மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 25 மே 2020

சிறப்பு நேர்காணல்: ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு!

சிறப்பு நேர்காணல்: ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 4

சந்திப்பு: த.நீதிராஜன்

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த வன்கொடுமைகளின் தன்மைகளை விளக்கமாகச் சொல்ல முடியுமா?

நான் ஏற்கனவே நவீன காலத்தில் வன்கொடுமைகளின் ஆரம்ப வரலாற்றைச் சொல்லியிருக்கிறேன். சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில் வன்கொடுமைகளின் வரலாற்றைக் குறிப்பான சில காரணிகளோடு தொடர்புபடுத்தி புரிந்துகொள்ள முடியும். அதைக் கீழே தருகிறேன்:

குறிப்பான காரணங்களின் அடிப்படையில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளைப் பற்றிய ஆய்வு:

1. கூடுதல் கூலி கேட்டதற்காக (ஆனால், சட்டப்படியான கூலிக்கும் குறைவானதுதான்) கிளம்பிய வன்கொடுமைகள்

தமிழ்நாட்டின் கீழ் வெண்மணி கிராமத்தில் நடந்த படுகொலைகள்: தேதி: 25.12.1968

ஜம்மு காஷ்மீரில் குர்கா சிலாதியனில் நடந்த வன்கொடுமைகள்: 1985

பீகார் மாநிலத்தில் நடந்த படுகொலைகள்:

1. பெல்சி - 27.05.1979

2. பிப்ரா - 26 மற்றும் 27.02.1980

3. நான்கி - நகாவா – 1988, ஜூன் 16, 17

4. தாமுகா - ஷாக்ரிடோலி - 11.08.1988

2. கொத்தடிமைத்தனத்தோடு தொடர்புடைய வன்கொடுமைகள்

மத்தியப் பிரதேசம், மணடாசவுர் மாவட்டத்தில் பசடாஸ் மக்கள் கொல்லப்படல்- 1982

கர்நாடகா மாநிலத்தில் பெங்களூர் நகரம் அருகே உள்ள சிக்கப் பசவன உறள்ளியில் உள்ள கல் உடைக்கும் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்த தலித்துகள் மீதான வன்கொடுமைகள் - 1976

3. நிலத்தோடு தொடர்புடைய வன்கொடுமைகள்:

ஜம்மு காஷ்மீர் - ராக் 2ஆம் டாலியில் வன்கொடுமை - தேதி: 10.07.1998

பீகாரில் - படுகொலைகள்

1. போதி கயா - 08.08.1979

2. செயன்பூர் - 10.12.1978

மகாராஷ்டிரா- கயிர்லாஞ்சி - செப்டம்பர் 29, 2006.

4. குடிநீர் மற்றும் மற்ற அடிப்படை தேவைகளோடு தொடர்புடைய வன்கொடுமைகள்:

மத்தியப் பிரதேசத்தில் கச்காலில் 25.06.1985இல் நடந்த கொலைகளும் தீ வைத்தலும்.

ஹரியானா மாநிலத்தில் தியால்பூரில் 26.11.1989இல் நடந்த வன்கொடுமை

வயதான பெண்களின் இறந்த உடல்களைப் பிடித்து வைத்துக்கொண்ட சம்பவங்கள் இரண்டு.

அ. தமிழ்நாட்டில் 1982இல் கொனாலித்தில்

ஆ. ஆந்திரப் பச்சலனடகுடாவில் 1989

5. தீண்டாமை உணர்விலிருந்து எழுந்த வன்கொடுமைகள்:

1. ஜெடல்பூர், - குஜராத் -1980

2. தென்னாற்காடு - தமிழ்நாடு - 1987 செப்டம்பரிலும் 1988 ஜனவரியிலும் தென்னாற்காடு அதன் பக்கத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான குடிசைகளும்/வீடுகளும் அநேக கிராமங்களில் இடிக்கப்பட்டது.

தலித் மணமகன் குதிரையில் அமர்ந்து போனார் என்பதற்காகப் படுகொலைகள் உள்பட நடந்த இடங்கள்:

அ. கபல்டா – உத்தரப் பிரதேசம் - 09.05.1980

ஆ. மசாரி - ராஜஸ்தான் - 09.07.1989

இ. பன்வாரி – உத்தரப் பிரதேசம் - 02.06.1990

ஈ. கம்வேரர் - ராஜஸ்தானம் - 06.06.1992

குடிநீரில் தீண்டாமை, ஓதுக்கிவைத்தல் தொடர்பானவை

1. ராஜஸ்தான் திவ்ரேலி பள்ளிக்கூடம் டிசம்பர் 1983

2. கச்சூர் - மத்தியப் பிரதேசம், 25.06.1985

3. உதங்கல், கானாப்பூர், கர்நாடகா - (06.02.1988)

(தனிகிளாசில் டீ கொடுத்த விவகாரம் உள்பட)

கோயில் நுழைவு உரிமை சம்பந்தமான விவகாரங்களில் கொலைகள்:

மத்தியப் பிரதேசத்தில் உறனோடா, 1984

(இந்த வழக்கில் இருவருக்கு 11.10.1988 அன்று மரண தண்டனை வழங்கப்பட்டது. இது அரிதான சம்பவம்.)

நத்டுவாரா எனுமிடத்தில் - (ராஜஸ்தான் மாநிலம்)

23.06.1988லும் 12.07.1988 முதல் 01.11.1988ல் வேறு வேறு நாள்களிலும், மீண்டும் 2004லும்.

6. சுயமரியாதை, சமத்துவம் சம்பந்தமான தலித் மக்களின் உறுதி மற்றும் அவர்களின் கல்வி நிலை, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம், ஓர் குறிப்பிட்ட அளவு வரை தலித் மக்களின் செயல்பாடுகள் உயர்ந்து இருப்பது ஆகியவை தொடர்பான வன்கொடுமைகள்:

நில விவகாரம், கூலி போன்ற பொருளாதாரக் காரணங்கள் இல்லாத இத்தகைய விவகாரங்கள் அதிகரித்துவருகின்றன.

முன்னேற்றத்தால் வரும் ஆபத்து

இதற்கான சரியான உதாரணம் 06.08.1991இல் ஆந்திரப் பிரதேசம், குண்டூரில் உள்ள சுண்டூர் எனுமிடத்தில் எட்டு தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதாகும். அவர்களில் சிலர் நன்கு படித்தவர்களாகவும் இருந்தனர்.

ஹரியானா மாநிலம், சோனேபாத் மாவட்டம், கோகனா எனுமிடத்தில் 31.08.2005இல் 55 வீடுகள் கொளுத்தப்பட்டன. 97 வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டன. வீட்டுச் சாமான்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. எல்லா வீடுகளும் நல்ல முறையில் கட்டப்பட்டவை. இந்தச் சம்பவம் சரியானதொரு உதாரணம். இந்த நகரத்தின் மக்களில் 25 சதவீதம் பேர் வால்மீகி சாதியினர். தங்களது கடின உழைப்பாலும், ஓரளவு படிப்பாலும் தங்களது பழைய தொழிலான கையால் மலம் அள்ளுதல் உள்ளிட்ட துப்புரவுப் பணிகளைச் செய்வதை அவர்கள் நிறுத்திவிட்டனர். ஓரளவு கண்ணியமான வேலைகளுக்குச் சென்றுள்ளனர். அந்த வேலைகள் எதுவும் அரசின் இடஒதுக்கீட்டால் கிடைத்த அரசு வேலைகள் அல்ல. ஆனால் மொத்த சமுதாய மக்களும் இங்கே நன்கு கட்டப்பட்ட பக்காவான வீடுகளில் வாழ்கின்றனர்.

வால்மீகி சமூகத்தினருக்கான கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்ய ஆதிக்க உயர் சாதியினர் சில வருடங்களுக்கு முன்பாக முயன்றனர். அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதனால் உயர் சாதியினரின் எதிர்ப்பைச் சம்பாதித்தனர். உயர் சாதியைச் சேர்ந்த ஒருவரின் கொலை என்பது வால்மீகி சமூகத்தைத் தாக்க ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. ஒரு சாதியடிமையமைப்பிலான கட்டப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதன் பிறகு ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் மொத்த வால்மீகி சமூகத்தையும் தாக்கினார்கள்.

அம்பேத்கர் பெயரை வைத்ததால் வெடித்த கலவரம்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 27.07.1978 அன்று முதலமைச்சர் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதில் மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தார். அது தலித் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. பலமுறை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக அந்த அறிவிப்பு இருந்தது. அதை எதிர்த்து 01.08.1978 முதல் எட்டு, ஒன்பது நாட்களாக வன்கொடுமைகள் வெடித்தன.

தலித்துகள் சுயமரியாதையோடும், சமத்துவ உணர்வோடும் இயங்குவதை எதிர்ப்பது மற்றும் கூலி உயர்வு கோரிக்கைகள் மீதான எதிர்ப்பைத் தெரிவிப்பது என்ற விதமாக, இரண்டும் கலந்த கலவையாக அந்த வன்கொடுமைகள் வெளிப்பட்டன. மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பதை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஆதிக்க உயர் சாதியினர் நீண்ட காலமாகக் கூலிப் பிரச்சினையில் தகராறு செய்துகொண்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்கினர். மறுபக்கத்தில் படித்த தலித்துகளும் தாக்கப்பட்டனர். தலித்துகளின் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தையும் அவர்களின் கல்வி நிலையையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலித்துகள் தாக்கப்பட்டனர்.

இந்த விவரங்களை எல்லாம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ஆர்.பூலே, 'மராத்வாடா விஜயபீட நாமந்தார் விரோதி ஆர்யஷா அந்தோயன் - ஒரு அப்பியாசம்' எனும் ஆய்வு நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறித்துள்ளார். இந்த நூல் சித்தார்த் பிரகாசனால் வெளியிடப்பட்டது.

கபால்டா, கும்கர், உதம்கல், கானாப்பூர், பன்வாரி உள்ளிட்ட விவகாரங்கள், தீண்டாமை உணர்வோடு சம்பந்தப்பட்ட வன்கொடுமைகளின் கீழ் பட்டியல் இடப்பட்டிருந்தாலும், இவையும் இந்த வகையானவையே.

தலித் மக்களிடையே விழிப்புணர்வும், எதிர்ப்பும் வளரும்போது அதை ஆதிக்கச் சமூகப் பிற்போக்குவாதிகள் எதிர்க்கும்போது திரும்பவும் சுண்டூர் - கோகனா பாணியிலான வன்கொடுமைகள் நடக்க வாய்ப்பு உள்ளன.

மிகச் சமீபத்து உதாரணம் தர்மபுரியில் 07.11.2012 அன்று தலித் மக்களின் வீடுகள் பெருமளவில் எரிக்கப்பட்டன. இங்கேயும் கூடத் தலித்துகள் தங்களின் கடும் உழைப்பால் வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறி உள்ளனர். பழைய அடிமைத்தனமான வேலைகளை விட்டு வேறு வேலைகளுக்கு மாறி உள்ளனர். இதுவும், இளைய தலைமுறையினர் இடையேயான சாதிகளைக் கடந்து ஏற்படுகிற இயல்பான தொடர்புகளும் ஒருசில சாதி மறுப்புத் திருமணங்களும் அரிதாக நடைபெறும் நிலையை உருவாக்கியுள்ளது.

தலித்துகளின் மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் எரிக்கப்பட்டன. அவர்களின் சொத்துகள் அழிக்கப்பட்டன. தலைவிரித்தாடிய வன்கொடுமைத் தீயைக் கொளுத்திவிடுவதற்கான கொள்ளிக்கட்டையாகக் காதல் திருமணங்கள் அமைந்தன. தலித்-தலித் அல்லாதவர் இடையே ஒருசில காதல் திருமணங்கள் நடந்துள்ளதால் மட்டுமே வன்கொடுமைகள் நடந்தன என்பதைத் தாண்டி வெறுப்பு இன்னமும் ஆழமாய்ப் புரையோடிப் போயிருப்பதை வன்கொடுமைகள் நடந்த விதம் காட்டியது.

பழங்குடி மக்களை வன்கொடுமைகள் எப்படி பாதிக்கின்றன?

(நேர்காணலின் தொடர்ச்சி நாளை…)

பாகம் 1-சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?

பாகம் 2-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு

பாகம் 3-ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசன உரிமை

வியாழன், 12 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon