மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

சண்டக்கோழி ஒரு பிளாஷ் பேக்!

சண்டக்கோழி ஒரு பிளாஷ் பேக்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 39

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் பிலிம் பெட்டி டெலிவரிபாய் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சங்கம், யூனியன், கூட்டமைப்பு என பல பெயர்களில் அமைப்புகள் உண்டு. சில அமைப்புகள் இயங்காமல் பெயரளவில் பெருமைக்கு இருப்பதும் சினிமா துறையில் உண்டு.

சினிமாவில் உற்பத்தியாளர், அதனை விநியோகம் செய்யக் கூடிய டீலர், அவரிடம் வாங்கி நுகர்வோரிடம் விற்பனை செய்யும் தியேட்டர் இந்த மூன்று அமைப்புகளும் தமிழ் சினிமாவில் பலம் பொருந்திய அமைப்புகளாக நேர்மைமிக்க நபர்கள் பொறுப்புகளில் இருந்தவரை செயல்பட்டு வந்தன. தனது நலனுக்காக அமைப்புகளை பயன்படுத்தி சுய லாபமடைய நிர்வாகிகள் அமைப்புகளை பயன்படுத்த தொடங்கிய போது சர்வாதிகாரம் தலைதூக்கியது. உறுப்பினர்களுக்கான ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்பட்ட போது அமைப்புகள் பலவீனமடையத் தொடங்கின. அல்லது தலைமையே அமைப்புகளை பலவீனப்படுத்தியதும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. அதனுடைய பலனை தமிழ் திரையுலகம் இன்று சந்தித்து வருகிறது.

எந்த வித திட்டமிடல், தொலைநோக்கு பார்வையும் இன்றி தொடங்கப்பட்ட வேலை நிறுத்தபோராட்டம் சம்பந்தமின்றி பயணித்து வருகிறது. இதனை தர்க்கரீதியாக அல்லது தொழில் ரீதியாக எதிர்த்து போராடவும், நேர்மையான விவாதத்தை முன்வைக்கவும் முடியாமல் தடுமாறுகிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைமை. இவர்களுக்கு துணை நிற்க வேண்டிய விநியோகஸ்தர்கள் சங்கம் காற்று போன பலூனாக கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியவில்லை. பெரும்பான்மையான உற்பத்தியாளன் டீலராக இருப்பதால் விற்பனையாளர் சிலரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உற்பத்தியாளர் மெனக்கெட வில்லை, சிரமப்படவில்லை. இப்படியொரு இடியாப்பசிக்கலில் டீலரும் விற்பனையாளனும் சிக்கி கொண்டு தங்களை நம்பி இருந்த உற்பத்தியாளனை சமாளிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஜனநாயகத் தன்மையுடன் இயங்கி வந்த விநியோகஸ்தர்கள் சங்கத்தையும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தையும் பலவீனப்படுத்தி தங்கள் கை பாவைகளாக மாற்றியது தான். அப்படியொரு சம்பவத்தை வேலூரில் சீனிவாசன் அரங்கேற்றிய கதை தான் இது...

தமிழ்நாடு முழுவதும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்கள் பலம் பொருந்திய அமைப்புகளாக செயல்பட்டு வந்த 2005 காலகட்டம். இன்றைய தமிழ் சினிமா வேலை நிறுத்தத்தை முன் நின்று நடத்தி வரும் நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி பட பஞ்சாயத்தால் வேலூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் விரிசல் கண்டது. சங்கத்தின் தலைவராக பாலாஜியும், செயலாளராக டில்லிபாபுவும் பொறுப்பில் இருந்த போது "சண்டக்கோழி " படத்துக்கு ரெட் போடப்பட்டிருந்தது. ஆட்டோகிராப் பட பஞ்சாயத்தில் சிவகுமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனித்து இயங்க தொடங்கிய சீனிவாசன் விநியோகஸ்தர்கள் சங்கம் விதித்திருந்த சண்டக்கோழி படத்தை சீனிவாசன் வேலூர் பகுதி விநியோக உரிமையை வாங்கினார். இதனால் சீனிவாசன் விநியோக உரிமை வாங்கிய படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க தடை விதிக்க சங்கம் முடிவு எடுத்தது. இதனை எதிர்பாராத சீனிவாசன் சென்னை விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் சிந்தாமணி முருகேஷன் உதவியுடன் சமரசம் செய்து "சண்டக்கோழி" படத்தை ரீலீஸ் செய்தார். அடுத்து நடைபெற்ற சங்கத் தேர்தலில் பொருளாளர் பொறுப்புக்கு சீனிவாசன் போட்டியிட்டார். அவரது வானளாவிய வாக்குறுதிகள் வாக்குகளை குவித்து வெற்றி பெற வைத்தது. அடுத்து அவர் ஆடிய அரசியல் ஆட்டம் எவரும் எதிர்பாராதது. சங்கத் தலைவர் பாலாஜி, செயலாளர் டில்லி பாபு இருவரையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சீனிவாசன் சங்க செயற்குழு கூட்டத்தில் அட்ஹாக் கமிட்டி அமைக்கும் முயற்சியில் ஈடுபட வாக்குவாதம் ஏற்பட்டு சங்கத்தில் இருந்து நீக்கப்படுகிறார்.

தன்னை தலைவராக அறிவித்துவேலூர், திருவண்ணாமலை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தை தொடங்குகிறார். தனக்கு இணக்கமான 35 விநியோகஸ்தர்களை உறுப்பினர்களை சங்கத்தில் சேர்த்துக் கொண்டு தனி ராஜ்ஜியம் அமைத்த சீனிவாசன் விநியோகஸ்தர்கள் சங்கத்தை பலவீனப்படுத்தி நிர்மூலமாக்கினார். தான் தலைவராக இருக்க தொடங்கிய சங்கம் எந்த செயல்பாடும் இல்லாமல் அவருக்கான லெட்டர் பேடு சங்கமாக மாற்றப்பட்டது. விஷால் நடித்த சண்டக்கோழி படத்துக்காக ஒரு பாரம்பரிய அமைப்பை பலவீனப்படுத்திய சீனிவாசன் அமைத்துள்ள தியேட்டர் சிண்டிகேட் அமைப்புக்கு எதிராக சண்டக்கோழி நாயகன் விஷால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். ஒற்றை மனிதனாக இருக்கும் சீனிவாசன், அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய அமைப்பு உயிர்ப்புடன் இல்லை...

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும் மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் - ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38

செவ்வாய், 10 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon