மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

சிறப்புக் கட்டுரை: நம்மை வஞ்சிக்கிறதா நிதிக் குழு?

சிறப்புக் கட்டுரை: நம்மை வஞ்சிக்கிறதா நிதிக் குழு?

ஜெ.ஜெயரஞ்சன்

15ஆவது நிதிக் குழுவின் வரையறைகள் எவ்வாறு தங்கள் நலனுக்கு எதிரானதாக உள்ளன என்று விவாதிக்க ஏப்ரல் 10ஆம் தேதியன்று தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். இந்தக் கூட்டத்தை கேரள அரசு கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தைப் பற்றி நேராகக் குறிப்பிடாவிட்டாலும், ‘15ஆவது நிதிக் குழுவின் வரையறைகள் குறித்து மாநிலங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை; 15ஆவது நிதிக் குழுவின் வரையறைகள் நியாயமாகவும் முறையாகவும்தான் உள்ளன’ என்று ஒன்றிய நிதியமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 10ஆம் தேதியன்று நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அரசியல் சாசனப்படி மாநில பரப்பை ஆள ஓர் அரசும், இந்தியா முழுமைக்கும் ஆள ஒன்றிய அரசும் செயல்படுகின்றன. இரு அரசுகளுக்கும் பொறுப்புகளும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளுக்குப் பொறுப்புகள் கூடுதலாகவும் உரிமைகள் குறைவாகவும், ஒன்றிய அரசுக்குப் பொறுப்புகள் குறைவாகவும் உரிமைகள் கூடுதலாகவும் இருக்கின்றன என்று அரசியல் சாசனத்தை உருவாக்கும்போது, அதை உருவாக்கியவர்கள் உணர்ந்தார்கள். வரி விதிக்கும் உரிமை இதில் முக்கியமானது. மாநில அரசுகள் தங்கள் பகுதியில் உள்ள குடிமக்கள் மீது நேரடி வரியை விதிக்க முடியாது. மறைமுக வரியை மட்டும்தான் விதிக்க முடியும். ஆனால், ஒன்றிய அரசு இந்தியப் பரப்பில் வாழும் மக்கள் மீது எல்லாவிதமான வரியையும் விதிக்கலாம், மறைமுக வரி உட்பட.

இதனால் ஒன்றிய அரசு மிகப்பெரிய அளவில் வரி வருவாய் ஈட்டுகிறது. ஆனால் கல்வி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு எனப் பல மக்கள் நலம் தொடர்பான திட்டங்களும் செயல்களும் மாநில அரசின் கீழ்தான் வருகின்றன. போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல் மாநில அரசுகளுக்குப் பொறுப்புகள் மட்டும் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசு தாங்கள் வசூலிக்கும் வரி வருவாயை முழுவதுமாக வைத்துக்கொள்ள இயலாது. வரி வருவாயின் ஒரு பகுதியை மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அதை எந்த அடிப்படையில் பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிக்க நிதிக் குழு என்ற அமைப்பு அரசியலமைப்பு சட்டத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒருமுறையும் ஒரு நிதிக் குழு உருவாக்கப்படுகிறது. அடுத்துவரும் ஐந்தாண்டுகளுக்கு எதன் அடிப்படையில் நிதியைப் பகிர்ந்தளிப்பது என்கிற சூத்திரத்தை வகுப்பது இக்குழுவின் பொறுப்பாகும். எதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. குறிப்பாகப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது எல்லா மாநிலங்களுக்கும் நியாயமானதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இதன் அடிப்படையில்தான் நிதிக் குழுவுக்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியதுபோல மாநிலங்களுக்குப் பொறுப்புகள் கூடுதலாக உள்ளன. அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு மக்கள்தொகை உள்ளது என்பது ஓர் அளவுகோலாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு மாநில அரசு, தனது மாநிலத்தில் உள்ள மக்களுக்குக் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை அளிப்பதற்கு எவ்வளவு நிதி தேவை என்பதை அறிய அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை கணக்கில்கொள்ள வேண்டியுள்ளது என்பது ஒரு வாதமாகும். ஆனால், மாநிலங்களுக்கிடையேயான வளர்ச்சி என்பது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. எனவே மாநிலங்களின் வளர்ச்சியைச் சமநிலைக்குக் கொண்டுவருவதற்குப் பின்தங்கிய மாநிலங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆகையினால் ஒரு கூட்டமைப்பில் இந்த இரண்டையும் செயல்படுத்த வேண்டியது அவசியமானது என்பதுதான் பல நிபுணர்களின் கருத்தாகும். அந்தக் கருத்தைத்தான் அருண் ஜேட்லி முகநூல் பதிவில் இப்போது உறுதிபடக் கூறியுள்ளார்.

இதுவரையில் 1971 மக்கள்தொகை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 14ஆவது நிதிக் குழு 2011ஆவது மக்கள்தொகையையும் கணக்கில்கொண்டு அதற்கு 10 புள்ளி எடைகளையும், 1971 மக்கள்தொகைக்கு 17 புள்ளி எடைகளையும் வழங்கியது. இதற்கு, உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கப் பரிந்துரைத்தது. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுவதன் விளைவாக எந்த மாநிலங்களில் எல்லாம் மக்கள்தொகை கூடுதலாக உள்ளதோ அந்த மாநிலங்களுக்கு எல்லாம் நிதி கூடுதலாகப் போய் சேரும். அதேபோல பின்தங்கிய மாநிலங்களுக்கும் நிதி கூடுதலாகப் போய் சேரும். அந்தவகையில் இந்தி பேசும் மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவராததால் அவர்களின் மக்கள்தொகை பல்கிப்பெருகியுள்ளது. எனவே அவர்களுக்குத்தான் கூடுதல் நிதி போய் சேரும்.

எடுத்துக்காட்டாக, தமிழகம் மற்றும் கேரளாவின் மக்கள்தொகை 1971ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையிலான காலத்தில் 50 முதல் 60 விழுக்காடு என்றளவில் அதிகரித்துள்ள நிலையில் பீகார் போன்ற வடமாநிலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம் 150 விழுக்காடு வரையில் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தனிநபர் வருவாய் குறியீட்டிலும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதிலும் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. எனவே 2011 மக்கள்தொகையையும், மாநிலத்தின் பின்தங்கிய நிலவரத்தையும் கணக்கில்கொண்டு நிதிக் குழு நிதியைப் பகிர்ந்தளித்தால் பெரும்பான்மை நிதி வடமாநிலங்களுக்குத்தான் போய் சேரும்.

2011 மக்கள்தொகையைக் கணக்கிட்டு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு வருடந்தோறும் ஏற்படும் இழப்பு ஏறத்தாழ ரூ.10,500 கோடி வரை இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவுக்கு ரூ.7,700 கோடியும், ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.6,500 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.3,500 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.3,400 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படுமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி குறைந்தது மட்டுமின்றி, நிதிப் பங்கும் குறைந்து வருகிறது என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டுக்கு முன்பு ஒன்றிய பகுப்பு நிதியிலிருந்து 4.9 விழுக்காடு பங்கு கிடைத்து வந்தது. ஆனால் 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாட்டின் பங்கை 4 விழுக்காடாக சுருக்கிவிட்டது. இப்போது 15ஆவது நிதிக் குழு 2011 மக்கள்தொகையை மட்டுமே கணக்கில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கணக்கில்கொண்டால் தமிழ்நாட்டின் பங்கு மேலும் குறையும். இதைப் பல பொருளாதார வல்லுநர்களும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

தென்மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியற்காக நிதிக் குழு எந்தவிதமான ஊக்கத்தையும் அளிக்காதா என்ற கேள்வியும் எழுகிறது. அப்படியான ஒருநிலையில் வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோன்ற ஒரு திட்டமும் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையை 2.1 விழுக்காடு என்று வளரும் அளவில் குறைக்க முயலும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம். ஆனால், தென்மாநிலங்கள் எல்லாம் 2.1 என்ற விழுக்காட்டைவிடக் குறைவான அளவிலேயே மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் அடைந்துவிட்டன. எனவே, இதிலும் தென்மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பில்லை. இழப்புதான் மிஞ்சும்.

ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வில் 80 விழுக்காடு அளவுக்கு நிதிக் குழு சிபாரிசின் அடிப்படையில் மாநிலங்களுக்குக் கிடைக்கின்றன. இதில்தான் இப்போது இந்தச் சர்ச்சை என்பதில்லை. மீதமுள்ள 20 விழுக்காடு நிதி, திட்டங்களுக்காகவென்று குறிப்பாக மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. அந்த நிதியை மாநிலங்கள் அந்தக் குறிப்பிட்டத் திட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தலாம். இத்தகைய ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. ஏன்? ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக இதை விளக்கலாம்.

மின் வசதி இல்லாத கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு 1970ஆம் ஆண்டுவாக்கிலேயே அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்கிவிட்டது. இதுபோல ஒன்றிய அரசு செயல்படுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிலும் தென்மாநிலங்கள் முன்னதாகவே அந்த இலக்கை அடைந்து மிக முன்னேறிய நிலையில் உள்ளன. இந்தத் திட்டங்கள் யாவும் வடமாநிலங்களுக்கும், பின்தங்கிய மாநிலங்களுக்கும்தான் பயன்தரக்கூடிய வகையில் இருக்கின்றன.

இத்தகைய காரணங்கள்தான் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் பெரும் குரலாக நிதிக் குழு வரையறைகளுக்கு இப்போது எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அடிப்படையாக உள்ளது. வளர்ந்த மாநிலங்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு நிதி குறைக்கப்படுவது என்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் தென்மாநிலங்கள் இப்போது எழுப்பும் குரல். நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசுகின்றீர்களே... எங்களுக்கு நிதித் தேவைகள் இல்லையா? எங்களுடைய தேவைகள் கருகிவிட்டனவா? இனி நாங்கள் செயல்படத் தேவையில்லையா? என்பதுதான் தென்மாநில அமைச்சர்களின் பிரதானக் கேள்வியாகவுள்ளது.

‘வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்மாநிலங்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு நிதி ஆதாரத்தை எங்கிருந்து பெறுவது? கடன் பெற்றுத்தான் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், இப்போது கடன் பெறுவதற்கான வழிவகைகளையும் அடைக்கும் பணியை செய்துகொண்டிருக்கிறீர்கள்’ என்பதும் தென்மாநிலங்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

தென்மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மக்கள்நலத் திட்டங்களைப் ‘பாப்புலிஸ்ட் திட்டங்கள்’ என்று வர்ணிப்பதை வலதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 15ஆவது நிதிக் குழுவின் வரையறைகளில் இதுபோன்ற ‘பாப்புலிஸ்ட்’ திட்டங்களை மாநில அரசுகள் தவிர்ப்பதற்கு என்ன வழி வகைகளைக் கையாளலாம் என்பதையும் ஒன்றிய அரசு கேட்டுள்ளது. இதன்மூலம், ஒன்றிய அரசு பின்பற்றும் நவதாராளமயக் கொள்கைகளை அனுசரித்துப் பின்பற்றும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்துவருகிறது என்பதும் தென்மாநில அமைச்சர்களின் குற்றச்சாட்டாகும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் பதிலளிக்காமல் நிதிக் குழு நியாயமாகவும், முறையாகவும்தான் செயல்படுகிறது என்று அருண் ஜேட்லி பொதுவாகக் கூறுவது தென்மாநிலங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் துளியும் செவி சாய்க்கவில்லை என்பதைத்தான் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வளவு கூக்குரல் எழுப்பியும், அறிக்கைகள் வெளியிட்டும், ஒன்றுகூடிப் பேசியும், மாற்றுத்திட்டத்தை முன்வைத்தும்கூட ஒன்றிய அரசு தனது போக்கிலிருந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது அருண் ஜேட்லியின் பதிவிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.

அருண் ஜேட்லி ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மட்டுமல்ல, அரசியல் சாசனத்துக்குட்பட்டு இப்போது அமைக்கப்பட்டிருக்கும் 15ஆவது நிதிக் குழுவுக்கு தங்களது எண்ண ஓட்டத்தை இந்த அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்துபவராகவும் இருக்கிறார் என்றும் நாம் கொள்ளலாம். 15ஆவது நிதிக் குழுவின் தலைவராக இருக்கும் என்.கே.சிங் முன்னாள் அரசுத் துறை செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். அதுமட்டுமின்றி நிதிக் குழு தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்தச் சூழ்நிலைகள் அனைத்தையும் கணக்கில்கொண்டால், தாங்கள் ஆட்சி செய்யும் வடமாநிலங்களுக்கு பெரும் நிதியை மடைமாற்றம் செய்தவதற்கானப் பணியைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும், கால் ஊன்ற முடியாத தென்மாநிலங்களை வஞ்சிப்பதற்கான ஒரு கருவியாகவும் நிதிக் குழுவைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் நமக்குத் தெளிவாகிறது. இதுமட்டுமன்று, தாங்கள் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றாத மாநிலங்களின் குரல்வளையை நெரிக்கவும் 15ஆவது நிதிக் குழுவின் வரையறை வாயிலாக பாஜக முனைந்துள்ளது என்பது தெளிவு. எனவே தென்மாநிலங்கள் அஞ்சுவதற்கான முகாந்திரங்கள் இதில் இல்லாமல் இல்லை.

கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வியாழன், 12 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon