மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

முறைகேடான மணல் குவாரிகள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

முறைகேடான மணல் குவாரிகள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

தமிழகத்தில் முறைகேடாக மணல் குவாரிகள் நடைபெறுவதைத் தடுக்க புதிய பத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மலேசிய மணலை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றமும் அந்த உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது.

இந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மணல் குவாரிகளை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது.

இதையடுத்து நேற்று (ஏப்ரல் 13) உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அப்போது அவர், “தமிழகத்தில் முறைகேடாக மணல் குவாரிகள் நடத்தப்படுவதைத் தடுக்க புதிய பத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மலேசிய மணலை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது. மலேசிய மணலை கேரளாவுக்கு தரை வழியாகக் கொண்டு செல்லவும் அனுமதிக்க முடியாது” என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி மதன் பி.லோகூர், விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில், கடலூர் அருகே தென்பெண்ணையாற்றில் வான்பாக்கம், அழகியநத்தம், திருக்கண்டேஸ்வரம் ஆகிய கிராமங்களிலும், வெள்ளாற்றில் திட்டக்குடி அருகே தி.இளமங்களம் கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றில் காட்டுமன்னார்கோவில் வட்டம் குஞ்சமேடு கிராமத்திலும் மணல் குவாரிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த குவாரிகளுக்கு மாநில அளவிலான சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon