மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: புலால் உண்ணாமையில் ஆண் – பெண் வேறுபாடு!

சிறப்புக் கட்டுரை: புலால் உண்ணாமையில் ஆண் – பெண் வேறுபாடு!

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் ஏழாம் பகுதி இன்று வெளியாகிறது – ஆசிரியர்)

அட்டவணை 5b: பாலின மற்றும் சமூகப் பிரிவுகள் வாரியாகப் புலால் உண்ணாமை (NFHS)

அட்டவணை 5c: பாலினம் மற்றும் செல்வமுடைமையில் ஐந்திலொரு பகுதிகள் (quintiles) வாரியாகப் புலால் உண்ணாமை (NFHS)

அட்டவணை 5d: தம்பதியினர் மத்தியில் புலால் உண்ணாமை

அட்டவணை 5b சமூக வகையினங்கள் வாரியாக புலால் உண்ணாமைப் பாலின இடைவெளி நிலவுவதைக் காட்டுகிறது. இவ்வனைத்து வகையினங்களிலுமே, புலால் உண்ணாமை நிலவுவது ஆண்களைவிடப் பெண்கள் மத்தியில் தொடர்ந்து அதிகமாக உள்ளது. சாதி வகையினங்களில் சுமாராக 10 விழுக்காடு புள்ளிகள் பாலின இடைவெளி நிலவுவது தொடர்கிறது. ஆனால், மத வகையினங்களில் கணிசமான வேறுபாடுகள் நிலவுகின்றன. சுமாராக 10 விழுக்காடு புள்ளி பாலின இடைவெளி நிலவுவது இந்துக்கள் விஷயத்தில் தொடர்கிறது (மக்கள்தொகைப் பிரிவுகளில் இது மிகப் பெரிய பிரிவாக இருப்பதால் இதில் ஆச்சர்யமொன்றுமில்லை). ஆனால், மற்ற மத வகையினங்கள் விஷயத்தில் இந்த அளவுக்கு வேறுபாடு நிலவவில்லை. ஜைனர்கள், புத்த மதத்தினர் மத்தியில் இந்தப் பாலின இடைவெளி சரிபாதியே. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. ஆனால், சீக்கியர் மத்தியில் அதிகமாக (34%) நிலவுகிறது. மதவிதிகளுக்கும் ஆண்மைத்தன்மைக்கும் உள்ள பொதுமை பற்றிய கேள்விகளை இது எழுப்புவதால் சீக்கியர்கள் விவகாரம் மிகவும் சுவாரஸ்யமானது. மேலும் பஞ்சாபில் இந்து – சீக்கிய குடும்பங்கள் மத்தியில் அதிக அளவு புலால் உண்ணாமை நிலவுவதால் இவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவுகளுக்கான அடிப்படைகள் (அல்லது மத மாற்ற / மாற்றத்துக்கான ஒப்பந்தங்கள்) எவ்விதம் உணவு நடைமுறைகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த இனக்குழு ஆராய்ச்சி தேவை. செறிவுமிக்க குணரீதியான ஆராய்ச்சிகளின்றி இது குறித்து நாங்கள் சொல்வதற்கு அதிகம் இல்லை.

அட்டவணை 5c, செல்வப் பின்னணி வாரியாக புலால் உண்ணாமையில் பாலின இடைவெளி நிலவுவதைக் காட்டுகிறது. இருப்பதற்குள்ளேயே மிக ஏழ்மையான ஐந்திலொரு பாகத்தவர் மத்தியில் பாலின இடைவெளி இருப்பதிலேயே மிகவும் குறைவாக உள்ளது. இருப்பதற்குள்ளேயே மிக செல்வந்தரான ஐந்திலொரு பாகத்தவரை எட்டும்வரை ஒவ்வோர் ஐந்திலொரு பாகத்தவர் விஷயத்திலும் பாலின இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பதற்குள்ளேயே மிகச் செல்வந்தரான ஐந்திலொரு பாகத்தவர் மத்தியில் இருப்பதற்குள்ளேயே மிக ஏழ்மையான ஐந்திலொரு பாகத்தவர் மத்தியில் இருப்பதைவிடப் பாலின இடைவெளி இருமடங்காக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் புலால் உண்ணாமை ஒவ்வொரு ஐந்திலொரு பாகத்தவர் விஷயத்திலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் கவனிக்கவும்.

ஆண்கள் (மற்றும் பெண்கள்) மத்தியில் புலால் உண்ணாமை அதிகரித்துக்கொண்டே செல்லச் செல்ல பாலின இடைவெளியும் அதிகரிக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது விஷயத்துடன் இது இசைவாக உள்ளது. இங்கு ஆணாதிக்க உறவுகள் ஏதோ ஒரு வகையில் பங்குவகிக்கின்றன என நாங்கள் யூகத்தின்பேரில் மட்டுமே சொல்ல முடியும். சரித்தன்மையைச் சோதிக்கும் முகமாக NFHS தம்பதியினர் புள்ளிவிவரத் தொகுப்பையும் நாங்கள் பரிசீலித்தோம். தம்பதியினரில் ஆண் - பெண் ஆகியோரிடமிருந்து தனித்தனியான தகவல்களுடன்கூடிய 40,000 குடும்பங்கள் பற்றிய தகவல் தொகுப்பு இது. இக்குடும்பங்களில் 65% தம்பதியினர் இறைச்சி உண்பவர்கள், 20% மட்டுமே புலால் உண்ணாதவர்கள் (அட்டவணை 5d). 12% விஷயங்களில் கணவன் இறைச்சி உண்பவர் ஆனால் மனைவி புலால் உண்ணாதவர். ஆனால் 3% விஷயங்களில் மட்டுமே மனைவி இறைச்சி உண்பவர், கணவன் உண்ணாதவர் என்பது சுவாரஸ்யமான விஷயம். கிட்டத்தட்ட 10 விழுக்காட்டுப் புள்ளிகள்வரை இருக்கும் இந்த வேறுபாடு, அட்டவணை 5aஇல் மதிப்பிடப்பட்ட பாலின இடைவெளியை ஒத்திருக்கிறது.

மாட்டிறைச்சி உண்ணுதல்

மாட்டிறைச்சி உண்ணுதல் பற்றிய மதிப்பீடுகளுக்கான புள்ளிவிவரத்துக்கான ஒரே ஆதாரம் NSSO மட்டுமே (இவை மாட்டிறைச்சி உண்ணுதல் எருமை மாட்டிறைச்சி உண்ணுதல் ஆகிய இரண்டும் சேர்ந்த மதிப்பீடுகள்). இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மாட்டிறைச்சி உண்பவர்கள் 7.5%. கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இது சற்றே அதிகமாக நிலவுகிறது. இது மிகவும் குறைந்த மதிப்பிடல் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கான காரணத்தைப் பின்னர் ஆராய்வோம்.

மத வகையினங்களிடையே முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களுமே மாட்டிறைச்சி உண்ண அதிக வாய்ப்பாகும் (முறையே 42% மற்றும் 27%). இருப்பதிலேயே பெரிய மத மக்கள்தொகைப் பிரிவு (இந்துக்கள்) மத்தியில் மாட்டிறைச்சி உண்பது நிலவுவது மிகக் குறைவாக உள்ளது. இந்துக்களிடையே, SCக்கள் மத்தியில் 4%. OBC க்கள் மற்றும் SC-ST-OBC அல்லாதவர்கள் போன்ற பெரும் சாதி வகையினர் மத்தியில், மாட்டிறைச்சி உட்கொள்வது இன்னும் குறைவாக (1%ஐ விடக் குறைவு) உள்ளது. OBCக்கள் மற்றும் SC-ST-OBC அல்லாதவர்கள் அனைவருமே இந்துக்கள் அல்ல. இந்தப் பிரிவினர் மத்தியிலுள்ள இந்து அல்லாதவர்கள் அதிகமாக மாட்டிறைச்சியை நுகர்வதாகத் தெரியப்படுத்தியுள்ளனர். எனவேதான் அட்டவணை 6bஇல் இந்த வகையினங்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது ஒட்டுமொத்தமாக அதிகமாக உள்ளது.

அட்டவணை 6a: மாட்டிறைச்சி உண்ணல் (%)

அட்டவணை 6b: சமூகப் பிரிவுரீதியாக மாட்டிறைச்சி உண்ணல் (%)

சித்திரம் 7: முஸ்லிம்கள் மற்றும் SCக்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது, மாநிலம் வாரியாக (NSSO)

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை...)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் [email protected] அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் [email protected] உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: epw.in

தமிழில்: பா.சிவராமன்

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 3-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 4-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 5-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 6-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

செவ்வாய், 10 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon