மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

சிறப்பு நேர்காணல்: அரசாங்கங்களும் ஊடகங்களும் தலித் பிரச்சினையை எப்படி அணுகுகின்றன?

சிறப்பு நேர்காணல்: அரசாங்கங்களும் ஊடகங்களும் தலித் பிரச்சினையை எப்படி அணுகுகின்றன?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 5

சந்திப்பு: த. நீதிராஜன்

பழங்குடி மக்களை வன்கொடுமைகள் எப்படி பாதிக்கின்றன?

பழங்குடி மக்கள் பல்வேறு வகையில் சுரண்டப்படுகின்றனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், மிகப் பெரும்பான்மையான பழங்குடிகள் தங்களின் சொந்தப் பகுதிகளில், தாங்கள் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய சூழலில் வாழ்கின்றனர். அதனால் தலித்துகள் பாதிக்கப்படுவதுபோல உடல்ரீதியான தாக்குதல்கள் அதிகமாக இல்லாமல் பாதுகாப்பான நிலையில் அவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் சமவெளிக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்களாகும்போது அவர்களும் தலித்துகள் போலவே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. பீகாரில் படாரியா என்னுமிடத்தில் ஆறு பழங்குடிப் பெண்கள் கூட்டாகப் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

பழங்குடிகளின் சொந்தப் பிரதேசங்களிலேயே அவர்கள் சில நேரம் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றனர். அவர்களைக் கொல்பவர்கள் சமூக விரோதிகள் அல்லர். காவல் துறையினர்தான் இத்தகைய கொலைகளில் இறங்குகின்றனர். தங்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும்போதோ, தங்களின் நிலங்கள் பறிபோவதை எதிர்க்கும்போதோ இத்தகைய படுகொலைகளுக்கு ஆதிவாசிகள் ஆளாகின்றனர்.

இதற்கான இரண்டு உதாரணங்கள்:

1. பீகாரில் சகிப்கன்ஞ் மாவட்டத்தில் பன்ஞ்கி என்னுமிடம் உள்ளது. தலித்துகள் பாரம்பரியமாக ஒரு குளத்தில் மீன்பிடிக்கிற உரிமையைக் கொண்டிருந்தனர். அதை உள்ளூர் அல்லாத, பழங்குடி மக்கள் அல்லாதோரின் நலன்களுக்குச் சாதகமாகக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதை எதிர்த்து 15.04.1985 அன்று மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட 15 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர்.

2. ஆந்திரப் பிரதேசம் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திர வள்ளி என்னுமிடத்தில் 1978இல் ஒரு நிலப் பிரச்சினை காரணமாக போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பழங்குடிகள் கொல்லப்பட்டனர்.

காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் இறப்பது என்பது ஒரு குற்றமாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்தச் சட்டத்துக்குச் செய்ய வேண்டிய திருத்தங்களில் அதுவும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 1992இல் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகள் மிகவும் வேதனையான உதாரணம். பழங்குடி மக்களின் உடைமைகளும் சொத்துகளும் கூட்டமாக வந்தவர்களால் சேதப்படுத்தப்பட்டன. குடிநீர்க் கிணறுகளும் சேதப்படுத்தப்பட்டன. பழங்குடி இனப் பெண்கள் கூட்டாகப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். 20 வருடங்களுக்குப் பிறகு விசாரணை நீதிமன்றம், குற்றம் செய்த வனத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 215 அதிகாரிகளைப் பல்வேறு கால அளவில் சிறைத் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு செய்துள்ள அதிகாரிகள் விஷயத்தில் தமிழக அரசாங்கம் கடுமையாக வழக்கை நடத்திட வேண்டும். பழங்குடி மக்களும் அவர்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் இதர நண்பர்களும் மேல் முறையீட்டைக் கடுமையாக எதிர்த்துச் செயலாற்ற வேண்டும். மாநில அரசாங்கமும் பழங்குடி மக்களும் அவர்களின் நண்பர்களும் தண்டனைகளை அதிகரிக்குமாறும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இன்னமும் தலித் - பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் வரலாறு தொடர்கிறது. இன்றும்கூட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனதை உருக்கும் செய்திகள் வராத நாள்கள் மிகச் சிலதான்.

அரசாங்கத்துக்குள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு எப்படி இருக்கிறது?

சட்டம் பற்றிய தத்துவக் கோட்பாட்டில் புதிதாக உருவான ஒரு கிளைதான் தலித்துகள் - பழங்குடி மக்களின் பாதுகாப்புக்கான இந்தச் சட்டம்.

இந்தியர்களின் வாழ்வுரிமையை அரசியல் சாசனத்தின் சட்டக்கூறு 21 பாதுகாக்கிறது. அந்த உரிமையைத் தலித் - பழங்குடி மக்களுக்கும் பொருந்துமாறு செய்துள்ளதே இந்தச் சட்டம். அத்தகைய பாராட்டுதலை அவ்வப்போது நாட்டின் நீதித் துறை இந்தச் சட்டத்துக்கு வழங்கியிருக்கிறது. ஆக்கபூர்வமான முறையில் இந்தச் சட்டத்துக்கு விளக்கங்களும் அளித்துள்ளன.

அதே நேரத்தில் சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தச் சட்டம் தொடர்பாக எதிர்மறையாக நடந்துகொள்கின்றனர். அந்த மாநிலங்களின் உயர் சாதிகளையோ அல்லது ஆதிக்க இடைநிலைச் சாதிகளையோ சேர்ந்த நில உடைமையாளர்களாக இந்த முதலமைச்சர்கள் இருப்பார்கள். இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் வேண்டா வெறுப்பாக மெதுவாகச் செயல்படுதல், வெற்று வார்த்தைகளைப் பேசிவிட்டுச் செயலில் எதையும் காட்டாமல் இருப்பது உள்ளிட்ட தந்திரங்களை அவர்கள் கையாள்கின்றனர்.

1990இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது முதலமைச்சர்கள் மாநாடு நடத்தினோம். சமூக நீதியின் சில குறிப்பான விவகாரங்களைப் பற்றிப் பேசுவதற்காக நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தால் கூட்டப்பட்ட கூட்டம் அது. அந்த அமைச்சகத்தின் செயலாளர் என்ற அடிப்படையில் நானும் இருந்தேன். இந்த நேரத்தில் மிகவும் மூத்தவரான ஒரு முதலமைச்சர் (ஆதிக்க உயர் சாதியைச் சேர்ந்தவர்), இது மிகவும் அபாயகரமான சட்டம்; கண்டிப்பாக இந்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என அதிரடியாகப் பேசினார். ஆதிக்க, நிலம் சொந்தமாக உள்ள, பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த இன்னொரு முதலமைச்சரும் இந்தச் சட்டத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கண்டித்து எல்லோருக்கும் முன்னால் வெளிப்படையாகப் பேசினார்.

வெளிப்படையாக எதிர்ப்பது என்பது ஒரு ரகம். மற்ற தலைவர்கள் இந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. ஆனால், பாரபட்சம் காட்டி அதைக் கொன்றுவிடுவது எனும் போக்கைக் கடைப்பிடித்தனர். இத்தகைய தலைவர்கள் பதவியில் இருக்கும்போது இந்தச் சட்டத்தை அமலாக்குவது பலவீனமடைகிறது.

மிக நல்ல, சிறப்பான மனிதர்கள்கூட, தலித் - பழங்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள தனி வகையான பாதிப்பு நிலைமைகளைப் பற்றியும், அவர்களுக்கு எதிரான பெரும் கொடுமைகளைப் பற்றியும் ஒருங்கிணைந்த முறையில் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கிறார்கள். அதற்கு மிக மிகச் சிறப்பான உதாரணம் நீதிநாயகம் வர்மா கமிட்டி அறிக்கை. மற்ற வகைகளில் அந்த அறிக்கை மிகச் சிறந்தது. கமிட்டி, அமைக்கப்பட்ட உடனேயே நான் வர்மா கமிட்டித் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதினேன். இரண்டு தலித் பெண்கள் உள்ளிட்ட மூன்று தலித் பிரதிநிதிகள் மிக விரிவான விவரங்கள் கொண்ட அறிக்கையைக் கமிட்டிக்கு அளித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக, தலித் - பழங்குடி பெண்கள், பெண் குழந்தைகளின் தனிவகையான பாதிப்புகளைப் பற்றி வர்மா கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிடத் தவறியுள்ளது. வர்மா கமிட்டியின் முடிவுகளிலோ, பரிந்துரைகளிலோ அல்லது பரிந்துரை செய்யப்பட்ட திருத்தங்களிலோ அல்லது பெண்களுக்கான கோரிக்கை சாசனத்திலோ எதிலும், தலித் பெண்களின் தனி வகையான பாதிப்புகளும் துன்பங்களும் குறிப்பிடப்படவே இல்லை.

மற்ற வகையில் நல்ல முயற்சியாகவும், நல்ல ஆவணமாகவும் அமைந்துள்ள வர்மா கமிட்டி அறிக்கையின் கரும்புள்ளியாக இது நீடிக்கிறது. வெளிப்படையாகத் தெரிகிற இந்தத் தவற்றால் தலித் - பழங்குடி மக்களுக்கும் அவர்களுக்காகப் பணியாற்றுபவர்களுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

சிவில் சமூகம், மீடியாவின் ஆதரவு இந்தச் சட்டத்துக்கு கிடைத்துத்தானே இருக்கிறது?

நான் அப்படி நினைக்கவில்லை. சிவில் சமூகம் என்பதையும் பொதுவானதாகப் பேச முடியாது. அதையும் வரையறை செய்ய வேண்டும். அதில் இருக்கிற எல்லோரும் ஒரே தன்மையானவர்கள் இல்லை. சிவில் சமூகம் என்று அழைக்கப்படுவதன் செயல் ஆற்றல் மிக்க பகுதி எப்படி இருக்கிறது? அதிலும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த, மாநகரப் பகுதிகளில் கல்வி கற்ற, உயர் சாதி மனிதர்கள்தான் அதிகம் இருக்கின்றனர்.

ஊடகத்தையும் பாருங்கள். தேசிய, ஆங்கில மின் ஊடகம் முழுவதும், தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் இருக்கிற ஆங்கிலம் அல்லாத மின்னணு ஊடகத்தில் பெரும்பாலானவர்கள் உயர் சாதியினர்தான். பத்திரிகைகள், நாளிதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான அச்சு ஊடகமும் அதே வர்க்கங்களின், சாதிகளின் பிடியில்தான் மாட்டிக்கொண்டிருக்கின்றன.

சிவில் சமூகத்தில் ஆதிக்கம் உள்ள பகுதியினர்தான் ஊடகத்திலும் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் இந்தச் சட்டத்தைப் பாகுபாட்டு உணர்வோடு அணுகுகின்றனர். தலித் - பழங்குடி மக்களின் துன்பங்களைப் பற்றியும், இந்தச் சட்டத்தின் பயன்தரக்கூடிய, ஆற்றல்மிக்க தன்மை பற்றியும் பேச இந்த ஊடகங்கள் மிகவும் குறைவான இடம் / நேரம் ஒதுக்குகின்றன. ரத்தம் சிந்தப்படுகிற ஒரு கொடூர நிகழ்வு நடந்தால், ஊடகங்கள் பரபரப்பாகின்றன. அந்தக் கொடூரத்தை நன்றாக வெளியிடுகின்றன. பிறகு அந்த வழக்குக்கு என்ன ஆனது? விசாரணை எப்படித் திசை திருப்பப்படுகிறது? சாட்சிகளும், பிழைத்திருப்பவர்களும் எப்படி மிரட்டப்படுகிறார்கள்? எப்படிக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்? இவற்றின் விளைவால் வழக்கு விசாரணைகள் எவ்வாறு முடிவே இல்லாமல் மந்தமாக நடக்கின்றன? கடைசியில் பெரும்பாலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆகின்றனர். அதைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் கவலைகொள்வதில்லை.

இதற்கான சரியான உதாரணம் கோகனாவில் நடந்த தீ வைப்பு சம்பவம் ஆகும். பெரும் எண்ணிக்கையில் திரளாக வந்து தீ வைத்தனர். அதைப் பற்றி எல்லா மின்னணு ஊடகங்களும் நன்கு செய்தி வெளியிட்டன. அதற்குப் பிறகு ஒரு பெரிய மவுனம். இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான கிரிமினல் வழக்கு அலட்சியப்படுத்தப்பட்டது. வழக்கமான காட்சிகள். முடிவாக, குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை ஆகிவிட்டார்.

சிவில் சமூகத்தில் நகர்ப்புறத்தைச் சார்ந்த, மாநகரங்களில் கல்வி கற்ற, உயர் சாதியினர் செயல்படுபவர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து உருவாகி வருபவர்கள்தான் அதிகாரத்திலும் அரசியலிலும் நிர்வாகத்திலும் இருக்கின்றனர். இவர்களிடம் மதிப்புக்குரிய நற்குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும்கூட உயர் சாதியினர் நடத்தை இவர்களிடமும் பிரதிபலிக்கிறது.

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் அமலாக்கம் ஏற்படுத்தியிருக்கிற சமூக விளைவுகள் என்ன?

(நேர்காணலின் தொடர்ச்சி நாளை…)

பாகம் 1-சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?

பாகம் 2-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு

பாகம் 3-ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசன உரிமை

பாகம் 4-ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு!

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon