மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

தமிழக வீரரை வீழ்த்திய தமிழக வீரர்!

தமிழக வீரரை வீழ்த்திய தமிழக வீரர்!

மிஸ்டர் 360 டிகிரி என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நேற்றைய போட்டியிலும் அனைத்து திசைகளிலும் சுழன்று அடித்த ஏபி டீ வில்லியர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐபிஎல் 11ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தது. தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 15 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் பின்ச் அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அதே ஓவரில் யுவராஜ் சிங்கும் (4) ஆட்டமிழந்ததால் பெங்களூரு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல் (47) மற்றும் கருண் நாயர் (29) இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் அணியின் கேப்டன் அஸ்வின் (33) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் 155 ஆக உயர உதவினார். அதன் தொடர்ச்சியாக 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மெக்குல்லம் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கேப்டன் கோலியும் 21 ரன்கள் சேர்த்த நிலையில் இளம் வீரர் முன்ஜீப் பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த பெங்களூரு அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் டீ காக் ஜோடி விளையாடி ரன் சேர்த்தது. டீ காக் 45 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே ஷர்ப்ராஸ் கான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் நிலைத்து நின்று விளையாடிய ஏபி டீ வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அணியை எளிமையாக வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பெங்களூரு அணி கடைசி ஒரு ஓவரில் 5 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் விளையாடியபோது முதல் பந்திலேயே நான்கு ரன்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தார். அதன்பின்னர் மீண்டும் மூன்றாவது பந்திலும் பவுண்டரி அடித்து பெங்களூரு அணிக்கு முதல் வெற்றியை தேடித் தந்தார்.

தமிழக வீரர் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியை வீழ்த்த மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் உதவியாக இருந்தார். ஏனெனில் லோகேஷ் ராகுல் மற்றும் மார்க்கஸ் ஸ்டோனிக்ஸ் ஆகிய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சுந்தர், கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார்.

போட்டியைக் காண பஞ்சாப் அணி சார்பில் ப்ரீத்தி ஜிந்தாவும், பெங்களூரு அணிக்காக அனுஷ்கா ஷர்மாவும் வருகை தந்திருந்தனர்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon