்தச் சட்டத்தை அமலாக்கக்கூடிய அதிகாரிகள் நல்ல குணங்கள் கொண்டவர்களாகவே இருந்தாலும், இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது அவர்கள் பாரபட்சமான உணர்வோடு நடந்துகொள்கின்றனர்.

இந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிக்க மாநில அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்கிறது பிரிவு 14 (2). ஏற்கெனவே பல்வேறு விதமான வழக்குகளின் சுமையோடு உள்ள ஒரு நீதிமன்றத்தை வெறுமனே சிறப்பு நீதிமன்றம் எனக் குறிப்பிடுவதால் மட்டும் விசாரணை வேகமாக நடக்காது. இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே விசாரிக்கிற தனியான, சிறப்பான நீதிமன்றங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டாயமாக அமைத்திட வேண்டும். அவற்றில் தினசரி விசாரணை நடைபெற வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்காகவே சிறப்பு அரசு வழக்கறிஞர்களும், சிறப்பு விசாரணை அதிகாரியும் நியமிக்கப்படக்கூடிய பிரிவுகள் வேண்டும் என்று விவாதித்தேன். ஆனால், அது ஏற்கப்படவில்லை. சட்டத்தில் இருக்கிற பலவீனம் அறியாமையால் ஏற்பட்டதல்ல.

சட்டத்தின் மூன்றாம் பிரிவில் உள்ள வன்கொடுமைகளின் பட்டியலில், சமூகப் புறக்கணிப்பு (ஊரை விட்டு ஒதுக்கிவைத்தல்) பொருளாதாரப் புறக்கணிப்பு, சமூக ரீதியான மிரட்டல், பொருளாதார ரீதியான மிரட்டல் ஆகியவை இல்லை. இவையெல்லாம் தலித்துகள் எப்போது தங்களின் நியாயமான கோரிக்கைகளை எழுப்புகிறார்களோ, அநீதிகளை எதிர்க்கிறார்களோ, தங்களின் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்கிறார்களோ... அப்போதெல்லாம் தலித்துகளால் எதிர்கொள்ளப்படுகிற யதார்த்தங்களாகும். ஒரு மனிதனுக்கு எதிரான மிகக் கொடுமையான குற்றம் கொலையாகும். பெரும் எண்ணிக்கையில் கொல்லப்படுவது என்பது தலித் - பழங்குடி மக்களுக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகக் கொடுமையான குற்றத்தின் தனித்துப் பார்க்கக்கூடிய பகுதியாகும்.

அதேபோல பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பெண்ணுக்கு எதிரான மிக மிகக் கொடிய குற்றமாகும். கூட்டாக ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்வது, பெரும் எண்ணிக்கையிலான பெண்களைப் பலர் வன்கொடுமை செய்வது ஆகியவை தனித்தன்மையான மிக மிகக் கொடுங்குற்றங்களாகத் தலித் - பழங்குடிப் பெண் மக்களுக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை எதுவும் வன்கொடுமைகளின் பட்டியலில் இல்லை. இந்தச் சட்டம் தயாராகிக்கொண்டிருந்த சூழலில், அதில் இவை இரண்டையும் சேர்க்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால் அவை சட்டத்தில் இடம்பெறவில்லை.

தலித், பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளில் 80 சதவிகிதம் தலித்துகள் மீது நடத்தப்படுகிறது. அவர்கள்தான் பிரதானமாகப் பாதிக்கப்படுபவர்கள். கொளுத்தப்படுதல், படுகாயம் அடைதல் ஆகியவற்றில் தலித்துகள் 90 சதவிகிதம் வரை பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தச் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படியான பாதுகாப்பு தலித்துகளுக்குக் கிடைக்கவில்லை.

கிறிஸ்தவ மதம் மாறிய தலித்துகள் அல்லது தலித் கிறிஸ்தவர்கள், அவர்களின் இந்து தலித் சகோதரர்களைப் போலவே சாதியின் காரணமாக (அவர்களின் கிறிஸ்தவ மதத்தின் காரணமாக இல்லை) வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டாலும், அவர்கள் இந்தச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படவில்லை.

குற்றம் செய்தவர்கள் தப்பித்துவிடுகிறார்கள் என்கிறீர்களா? அதை எப்படிச் சரி செய்வது?

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த். அவர் குற்றங்கள் செய்துவிட்டு அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமல் தப்பிக்கிற போக்கு பற்றி விளக்குவார். நமது சமூகத்தில் உள்ள இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடுவார். அந்த இடைவெளியை நிரப்பும் சட்டமே இது.

சுண்டூர் படுகொலைகள் (06.08.1991) நடந்து 2004 வரை வழக்கு விசாரணை தொடங்க முடியவில்லை. இந்தச் சட்டத்துக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளில் அதுவும் ஒன்று.

இந்தச் சட்டத்துக்கே உரிய குறைபாடுகள் ஒருபுறம். இந்தச் சட்டத்தை அமலாக்கப் பொறுப்பு தரப்பட்டுள்ள அதிகாரிகளின் குறைபாடுகள் மறுபுறம். சட்டம் சிறப்பானதாகவே இருந்தாலும், பல்வேறு கட்டங்களில் அதை அமல்படுத்தும் அதிகாரிகள் அந்தச் சட்டத்தின் உயிரையும் உணர்வையும் புரிந்துகொண்டு அமல்படுத்தவில்லை என்றால் அந்தச் சட்டத்தின் நோக்கம் வீழ்ந்துவிடும்.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது போலவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான அரசு வழக்கறிஞர்களும், புலன் விசாரணை காவல் அதிகாரிகளும் தேர்வுக் குழுக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி என்பது அவர்களின் பணி விவரங்களில் தலித் - பழங்குடி மக்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிப்பதற்காகச் செய்த பணிகள், குறிப்பாக வன்கொடுமைகளிலிருந்து இவர்களைப் பாதுகாத்ததாக இருக்க வேண்டும்.

உள்ளூர் மட்ட அதிகாரிகளிடம் உள்ள பாகுபாடான உணர்வும், உயர் அதிகாரிகளிடம் உள்ள மிதப்பான அலட்சியமும் தலித் - பழங்குடி மனித உரிமை அமைப்புகளின் ஊழியர்கள் நடைமுறையில் எதிர்கொள்கிற பிரச்சினை. இந்த அதிகாரிகள் நல்ல குணங்கள் உள்ளவர்கள்தான். ஆனால் சாதியப் பிரச்சினைகளைக் கையாளும்போது பாரபட்சமானவர்களாகிவிடுகின்றனர்.

இதன் விளைவாக விசாரணைகளும், நீதிமன்ற வழக்கும் பல ஆண்டுகளுக்கு நீள்கின்றன. உதாரணமாகச் சுண்டூர் படுகொலை விசாரணை. நீதிமன்ற அளவில் தீர்ப்பு வரவே 16 வருடங்கள் ஆனது. பீகாரில் நடந்த பதானி டோலா வன்கொடுமை வழக்கில் (1996) தீர்ப்பு 2010இல் வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் உயர் நீதிமன்றத்தில் 2012இல் அனைவரும் விடுதலை ஆகிவிட்டனர். லக்சம்பூர் - பிதே வன்கொடுமை வழக்கில் (1997) 13 ஆண்டுகள் கழித்து 2010இல் தீர்ப்பு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால், 2012இல் உயர் நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது. தமிழகத்தில் பெருமளவில் குற்றங்கள் நிகழ்ந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு 20 வருடங்களுக்குப் பிறகு வந்தது.

நாடாளுமன்றத்தின் முன்பாக வைக்கப்படுகிற வன்கொடுமைகளைப் பற்றிய ஆண்டு அறிக்கைகளில் ஆழமும் இல்லை; விமர்சன ரீதியான ஆய்வுகளும் இல்லை. பிரச்சினைகளை அடையாளம் காணவோ, தீர்க்கவோ அவை முயலவில்லை. மாநில அரசுகளின் அறிக்கைகளை விமர்சனபூர்வமாக நோக்காமல் அப்படியே எடுத்து பட்டியல் போட்டவைதான் அவை. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதில் 2001இல் 9764, 2002இல் 5841, 2003இல் 1778 வழக்குகள் என விளக்க முடியாத, நம்ப முடியாத செங்குத்தான திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதைப் பற்றி எந்த விளக்கமுமில்லை; ஆய்வும் இல்லை. இவை சரிபார்க்கப்படுவதும் இல்லை. இத்தகைய ஆண்டு அறிக்கைகளில் இருக்கிற குளறுபடிகளை நான் பட்டியலிட்டிருக்கிறேன். அவற்றை ‘தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள்: நடந்து முடிந்தவையும்; நடைபெற உள்ளவையும்’ எனும் தலைப்பில் கட்டுரையாக்கியிருக்கிறேன்.

தலித், பழங்குடி மக்களிடம் இந்தச் சட்டம் ஓரளவு பாதுகாப்பு உணர்வைத் தந்திருக்கிறது. ஆனாலும், சட்டத்தின் உள்ளார்ந்த ஆற்றலும் நோக்கமும் இன்னும் வெளியாகவில்லை. சட்டத்தின் குறைபாடுகள், விசாரணைகளின் தாமதம், மெதுவான நடைமுறை என்பதுதான் யதார்த்தம். அதனால் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கணிசமானோர் விடுதலையாகிவிடுகின்றனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எவ்வாறு பலப்படுத்துவது?

(நேர்காணலின் தொடர்ச்சி நாளை…)

பாகம் 1-சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?

பாகம் 2-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு

பாகம் 3-ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசன உரிமை

பாகம் 4-ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு!

பாகம் 5-அரசாங்கங்களும் ஊடகங்களும் தலித் பிரச்சினையை எப்படி அணுகுகின்றன?

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon