மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: மாட்டிறைச்சியும் அரசியல் – கலாசார சூழலும்!

சிறப்புக் கட்டுரை: மாட்டிறைச்சியும் அரசியல் – கலாசார சூழலும்!

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் எட்டாம் பகுதி இன்று வெளியாகிறது – ஆசிரியர்)

மாட்டிறைச்சி உண்பதைக் குறைத்து மதிப்பிடல்

சில வகை இறைச்சிகளை உட்கொள்வது, குறிப்பாக மாட்டிறைச்சி உட்கொள்வது குறித்த NSSO எண்ணிக்கைகள் கணிசமாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என வாதிடப் போதிய முகாந்திரங்கள் உள்ளன. இவற்றை ஆராய நாம், நுகர்வு பற்றிய NSSO ஆய்வுகளிலுந்து கிடைத்த எண்ணிக்கைகளுடன் உற்பத்தித் தரப்பிலிருந்து வரும் ஒட்டுமொத்த மதிப்பீடுகளிலிருந்து பெறப்பட்ட எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

தேசிய உற்பத்திக் கணக்கு (National Accounts Statistics/NAS) புள்ளிவிவரங்களிலிருந்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் (OECD) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகியவை கூட்டாகக் கொண்டுவரும் விவசாயக் கண்ணோட்டம் (OECD-FAO Agricultural Outlook) என்ற வெளியீட்டால் தொகுக்கப்பட்டுள்ள நிகர ஏற்றுமதிக்கான விவரங்களைக் கழிப்பதன் மூலம் பெறப்பட்ட அட்டவணை 7 இந்த மேல்-கீழ் பத்தி 1இல் தரப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்துகிறோம் . உற்பத்தித் தரப்பிலிருந்து மிச்சம் என்ற முறையில் பெறப்பட்ட நுகர்வுக்கான இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கைகள் NSSO குடும்ப நுகர்வு ஆய்விலிருந்து கிடைத்த ஒட்டுமொத்த நுகர்வு எண்ணிக்கைகளோடு (மேல்கீழ் பத்தி 2) ஒப்பிடப்படுகின்றன. மாட்டிறைச்சி விஷயத்தில் NSSO நுகர்வு ஆய்வு 2.7 மடங்கு சிறியதாக உள்ள கணிசமாகச் சிறிய மதிப்பீடு ஓன்றையே (மேல்கீழ் பத்தி 3) தருகிறது, ஆனால் கோழிக்கறி, ஆட்டுக்கறி விஷயத்தில் இந்த வேறுபாடு இதில் சரிபாதியை என்பதைக் கவனிக்கவும்.

அட்டவணை 7: வெவ்வேறு இறைச்சிகளின் ஒட்டுமொத்த நுகர்வு மதிப்பீடுகள்

நுகர்வு மதிப்பீடுகள் 1000 மெட்ரிக் டன்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. NSS-க்கான மதிப்பீடுகள் 69ஆம் சுற்று புள்ளைவிவரங்களின் மாதிரி எண்ணிக்கைக்கேற்ப அவற்றை சரிக்கட்டி அந்த ஒரிஜினல் புள்ளிவிவரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. FAO விவரங்கள் OECD-FAO விவசாயக் கண்ணோட்டம் 2016ஆம் ஆண்டு வெளியீட்டிலிருந்து பெறப்பட்டுள்ளன. "மாட்டிறைச்சி" என்றால் NSSO வில் மாட்டிறைச்சி மற்றும் எருமைமாட்டிறைச்சி, FAO வைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி மற்றும் கன்றுக்குட்டி இறைச்சி, 'மட்டன்" என்றால் NSSO விஷயத்தில் வெள்ளாட்டிறைச்சி மேட்டரும் ஆட்டிறைச்சி, FAO வைப் பொறுத்தவரை செம்மறியாட்டிறைச்சி, 'சிக்கன்' என்றால் NSSO வைப்பொறுத்தவரை கோழியிறைச்சி, FAOவைப் பொறுத்தவரை பறவை இறைச்சி.

உற்பத்தித் தரப்பிலிருந்து பெறப்படும் NAS நுகர்வு எண்ணிக்கைகளை நேரடி ஆய்வு அடிப்படையிலான NSSO நுகர்வு எண்ணிக்கைகளோடு ஒப்பிடுவதில் இன்னும் பொதுவான நன்கு அங்கீகரிக்கப்பட்ட பிரச்சினைகள் இருப்பது ஒப்புக்கொள்ளத்தக்க வகையிலே உண்மைதான். பிந்தைய எண்ணிக்கைகள் முந்தைய எண்ணிக்கைகளைவிட நுகர்வை மிகையாக மதிப்பிடுகின்றன (தத் மட்டும் இன்ன பிறர் 2016; சுந்தரம் மற்றும் டெண்டுல்கர் 2003); இருப்பினும் அத்தகைய மதிப்பீடுகளில் கூட ஒட்டுமொத்த நுகர்வு குறித்த NAS/NSSO மதிப்பீடுகளின் விகிதாச்சாரம் 1.5 மடங்கை விடச் சற்று குறைவாக உள்ளது. (டீடன் மற்றும் கோஜெல் 2005), அதாவது அட்டவணையில் கோழிக்கறி விஷயத்தில் 1.4 மடங்கு என் இருக்கும் எண்ணுக்கு நெருக்கமாக இருக்கிறது. மாட்டிறைச்சி (அல்லது பன்றியிறைச்சி) விஷயத்தில் இருப்பதுபோலன்றி இதர இரண்டு இறைச்சிகளான ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் இந்தியாவில் கலாசார - அரசியல் மற்றும் சமூகப் பிரிவு அடையாள போராட்டங்களில் மிகக்குறைவாகவே சிக்கியுள்ளன என்ற உண்மையோடு இது ஒத்துப்போகிறது. எனவே நமது பகுப்பாய்வை வெவ்வேறு இறைச்சிகளை சாப்பிடுவதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு 1.4 மடங்கு என்ற விகிதாசாரத்தை இந்த இரு மதிப்பீடுகளுக்கிடையிலான "இயல்பான" பேதமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், கோழி இறைச்சியோடு ஒப்பிடுகையில் எந்த ஒரு குறிப்பான இறைச்சி விஷயத்திலும் நிலவும் கூடுதல்பேதம் எதற்கும் ஆய்வில் குறைத்து தெரிவிக்கப்படுவதே காரணம் என்று கூறலாம். இதுதான் உண்மையென்றால், மாட்டிறைச்சி விஷயத்தில் நிலவும் கூடுதல் பேதம் 96% ஆகும். அதாவது இரண்டுக்குமிடையிலான வித்தியாசமான 2.74–1.40=1.14 என்பதை கோழிக்கறி விஷத்திலிருக்கும் விகிதாச்சாரமான 1.40 என்ற எண்ணுடன் ஒப்பிடுவதான் மூலம் கிடைக்கப்பெறும் எண். சுருங்கக் கூறினால், இயல்பான பேதத்திற்கு சரிக்கட்டியபின் பார்த்தால் NAS மதிப்பீடு NSSO மதிப்பீட்டைவிட கிட்டத்தட்ட இருமடங்காகும். இது இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கையை மக்கள்தொகையில் 14.7% ஆகத் தெரிவிக்கிறது.

மேற்குறிப்பிட்ட மதிப்பீடுகள் ஒட்டுமொத்தமான நுகர்வுக்கான மதிப்பீடுகள் என்பதை கவனிக்கவும். ஆய்வின் முடிவுகள் மாட்டிறைச்சி உண்பவரகளுக்கான எண்ணிக்கைகளாக எவ்வாறு மாறுகின்றன? NSSOவில் மாட்டிறைச்சி உண்பதில்லை எனத் தெரிவிக்கும் மாட்டிறைச்சி உண்பவர்களின் மாட்டிறைச்சி நுகர்வு NSSOவில் மாட்டிறைச்சி உண்பதாகத் தெரிவிக்கும் நபர்களின் மாட்டிறைச்சி நுகர்வுக்கு நிகராக உள்ளதென வைத்துக்கொள்வோம். அப்போது இது உண்மையிலேயே நிலவுவது சுமார் 15%, அதாவது NSSOவில் தெரியப்படுத்தப்பட்ட 7.5% ஐவிட 96% அதிகம்.

மாட்டிறைச்சிக்கெதிராகக் கலாசார - கருத்தியல்ரீதியான தடைகள் எதுவும் இல்லாத சமூகங்கள் விஷயத்தில் நாம் எதிபார்க்கக்கூடியதைவிட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மத்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகள் மிகவும் மிகக் குறைவாக இருப்பதால் அத்தகைய எண்ணிக்கை மிகவும் ஆச்சரியமளிப்பதாக இல்லை. NSSOவில் மாட்டிறைச்சி உண்பதாக தெரிவிக்கும் சிலர் மாட்டிறைச்சி உண்பதன் அளவைக் குறைவாகத் தெரிவிக்கும் பட்சத்தில்கூட அதன் விளைவாக மாட்டிறைச்சி உண்ணுதல் பற்றிய அசல் மதிப்பீடு 15% ஐவிடக் குறைவாக இருக்கும். இருப்பினும், மாட்டிறைச்சி உண்ணுதல் மற்றும் அது பற்றி தெரிவித்தல் விஷயத்தில் கலாசார - அரசியல் நிர்பந்தங்கள் நிலவுவதால் அத்தகைய நிப்பந்தங்கள் மாட்டிறைச்சி உண்ணுதலை மறுப்பதாக அதிகம் வெளிப்படுமேயன்றி மாட்டிறைச்சி உண்ணும் அளவை குறைத்து தெரிவிப்பதாக அல்ல. அதன் விளைவாக, எங்களுடைய கணிப்புபடி மாட்டிறைச்சி உண்ணுதலைத் தெரிவிப்பதையே ஒரு அபாயகரமான செயலாக ஆக்கக்கூடிய சமூக அரசியல் சூழலில் இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை 15% என்பது ஒரு நியாயமான மதிப்பீடு என்பது எங்கள் கருத்து.

கலாசார - அரசியலும் இடரீதியான வேறுபாடுகளும்

மாட்டிறைச்சி உண்பதைக் குறைவாகத் தெரிவித்தலை எடைபோட மாற்று அணுகுமுறை ஒன்றை நாங்கள் கீழே ஆராய்கிறோம். மாட்டிறைச்சி உண்ணுதலுக்கெதிரான கலாசார - அரசியல் நிர்பந்தங்கள் பிராந்தியவாரியாக வேறுபடுகின்றன; மாட்டிறைச்சி உண்ணுதல் குறித்து NSSOவில் தெரிவிக்கப்பட்டிருப்பதில் இடரீதியான வேறுபாடுகள் நிலவுவதில் இது பிரதிபலிக்கும். எனவே மாட்டிறைச்சி உண்பது குறைத்து தெரிவிப்பதில் கூட இது பிரதிபலிக்கும் என்ற கருத்திலிருந்து நாங்கள் துவங்குகின்றோம்.

கலாசார - அரசியல் நிர்பந்தங்களைக் குறிப்பாக அதிகமாக எதிகொள்ளும் இரு சமூகப் பிரிவுகளான முஸ்லிம்கள் மட்டும் SCக்கள் (தலித்துகள்) விஷயத்தை எடுத்துக்கொள்வோம். பசுக்களைக் கொன்றிருப்பதாகவும் தின்றிருப்பதாகவும் (வழக்கமாகப் பொய்யாகக்) குற்றம்சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டிருப்பவர்கள் அல்லது அடித்து நொறுக்கப்பட்டிருப்பவர்கள் இப்போதுவரை முஸ்லிம்கள் அல்லது தலித்துகள். அட்டவணை 6bயில் உள்ள NSSO வகையினங்களில் மாட்டிறைச்சியை உண்ண அதிக வாய்ப்புள்ளவர்களாக முஸ்லிம்கள் இருந்தாலும் சித்திரம் 7இல் தெரிவித்துள்ளபடி (இடதுபக்க வரைபடம்) முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதில் கணிசமான இடரீதியான வேறுபாடுகள் நிலவுகின்றன. மூன்று மாநிலங்களில் (மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளம்) முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது 50%க்கும் அதிகமாக உள்ளது. இம்மூன்று மாநிலங்களும் அதிக முஸ்லீம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இருப்பினும், முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது ராஜஸ்தானில் 7%, ஜார்க்காண்டில் 10% மட்டுமே. இவையிரண்டும் முஸ்லிம் மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்கள்.

இதேபோல, சித்திரம் 7இல் (வலது வரைபடம்) காட்டப்பட்டுள்ளபடி, SCக்கள் மத்தியிலும் மாட்டிறைச்சி உண்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களில் கணிசமான இடரீதியான வேறுபாடுகள் நிலவுகின்றன. SCக்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது (ஒருங்கிணைந்த) ஆந்திரப் பிரதேசத்தில் 22%, தமிழ்நாட்டில் 19%, கேரளத்தில் 17%. இதற்கு நேர்மாறாக, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில் 1%க்கும் குறைவு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் இது 1%இலிருந்து 2% வரை.

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை…)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் [email protected] அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் [email protected] உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: epw.in

தமிழில்: பா.சிவராமன்

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 3-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 4-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 5-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 6-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 7-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

வியாழன், 12 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon