‘இந்தியாவின் சிமென்ட் தொழில் துறை நடப்பு நிதியாண்டில் மிக மந்தமாக 5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும்’ என்று இக்ரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘2017-18 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இயல்பு நிலைக்குத் திரும்பிய சிமென்ட் தேவை, ஜனவரி - மார்ச் காலாண்டில் இன்னும் அதிகரித்து 13.4 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வீடமைப்புத் துறையில் சிமென்ட்டுக்கான தேவை அதிகமாக இருந்தது. கிழக்கும், தெற்கு மற்றும் மேற்கு இந்தியச் சந்தைகளில் உள்கட்டுமானத் திட்டங்கள் வேகமெடுத்ததாலும் சிமென்ட்டுக்கான தேவை அதிகரித்தது. ஆனால், நடப்பு 2018-19 நிதியாண்டில் இதன் வளர்ச்சி 5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும்.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மணலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடுதான் இந்தச் சரிவுக்குக் காரணமாகும். இப்பகுதிகளில் சிமென்ட்டுக்கான தேவை குறைந்து வருகிறது. இருந்தாலும் அரசின் சாலையமைப்பு உள்கட்டுமானத் திட்டங்களாலும், அனைவருக்கும் வீடு திட்டத்தாலும் சிமென்ட் தேவை ஓரளவுக்கு மேம்பட்டு 5 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சாலை அமைப்புத் திட்டங்கள் பல போதிய நிதி இல்லாமலும், போதிய கண்காணிப்பு இல்லாமலும் மிக மந்தமாகச் செயல்பட்டு வருவதால் சிமென்ட் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.