மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

தனியார் வங்கிகளைக் கரைசேர்க்க ஆலோசனை!

தனியார் வங்கிகளைக் கரைசேர்க்க ஆலோசனை!

நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் தனியார் துறை வங்கிகளைத் தேசியமயமாக்க இதுதான் சரியான சமயம் என பொதுத் துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் ஆலோசனை தெரிவித்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் கடுமையான வாராக் கடன் பிரச்சினையில் தவித்து வருகின்றன. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கியில் வீடியோகான் நிறுவனர் பெற்ற ரூ.3,250 கோடி கடனில் சர்ச்சை ஏற்பட்டதால் அவ்வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, ரிசர்வ் வங்கியிடம் வாராக் கடன் விவரங்களைக் குறைத்துத் தெரிவித்ததாக அவ்வங்கி மீது எழுந்த புகாரில் அதன் தலைமைச் செயலதிகாரியான சிக்கா ஷர்மா பதவி விலக வலியுறுத்தப்பட்டுள்ளார். ஒருபுறம் பொதுத் துறை வங்கிகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் சூழலில் தனியார் துறை வங்கிகளும் பல்வேறு சர்ச்சைகளுக்குத் தொடர்ந்து உள்ளாகி வருகின்றன. விதிமுறை மீறல்களுக்காக அபராதமும் அதிகளவில் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பின் இணைப் பொதுச் செயலாளரான ரவீந்தர் குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “தனியார் வங்கிகளைத் தேசியமயமாக்க இதுதான் சரியான நேரம். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டால் அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதோடு, வேளாண் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பங்களிப்பை வழங்க இயலும். பெரும்பாலான தனியார் வங்கிகளின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களே கொண்டுள்ளனர். எனவே வங்கி வளர்ச்சியின் பலன்களையும் அவர்களே பெற்றுக்கொள்கின்றனர்” என்றார்.

அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளரான சி.ஹெச்.வெங்கடாசலம் கூறுகையில், “ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் ஆகிய இரு வங்கிகளும் இணைந்து மக்களின் டெபாசிட் பணம் சுமார் ரூ.9 லட்சம் கோடியை வைத்துள்ளன. நாம் அந்தப் பொதுமக்கள் பணத்தைப் பத்திரமாகக் காக்க வேண்டிய தேவை உள்ளது. அவ்வங்கிகள் முன்பு கார்ப்பரேட் ஆளுமை குறித்துப் பெருமைப்படக் கூறிக்கொண்டிருந்தன. ஐசிஐசிஐ வங்கியானது ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகக் கூறியது. ஆனால், இப்போது என்னவாயிற்று?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon