மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

காடுவெட்டி குருவை நலம் விசாரித்த ராமதாஸ்

காடுவெட்டி குருவை நலம் விசாரித்த ராமதாஸ்

உடல்நலப் பாதிப்பு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காடுவெட்டி குருவை, ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவரான காடுவெட்டி குரு கடந்த சில மாதங்களாகவே, நுரையீரல் காற்றுப்பை திசுக்கள் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த மார்ச் 5ஆம் தேதி அவரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல் அன்புமணி ராமதாஸும் குருவைச் சந்தித்து பேசினார். இந்த நிலையில், அவரது உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை ராமதாஸ் மீண்டும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 13) தனது முகநூலில், “குருவை எனது மூத்த மகனாகவே நான் கருதுகிறேன். அவரை நானும், மருத்துவர் அன்புமணி ராமதாஸும் நேற்று காலை மற்றும் மாலையும் அதைத் தொடர்ந்து இன்று காலையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் மருத்துவம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிப்பதற்காக நானும், அன்புமணி ராமதாஸும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குருவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளைத் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நோய்ப் பிரிவின் தலைவரும், பேராசிரியருமான சி.ஜி. கில்னானி (Prof. G.C. Khilnani), அந்தத் துறையின் முன்னாள் தலைவரும், எய்ம்ஸ் இயக்குநருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா (Prof. Randeep Guleria) ஆகியோரிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் வழங்கி அவருக்கு வழங்க வேண்டிய மருத்துவம் குறித்து ஆலோசனைகளைப் பெற்று அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்குத் தெரிவித்தார்.

குருவை இயல்புநிலைக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும். இதற்குப் பொருளாதாரம் உள்ளிட்ட எதுவும் தடையாக இருக்காது. எனது அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான, எனது மூத்த பிள்ளையைப் போன்று நான் கருதும் குரு வெகு விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று நம்முடன் இணைந்து பணியாற்றுவார் என்று முழுமையாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon