மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

குற்றாலம் வரும் வட மாகாண முதல்வர்!

குற்றாலம் வரும் வட மாகாண முதல்வர்!

பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இன்று குற்றாலம் வரவுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திலுள்ள குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நூல் வெளியிட்டு விழா மற்றும் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தும் விழா இன்று (ஏப்ரல் 14) நடைபெறுகிறது. இதை தாம்பரத்தில் செயல்பட்டுவரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் பானுமதி வெளியிட, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் நீலாவதி பெற்றுக்கொள்கிறார். விழாவுக்குத் தலைமை விருந்தினராக இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்கிறார்.

ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்துள்ள வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் குற்றாலம் நிகழ்ச்சியை முடித்த பிறகு, நெல்லையை அடுத்த கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் இன்று மாலை வழிபாடு செய்ய உள்ளார். அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் அரசியல் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.

இலங்கை வடக்கு மாகாணத்தின் ஆட்சிக்காலம் இன்னும் ஐந்து மாதங்களுக்குள் முடிவடையவுள்ளது. இதையடுத்து விக்னேஸ்வரன் மீண்டும் முதல்வராவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் அவர் நரசிம்மர் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon