மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 13 நவ 2019

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

கலிபா அல் மாமுன் அழகான அரபுக் குதிரை ஒன்று வைத்திருந்தார்.

ஓமா அதை வாங்க ஆசைப்பட்டான்.

அதற்கு ஈடாக பல ஒட்டகங்களும், பெரும் பணமும் தருவதாகச் சொன்னான்.

எனினும் மாமுன் அதற்கு இணங்கவில்லை.

எப்படியாவது அந்தக் குதிரையை அடைய வேண்டும் என்று ஓமா முடிவு செய்தான்.

மாமுன் குதிரையில் வரும் பாதையில் அவன் அழுக்கு உடைகளுடன் குப்புற விழுந்து கிடந்தான்.

அந்த வழியாக வந்த மாமுன், இரக்கப்பட்டு அவனைத் தூக்கினார்.

ஓமா, "அய்யா,நான் பல நாள் பட்டினி. நிற்கக் கூட முடியவில்லை" என்றான்.

மாமுன் அவனைத் தூக்கி குதிரையின் மீது உட்கார வைத்தார்.

மறுகணமே குதிரையில் பறந்தான் ஓமா.

ஒரு கணம் திகைத்துப்போன கலிபா சட்டென்று சுதாரித்துக் கொண்டு ஓமாவை அழைத்தார்.

''நில் ஓமா... ஒரு கணம் நில். நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் போ.'' என்றார் உரத்த குரலில்.

குதிரையில் சென்றுகொண்டே ஓமா என்னவென்று கேட்டான்.

''உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்று எவரிடமும் சொல்லாதே. அப்படி நீ சொன்னால், ஒரு வேளை உண்மையாகவே யாராவது உடல் நலமின்றி சாலையோரம் விழுந்து கிடந்தால் கூட மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய அஞ்சுவார்கள்'' என்றார் அல் மாமுன்.

தனது குதிரை தன்னை ஏமாற்றிக் களவாடப்பட்டது என்பதைப் பற்றிக்கூட மாமுன் கலங்கவில்லை.

மக்களிடையே இதுபோன்ற செய்தி பரவினால்,மற்றவர்களுக்கு உதவு செய்பவர்களும் செய்யாமல்போய்விடக்கூடுமே என்று தான் வருந்தினார்.

நல்லவர்கள் எப்போதும் அப்படித்தான்.!

-சூபி கதை.

இப்படி ஒரு நல்ல கதையை நண்பர் மீனாட்சி சுந்தரம் அனுப்பியிருந்தார். இதுபோல நல்ல நன்னெறி கதைகள், வாழ்க்கை தத்துவம், நம்பிக்கை உரமூட்டும் செய்திகள், விழுந்தவனை தூக்கி நிறுத்தும் கதைகள் என அடுத்தவரை வாட்சப் மூலம் உற்சாகப்படுத்துவதில் வல்லவர்.

மனைவியின் உப்புமாவிற்கு பயந்து தற்காலிகமாக சவுதிக்கே சென்றுவிட்டது தனி கதை.

இத்தனை கதைகளை அனுப்பி பலரை வாட்சப் மூலம் வாழவைத்தவரை, வாட்சப்பையே அன் இன்ஸ்டால் செய்துவிட வைத்த கதை ஒன்று இருக்கிறது … அது இதுதான்.

குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்...

‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘டேனியல்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு டேனியல்!’’

‘‘சத்தியம் ஃபாதர்... இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன். சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?’’

‘‘தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’

‘‘ஓகே பாஸ்டர்!’’

டேனியல் ஆன குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு ஃபுல் பாட்டில் விஸ்கியை எடுத்து, தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்று முறை முக்கி எடுத்துக் கூறினான்...

‘‘உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவப்பட்டன. நீ பரிசுத்தமானவனாகிவிட்டாய். இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்!’

‘இவனுங்க எல்லாம் திருந்துவானுங்கன்னு நினைக்கிற வடிவேலு’… என்று கேட்டு, வாட்சப்-ஐ அன் இன்ஸ்டால் செய்துவிட்டு அமர்ந்தார் அந்த மகான் !

வியாழன், 12 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon