மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஏப் 2018

சிறப்பு நேர்காணல்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசன உரிமை!

சிறப்பு நேர்காணல்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசன உரிமை!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் உரையாடல் - பகுதி 3

சந்திப்பு: த. நீதிராஜன்

(பி.எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு), ஒடுக்கப்பட்ட மக்களான தலித்துகள், பழங்குடிகள், நாடோடி ஆதிவாசிகள், குற்றப்பரம்பரை இழிவு சுமத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையோர் உள்ளிட்டோரின் நலனுக்காகப் பல திட்டங்களையும் சட்டங்களையும் உருவாக்கியவர். குறிப்பாக, தலித் மக்களுக்கான சிறப்புக் கூறு திட்டத்தை உருவாக்கியவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியவர். பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை அமலாக்கிய மண்டல் கமிஷனின் அறிக்கை செயல்பாட்டுக்கு வருவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய நேர்காணலைத் தொடராக வெளியிடுகிறோம். அவரோடு உரையாடி இந்த நேர்காணலைத் தொகுத்துள்ள த.நீதிராஜன், இதழாளர், சமூகச் செயல்பாட்டாளர். பி.எஸ்.கிருஷ்ணனின் ‘சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்’ என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தவர். வெவ்வேறு சமயங்களில் கிருஷ்ணனுடன் நீதிராஜன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இந்தத் தொடர் - ஆசிரியர்.)

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, 1989 செப்டம்பரில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவானது. ஆனால், பிரிவு 1(3)ன் கீழ் உடனடியாக அது அமலுக்கு வரவில்லை.

நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலாளர் என்ற எனது அதிகாரத்தைப் பயன்படுத்தினேன். சட்டத்தை ஜனவரி 30, 1990 அன்றே நடைமுறைக்குக் கொண்டுவர விரும்பினேன். அதற்காக மாநில அரசுகளோடு அவசர ஆலோசனைகள் செய்தேன். 20.01.1990 அன்று எல்லா மாநில அரசாங்கங்களும் கலந்துகொண்ட மாநாடு நடத்தினேன். அதன் மூலம் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தக் கட்டத்தில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் முழுமையான ஆதரவு உதவியது.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி (1980), ராஜீவ் காந்தி (1987-1989) வி.பி.சிங் (1990) ஆகியோரின் ஆதரவு எனக்குக் கிடைத்தது. கருத்துப் பரிமாற்றங்களின்போதும், மாநிலங்களுக்கு நான் சென்று வந்தபோதும் வன்கொடுமைகள் நடந்த பகுதிகளை நான் பார்வையிட்டபோதும், எனது தலையீடுகளின் திறனை வலுப்படுத்தும் வகையில் எனது பணிகளை எளிதாக்கிடும் வகையில் அப்போதைய பிரதம மந்திரிகளின் ஆணைகளை நேரடியாகப் பெற்று நான் செயல்பட்டேன்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் என்ன...?

தலித்-பழங்குடி மக்கள் மீதான அனைத்து வடிவங்களிலான குற்றங்கள், வன்முறைகளுக்கு எதிரான திறன்மிக்க சட்டப் பாதுகாப்பு இந்தச் சட்டம். அவர்களுக்கான அரசியல் சாசன உரிமை இது.

இந்தியர்களின் வாழ்வுரிமையை அரசியல் சாசனத்தின் 21ஆவது சட்டக்கூறு பாதுகாக்கிறது. தலித்-பழங்குடி மக்களின் கல்வி ரீதியான, பொருளாதார நலனை உயர்த்துதல், சமூக அநீதியில் இருந்தும் அனைத்து வடிவச் சுரண்டல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாத்தல் என்பன பற்றி சட்டக்கூறு 46 பேசுகிறதுதான். ஆனால், அரசியல் சாசனத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ள உரிமையை உண்மையாகவே நடைமுறையில் செயல்படும் உரிமையாக மாற்றிட விரிவான பிரிவுகளைக் கொண்ட குறிப்பான ஒரு சட்டம் அவசியம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அதைத்தான் சாதித்திருக்கிறது.

பட்டியல் சாதியினரும் பழங்குடி மக்களும் படிப்படியாக இந்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். அதிகாரம் அவர்கள் கைகளில் கிடைப்பதையும் அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். முழுமையாக இந்தச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்குக் கிடைக்கும்போது இந்தச் சட்டம் மேலும் அதிகத் திறன் படைத்ததாக இருக்கும்.

இந்தச் சட்டத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய பிரிவுகள் என நான் வலியுறுத்திய சில பிரிவுகள் சட்டம் அமலுக்கு வரும்போது அதில் இடம்பெறவில்லை. அந்தப் பிரிவுகள் மூலமாகவும், இந்தச் சட்டம் வந்து அமலான கடந்த 23 வருடக் காலத்தில் இதை அமலாக்கியபோது கிடைத்துள்ள அனுபவங்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள திருத்தங்களின் மூலமாகவும் இந்தச் சட்டத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் இந்தச் சட்டத்தின் கீழான தலித், பழங்குடி மக்களின் உரிமைகளை அவர்கள் பெறுவதற்கு உதவுவதில் எப்போதும் விழிப்பாகவும் செயலாற்றலுடனும் இருக்க வேண்டும். நாட்டின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை வழங்குகிற இந்தச் சட்டம் மிகவும் தேவையானது. முக்கியமானது.

வன்கொடுமைகளைச் சட்டத்தால் மட்டும் அழித்துவிட முடியுமா?

தலித், பழங்குடி மக்களுக்கு எதிராக வன்கொடுமைக் குற்றங்களைச் செய்பவர்கள் பொதுவாகக் குற்றங்களைச் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல. அவர்களில் பெரும்பாலோர் சாதாரண குடிமக்கள். சாமான்ய மனிதர்கள். ஆனால் தலித், பழங்குடி மக்கள் தங்களின் சட்ட ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் முயற்சி செய்கிறபோது, அவர்கள் சமூகக் குழுக்கள் என்ற முறையில் அசாதாரண முறையில் நடந்துகொண்டு வன்கொடுமைகளைச் செய்கின்றனர். இத்தகைய சூழலை எதிர்கொள்வதற்கு, சட்டம் என்பது மிகவும் தேவையானது என்றாலும்கூட, சட்டம் மட்டுமே போதுமானதல்ல.

மனித உரிமைகள் பற்றிய பாடத்தை நமது கல்வியின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். நமது பள்ளிகள் மனித உரிமைக் கல்வியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும். மனிதப் பண்புகளும் அரசியல் சாசனப் பண்புகளும் ஆன சமத்துவமும் சகோதரத்துவமும் பள்ளிகளில் மாணவர்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும். இத்தகைய பண்புகள் ஆசிரியர்களின் மனங்களிலும் விதைக்கப்பட வேண்டும்.

வன்கொடுமைகளை எப்போது ஒழிக்க முடியும்?

நமது சமூகத்தின் பாரம்பரியமான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படையான முரண்பாடு ஒன்று இருக்கிறது. அதை நீக்க வேண்டும். இந்திய மக்கள்தொகையில் தலித்துக்கள் சிறுபான்மையாக இருக்கின்றனர். ஆனாலும், பெரும்பாலான தலித்துகள் விவசாயக் கூலித் தொழிலாளர்களில் பெரும்பகுதியாக உள்ளனர். அத்தகைய சூழலில் வாழ வேண்டிய நிலைக்கு ஆக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பாரம்பரியமான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கும் விளைவு இது. இந்த நிலை இன்றும் பரந்த அளவில் இருக்கிறது.

மற்ற சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஆதரவு தலித்துகளுக்குக் கிடைப்பதை இந்தியச் சாதி அமைப்பு முறை தடுக்கிறது. மற்ற சாதிகளைச் சார்ந்த தொழிலாளர்களின் இயல்பான தொடர்பு என்பது அவர்களின் சாதிகளைச் சேர்ந்த அதிக அளவு நிலம் படைத்த உரிமையாளர்களை (தலித் தொழிலாளர்களை நோக்கி இருப்பதைவிட) நோக்கிக் கூடுதலாக உள்ளது.

80 சதவிகித தலித்துகள் கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். 2001 மக்கள்தொகை கணக்கின்படி, இந்தியாவில் பொதுவாக 32 சதவிகித மக்கள் நகரமயமாகி இருக்கின்றனர். ஆனால் தலித்துகளில் 20 சதவிகிதமானவர்களே நகரமயமாகியுள்ளனர். நகர்ப்புறப் பகுதிகளில்கூட கையால் மலம் அள்ளுதல், அமைப்பு சாரா தொழில்கள், தினக்கூலி உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவோரில் கணிசமாக தலித்துகள் உள்ளனர். தலித்துகள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் இத்தகைய தொழில்களில் ஈடுபடுவோரில் கணிசமாக உள்ளனர்.

நில உரிமை இல்லாத விவசாயத் தொழிலாளர்களின் சாதி ஒருபுறம். நில உரிமை கொண்ட ஆதிக்க உயர் சாதிகள், ஆதிக்க இடைச் சாதிகள் மறுபுறம் என்ற வகையில் நிலம் படைத்தவர்களின் சாதிகள் மறுபுறம். இந்த சாதிகள் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள முரண்பாடான நிலைதான் இந்தியக் கிராமத்தின் சூழ்நிலை.

ஏதாவது ஒரு தீப்பொறி பட்டாலும் வெடித்துவிடக் கூடிய சமூக நிலைமை இது.

இந்தச் சூழலை நம்மால் சரி செய்ய முடியும். போதுமான அளவு நிலமில்லாதவர்கள் உள்ளிட்ட எல்லாக் கிராமப்புற நிலம் இல்லாத தலித்துகளுக்கும் நிலம் அளிக்க வேண்டும். அனைத்துக் கிராமப்புற நிலம் இல்லாத பழங்குடியினருக்கும் நிலம் அளிக்க வேண்டும். அவர்களோடு சேர்த்து விவசாயக் கூலிகளாக உள்ள பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் நிலம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நிலம் வழங்குவதன் மூலம்தான் நிலத்தின் மீதான உரிமைக்கும், நிலத்தின் மீதான உழைப்புக்கும் இடையே காலகாலமாக இருந்துவருகின்ற சாதி அடிப்படையிலான முரண்பாட்டை நீக்க முடியும்.

இதோடு இணைத்து தலித், பழங்குடி மக்களின் நிலங்களுக்கு நீர்ப்பாசனமும் இதர தேவைகளும் செய்யப்பட்டு, உயர் மதிப்பு மிக்க, பல வகையான பயிர்களை விளைவிக்கக்கூடிய அளவுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும்.

இவை சுதந்திரத்துக்கு முந்திய தேசிய இயக்கத்தில் பேசப்பட்டு நிறைவேற்றுவதாக உறுதி எடுத்துக்கொண்டவைதான். 2004இல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உறுதியேற்றவைதான். ஆனால் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பவை.

இவை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மிகவும் அவசியமானவை. .

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த வன்கொடுமைகளின் தன்மைகளை விளக்கமாகச் சொல்ல முடியுமா?

(நேர்காணலின் தொடர்ச்சி நாளை...)

பாகம் 1-சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?

பாகம் 2-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 11 ஏப் 2018