மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

அரசுக்கு எதிராக போராட்டமா? - சினிமாவுக்கு எதிராக ஓர் ஆட்டம்!

அரசுக்கு எதிராக போராட்டமா? - சினிமாவுக்கு எதிராக ஓர் ஆட்டம்!

சில நடிகர்களுக்கு அரசியல் காரணங்கள், சில நடிகர்களுக்குத் தொழில்முறை காரணங்கள் என ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்பட்டபோதும், யாரும் எதிர்பாராத வகையில் பெரும்திரளாகக் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தியது தமிழ்த் திரையுலகம். தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்தப் போராட்டத்தை திசை திருப்பி, கர்நாடக மக்களின் ஆதரவையும் கன்னட ஊடகங்களின் பெரும் கவனத்தையும் பெற்று சிம்பு இந்தப் போராட்டத்தை திசை திருப்பியிருந்தாலும், அங்கு நடந்தவற்றைக் கவனிக்க தமிழக அரசு தவறவில்லை.

ஏற்கெனவே எல்லா பக்கங்களிலும் போராட்டம் நடைபெற்று தமிழகத்தை ஆளும் மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த வேளையில், தமிழ்த் திரையுலகினரும் போராட்டம் நடத்தியதால் அரசு தரப்பில் பெரும் அதிருப்தி. எனவே, தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் திரையுலக ஸ்டிரைக் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு தரப்பில் முன்னெடுக்கப்பட்ட ஏற்பாடுகள் மொத்தமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து விசாரித்தபோது, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என வாய்வழியாகக் கூறியிருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் கேட்டதன் பலனாக ஏப்ரல் 17ஆம் தேதி கூடிப் பேசலாம் எனப் பதில் கிடைத்திருக்கிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த ரஜினியின் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 12ஆம் தேதி பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டால், காலா படத்தின் ரிலீஸிலிருந்து திரையரங்கத்தைத் தொடங்கி, தியேட்டர்களை மறந்திருக்கும் மக்களை மீண்டும் கொண்டுவந்து விடலாம் எனத் தயாரிப்பாளர்கள் தரப்பு, திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு என இருபுறமும் ஒரு சிந்தனை இருந்தது. ஆனால், 17ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தைத் தள்ளிவைக்கப்பட்டதால் பத்து நாள்களில் காலா போன்ற பெரிய படத்தை ரிலீஸ் செய்வது கடினம். எனவே, தங்களுக்கு இருந்த எல்லா வழிகளையும் அரசாங்கம் அடைத்துவிட்டதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள்.

காலா தயாரிப்பு தரப்பிலிருந்து பட ரிலீஸ் குறித்த எந்த புரமோஷன் வேலையிலும் தேதி குறிப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள், ஆயிரக்கணக்கான தியேட்டர் உரிமையாளர்கள் என்பதைத் தாண்டி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சினிமா சார்ந்த கலைஞர்கள் உட்பட எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினையை, ‘ஆளும் அரசுக்கு எதிர்ப்பு’ என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்துப் பழிதீர்ப்பது அநியாயச் செயல் என முத்தரப்புப் பேச்சுவார்த்தையைத் தள்ளிவைத்த தகவல் கேட்ட அனைவரும் கூறிவருகின்றனர்.

வியாழன், 12 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon