மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: மனிதனின் ஏக்கம் ஏன் தணிவதே இல்லை?

சிறப்புக் கட்டுரை: மனிதனின் ஏக்கம் ஏன் தணிவதே இல்லை?

சத்குரு ஜகி வாசுதேவ்

மனித வாழ்க்கையில் அடிப்படையாக ஓர் ஏக்கம் எப்போதும் இழையோடுவதைப் பார்க்க முடியும். ஆனால், அந்த ஏக்கம் என்ன என்பதும் அதை எப்படி அணுகுவது என்பதும் பலருக்கும் புரிவதில்லை! ‘ஆசை’ எனும் மாயையிலிருந்து அடிப்படை ஏக்கத்தை நோக்கிச் செல்வது குறித்து சத்குரு பேசுகிறார்.

வாழ்வில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நாம் நினைப்பதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, நம் ஆசை. ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வில் நிறைவேற்றிக் கொள்வதெற்கென்று ஆசைகள் இருக்கும். மற்றொன்று, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இயல்பான ஏக்கம். இந்த ஏக்கம் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. ஆன்மிகம் நடப்பது ஆசையால் அல்ல; இந்த இயற்கையான ஏக்கத்தால். இந்த ஏக்கத்துக்கு உள்ள ஒரு முக்கியக் குணம் என்னவென்றால் வெறும் ஏக்க உணர்வேகூட ஒரு தித்திப்பான அனுபவமாக இருக்கும். ஒருவர் ‘நான் காதலில் இருக்கிறேன்’ என்று சொன்னால் ‘நான் ஏக்கத்தில் இருக்கிறேன்’ என்றுதான் பொருள். அப்படி இருப்பதே காதலில் இருப்பவர்களுக்கு ஓர் இனிமையான அனுபவத்தைத் தருகிறது. அது ஒரு தித்திப்பான ஏக்கம். இந்த ஏக்கம் என்பது வாழ்வின் இயல்பு. இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கை என்பதே ஏக்கம்தான். அந்த ஏக்கம் இல்லாமல், இங்கே வாழ்வதற்கு அர்த்தம் இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உள்ளிருக்கும் இந்தச் சக்திவாய்ந்த ஏக்கத்தோடு தொடர்பில் இல்லாவிட்டால், வாழ்வதற்கு எவ்விதக் காரணமும் இருக்காது. இந்த ஏக்கம் இல்லாவிட்டால், ‘அடுத்த நாள் காலை’ என்பது ஆவலுடன் எதிர்பார்க்கக் கூடிய விஷயமாக இருக்காது. வாழ்வின் அடிப்படையும், வாழ்வின் சாரமும் இந்த ஏக்கம்தான்.

அந்த அடிப்படை ஏக்கம் எதற்காகவும் அல்லது யாருக்காகவும் அல்ல; அது வெறுமனே ஓர் ஏக்கம். அந்த ஏக்கம் ‘உங்களை’யும்விட மிகப் பெரியதானது. இந்த உடல், தன்னில் அடக்கி வைக்கமுடியாத ஏக்கம் அது. தன் தந்திரங்களால் மனமும்கூட ஏமாற்ற முடியாத ஏக்கம் அது. இந்த ஏக்கம் எத்தனை பெரியது எனில், யாரும் அதை நிறைவேற்ற முடியும் என்று நினைப்பதுகூட இல்லை. காரணம், அது அவர்களையும் விடப் பெரியது. இந்த ஏக்கத்தோடு வாழ்ந்திருப்பதே ஓர் அழகான அனுபவம். காதல் என்றாலும், பக்தி என்றாலும், தியானம் என்றாலும், அவையெல்லாம் இந்த அடிப்படையான ஏக்கத்தோடு முழுவதுமாக ஐக்கியமாவதைத்தான் குறிக்கின்றன. ஏனெனில், வாழ்வு என்பதே இந்த ஏக்கம்தான்.

இவ்வுலகின் நலிவடைந்த நாடுகளைவிட, செல்வச் செழிப்போடு இருக்கும் முழு வளர்ச்சி பெற்ற நாடுகளே அதிகக் கவலையில் உழல்கின்றன. அடுத்தவேளை உணவு கிடைக்குமா, கிடைக்காதா என்ற நிலையில் இருப்பவர்கள்தான் கவலையில் உழல வேண்டும். ஆனால், நிதர்சனம் அதுவல்ல. நன்றாக உண்டு வாழ்பவர்கள்தான் அதிகமாகக் கவலையில் உழல்கிறார்கள். இதற்குக் காரணம், வாழ்வென்றால் என்னவென்று புரியாமல், வாழ்வதற்கு முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. சிறுவயதில், ‘உங்களுடையது’ என்று ஒன்றுமே இருக்கவில்லை, என்றாலும் நீங்கள் நன்றாகவே வாழ்ந்தீர்கள். ஒரு பேச்சுக்கு உங்களின் இந்தச் சிறு வயதை, அதாவது ‘என்னுடையது’ என்று உங்களிடம் எதுவும் இல்லாத வயதை, ‘ஏழ்மைக் காலம்’ என்று வைத்துக்கொள்வோம். ஏனெனில் அந்த வயதில் உண்மையில் உங்களுக்கென்று சொந்தமாக ஏதும் இல்லை. ஆனால், உங்களுக்கென்று ஒரு வயது வந்தபோது, நீங்களும் சில பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கியபோது உங்களுக்குள் கவலைகள் ஆரம்பித்தன. அப்படியென்றால், பொருள் வளம் பெறுவது தவறா? நிச்சயமாக இல்லை. செல்வச்செழிப்பு என்பது வரம்தான். ஆனால், வரத்தையும் சாபமாக மாற்றிக்கொள்வதில் நாம் கைதேர்ந்த வல்லுநர்களாக இருக்கும்போது, செல்வம் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

எதைக் கொடுத்தாலும், அதை நீங்கள் சாபமாக மாற்றிக்கொள்கிறீர்கள். ஏனென்றால், உங்களுக்குள் இருக்கும் வாழ்வின் அடிப்படை ஏக்கத்தில் இருந்து விலகி, ஆசைகளால் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள். ஆசைகளால் செலுத்தப்படும்போது, கவலைதான் உங்கள் நிலையாக இருக்கும். இக்கவலையைத் தொடர்ந்து நீங்கள் உருவாக்கிக்கொண்டே இருந்தால், நீங்கள் பாதிப்படையும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாதிப்பு எப்படியும் வரும். ஆசையின் வலையில் சிக்கினால், வாழ்வின் அடிப்படை ஏக்கத்தோடு ஒன்றியிருப்பதை விட்டுவிட்டு, இன்னும் ‘கொஞ்சம் அதிகமாக’ இருக்கவே விரும்புவீர்கள். ஆனால் வாழ்வின் அடிப்படை ஏக்கமோ, எல்லையற்றது கிடைக்கும்வரை தணியாது. அதனால் இந்த அடிப்படை ஏக்கத்தோடு ஒன்றியிருந்தால், நீங்கள் இயல்பிலேயே ஆன்மிகப் பாதையில்தான் இருப்பீர்கள்.

ஆனால், இப்போதிருக்கும் பிரச்சினை, சமூகத்தின் சிந்தனையால் வளர்க்கப்பட்ட நீங்கள், பெரிய கார் ஒன்றை வாங்கிவிட்டால், அந்த ஏக்கம் தணிந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். ஆசைகள் எல்லாம் உருவாக்கப்படுபவை. உருவாக்கப்பட்டவற்றோடு கொஞ்சம் விளையாடுவதில் தவறில்லை. ஆனால், அதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டால், படுகுழியை நோக்கித்தான் செல்வீர்கள். சுற்றுச்சூழல் சீர்கேடும், பொருளாதாரச் சரிவும்தான் படுகுழி என்று எண்ண வேண்டாம். ‘ஆனந்தமாக வாழ்வது எப்படி, சந்தோஷமாக இருப்பது எப்படி’ என்றே தெரியவில்லை என்றால், நீங்கள் படுகுழியில் இருப்பதாகத்தானே பொருள்?

உங்கள் ஆசைகள் வாழ்வைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை முற்றிலுமாகச் சிதைத்துவிடும். ஏனெனில், உங்களைச் சுற்றி பற்பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில், மக்கள் செய்யும் வெவ்வேறு விஷயங்கள் உங்களைக் கவர்வதாக இருக்கும். அதையே நீங்களும் செய்ய முற்படுவீர்கள். இப்படியே அது, இது என்று செய்துகொண்டே செல்கையில், வாழ்வின் அடிப்படை ஏக்கத்தைவிட்டு வெகு தொலைவு தள்ளிச்சென்றிருப்பீர்கள். ‘ஆன்மிகம்’ என்று சொல்லும்போது, இன்னுமொரு வேதாந்தமோ, பாடமோ உங்களுக்கு நாங்கள் வழங்கவில்லை. உங்கள் வாழ்வின் மையம் அல்லது வாழ்வின் அடிப்படை நோக்கி உங்கள் கவனத்தைத் திருப்புவதைப் பற்றியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த ஓர் உயிர் (உங்கள் உயிர்) அற்புதமாக இருக்க வேண்டும் என்றெண்ணித்தானே, திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, வேலைக்குச் சென்று என்று இன்னும் பற்பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இந்த விஷயம் மறக்கப்பட்டுவிட்டதே? இது மறந்து போகக் காரணம், ஆசை எனும் வலையில் சிக்கி வாழும்போது, உங்கள் ரசாயனம் முற்றிலுமாகக் குழம்பிப் போகிறது. ஆம், இந்த மாயத் தோற்றத்தின் சக்தியைக் குறைவாக மதிப்பீடு செய்யாதீர்கள்.

யோக சூத்திரத்தில் இதற்கென ஓர் உதாரணம் உண்டு. ஒரு கயிற்றை எடுத்து, ‘பாம்பு, பாம்பு’ என்று கத்திக்கொண்டு உங்கள் மீது வீசினால் படபடப்பு, பயம் போன்றவற்றின் ரசாயனங்கள் உங்களுக்குள் உருவாகும். அது உங்களுக்கு உண்மையாக நிகழ்ந்த உணர்வு, அனுபவம்தானே? இதுவே ஒரு பாம்பை, ‘இந்தக் கயிற்றைப் பிடி’ என்று சொல்லி உங்கள் கையில் கொடுத்தால், அது பாம்பு என்று தெரியவரும் வரை நீங்கள் நன்றாகத்தான் இருப்பீர்கள். இந்த ‘மாயை’யின் சக்தியையும், அது உங்கள் உடலின் ரசாயனத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மனத்தில் நீங்கள் உருவாக்கும் ஒவ்வோர் உருவமும் உங்கள் உடல் ரசாயனத்தைப் பெரும் அளவுகளில்பாதிக்கிறது. திரைப்படத்தில் தோன்றும் நிஜமற்ற உருவங்களைப் பார்த்துத் தீவிரமாகக் காதல் வயப்படும் மக்கள் தங்களைச் சுற்றி இருக்கும் நிஜ மனிதர்களிடம் சரியாகப் பேசிகூட இருக்கமாட்டார்கள். இதுதான் மாயையின் சக்தி. திரைப்படம் என்பது வெளிப்படையான மாயை. ஆனால், ஆசை என்பது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மாபெரும் மாயை. தேவையான விழிப்புணர்வை ஒருவர் வளர்த்துக்கொள்ளவில்லை எனில், நம்மிடம் இருக்கும் திறனெல்லாம் அற்புதமான வரமாக இருப்பதற்குப் பதிலாக, ஆபத்து விளைவிக்கக்கூடிய சாபமாக மாறிவிடும்.

உண்மையிலேயே அதிசயமான, அற்புதமான ஒன்றாக இருக்கும் மனம், இன்று துயரத்தை உற்பத்தி செய்யும் ஒரு கருவியாக ஆகிவிட்டது. மனிதனின் எல்லாத் துயரங்களும் இந்த மனதில்தான் உருவாக்கப்படுகிறது. அப்படி நிகழ்வதற்கு வெளித்துணை எதுவும் தேவையில்லை. ஆம், வெறுமனே ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டே உங்களை நீங்கள் பித்துப்பிடித்த நிலைக்கு அனுப்ப முடியும். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாக இருப்பதும், மகிழ்ச்சியாக இருப்பதும், பொருள்நிலை தாண்டிய பரிமாணங்களில் வாழ்வை உணர்வதும் ஒன்றும் அதிசயம் அல்ல. அவை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமானதுதான். ஆன்மிகம் என்பது நீங்கள் அசாதாரணமாக மாறுவதற்கு அல்ல; மனிதனாக இருப்பதே அசாதாரணம் என்பதை நீங்கள் உணர்வதற்காக!

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon