மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

குழந்தைகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை!

குழந்தைகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை!

‘குழந்தைகளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது’ எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள்நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிஃபா ஏழு அரக்கர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிறுமி வன்புணர்வு சம்பவம் மற்றும் கொலை குறித்து 18 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் முன்னாள் அரசு அதிகாரி ஒருவரும் இரண்டு சிறுவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், “சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்துள்ளது. இதுபோன்று பல சம்பவங்கள் என்னை வருத்தமடைய செய்திருக்கின்றன. பன்னிரண்டு வயதுக்குக் கீழுள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பரிசீலனை செய்து வருகிறோம்” என்றார்.

இந்தச் சம்பவத்துக்கு பிரபலங்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) இந்திய நுழைவு வாயிலில் மெழுகுவத்தி ஏந்தி பேரணியில் பேரணியில் ஈடுபட்டார். அதில், கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon