மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

38 ஆண்டுகளுக்குப் பின்னர்!

38 ஆண்டுகளுக்குப் பின்னர்!

இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தரவரிசையில் முதலிடம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் தொடரில் இந்திய பேட்மிண்டன் அணி சிறப்பாக விளையாடி குழு பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்றுவரும் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரணாய் இருவரும் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். அதேபோல் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து இருவரும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி நேற்று நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் வீரர் ஜின் ரேய் ரையனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற நான்கு தொடர்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஒரே வருடத்தில் நான்கு தொடர்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல் நடைபெற்றுவரும் காமன்வெல்த் தொடரில் அவர் குழு பேட்மிண்டன் பிரிவிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணி தங்கப்பதக்கம் பெற உதவினார். இதனால் புள்ளிகள் அதிகம் பெற்ற ஸ்ரீகாந்த் உலக பேட்மிண்டன் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.

கடந்த 1980ஆம் ஆண்டில் பிரகாஷ் படுகோன் என்ற இந்திய வீரர் இதற்கு முன்னதாக முதலிடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீகாந்த் கிடாம்பி இந்த பெருமையைப் பெற்றுள்ளார். டென்மார்க் வீரர் விக்டர் இரண்டாவது இடத்திலும், கொரிய வீரர் சன் வான் ஹோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது