மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

தமிழன் இப்படித்தான் பேசுவானா?: பொன்.ராதா

தமிழன் இப்படித்தான் பேசுவானா?: பொன்.ராதா

பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) தமிழகத்தில் நடந்த கறுப்புக் கொடி போராட்டங்களில் சில கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் வாந்தி எடுத்தது போல இருந்ததாகக் கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும், ஒரு தமிழன் இப்படித்தான் பேசுவானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த இரு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, நேற்று முன்தினம் தமிழகம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்துவருவதாகக் கூறி, மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டத்தைத் தமிழகமெங்கும் முன்னெடுத்தன திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள். ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது.

இந்த நிலையில், மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, பிரதமருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம், இவர்கள் தங்களது தவறுகளை மறைப்பதற்காக நடத்தியதாகத் தெரிவித்தார். தமிழகத்துக்குத் திட்டங்கள் வரக் கூடாது என்றே இந்தக் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

“1967ஆம் ஆண்டு பொய்யைச் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள். 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஏமாற்றியிருக்கின்றார்கள். தமிழை, தமிழனை வளர்க்கவில்லை; தமிழ்நாட்டுக்குத் திட்டங்களைக் கொண்டுவரவில்லை. சாதி, மத, மொழி ரீதியாக மக்களைப் பிரித்து எப்படி 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார்களோ, அதை மீண்டும் நடைமுறைப்படுத்தும் முயற்சியோடு களத்தில் இறங்கியுள்ளனர்” என்று திமுகவைச் சாடினார்.

மேலும், திமுக நாளேடான முரசொலியில் வெளியான ஒரு தகவல் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கிப் பேசினார். “கடந்த 6ஆம் தேதி வெளியான முரசொலி பத்திரிகையின் கடைசி பக்கத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர். தலித் வன்கொடுமைக்கு எதிராக இவர்கள் போராட்டம் நடத்தியதை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென போராடியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது முரசொலி. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென, ஆந்திர எம்.பிக்கள் சிலர் பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

இதில், காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு பதாகையை வைத்திருக்கிறார் திமுக எம்.பி ஒருவர். அவர், இந்தப் பதாகையை அதிமுகவினரிடம் இருந்து பெற்றுள்ளார். இன்னொரு திமுக எம்.பி கையில் அதுவும் இல்லை. இதுகுறித்து என்னிடம் இருந்த புகைப்படத்தை வைத்துதான், இதைத் தெரிந்துகொண்டேன். இந்தப் புகைப்படத்தில், வெறுப்பின் உச்சத்தில் சோனியாவும் ராகுலும் இருப்பது தெரிகிறது. இதன் மூலமாக, தொடர்ந்து மக்களை முட்டாளாக்கி வருகிறது திமுக. அக்கட்சியின் தொண்டர்களும், தமிழக மக்களும் திமுக தலைமையால் ஏமாற்றப்படுவதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார் பொன்னார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தயவுசெய்து இங்குள்ள மக்களை நிம்மதியாக வாழவைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், “எந்த காரணத்தைக் கொண்டும், எந்த விதத்திலும் தமிழகத்துக்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவர்களுடைய கணக்கு எவர் செத்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது. யார் செத்தாலும் பரவாயில்லை, நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எங்களைப் பொறுத்தவரை நினைக்கிறோம்.

பாஜக மீது கல் வீசுவதோ, மற்ற செயல்களையோ, தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் மேற்கொள்கிறார்கள். என்னய்யா தமிழ் உணர்வு, ஒரு தமிழன் இப்படித்தான் பேசுவானா? ஒரு சில தலைவர்கள் பேசியிருக்கக்கூடிய வார்த்தைகள் வாந்தி எடுத்தது போல உள்ளன. ஐபிஎல் போட்டியைக் காணச்சென்ற ஒரு சில கட்சியினர், அங்கிருந்த பெண்களைப் பார்த்து கொச்சையாகப் பேசியுள்ளனர். என் வீட்டுப்பெண்ணை அவமானப்படுத்துவதற்கு, இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?” என்று கோபமும் ஆவேசமுமாகப் பேசினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon