மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

சிறப்பு நேர்காணல்: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு!

சிறப்பு நேர்காணல்: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 2

சந்திப்பு: த.நீதிராஜன்

(பி.எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு), ஒடுக்கப்பட்ட மக்களான தலித்துகள், பழங்குடிகள், நாடோடி ஆதிவாசிகள், குற்றப்பரம்பரை இழிவு சுமத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையோர் உள்ளிட்டோரின் நலனுக்காகப் பல திட்டங்களையும் சட்டங்களையும் உருவாக்கியவர். குறிப்பாக, தலித் மக்களுக்கான சிறப்புக் கூறு திட்டத்தை உருவாக்கியவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியவர். பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை அமலாக்கிய மண்டல் கமிஷனின் அறிக்கை செயல்பாட்டுக்கு வருவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய நேர்காணலைத் தொடராக வெளியிடுகிறோம். அவரோடு உரையாடி இந்த நேர்காணலைத் தொகுத்துள்ள த.நீதிராஜன், இதழாளர், சமூகச் செயல்பாட்டாளர். பி.எஸ்.கிருஷ்ணனின் ‘சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்’ என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தவர். வெவ்வேறு சமயங்களில் கிருஷ்ணனுடன் நீதிராஜன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இந்தத் தொடர் - ஆசிரியர்)

சுதந்திரத்துக்குப் பிறகான வன்கொடுமைச் சம்பவங்கள் பற்றி...

தலித்துகள் மீது செய்யப்பட்ட சாதியத் தடைகளை மீறியவர்தான் இம்மானுவேல் சேகரன். படித்த தலித் தலைவர் அவர். 1957இல் தமிழகத்தில் கொல்லப்பட்டார். இதையொட்டி வெடித்ததே முதுகுளத்தூர் கலவரங்கள். தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை அப்போதைய காமராஜர் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து ஒடுக்கியது.

நாட்டின் விடுதலைக்குப் பிறகான சமூக அடையாளங்கள் இவை.

தமிழகத்தின் கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 டிசம்பரில் பெரும்பாலும் பெண்களும் முதியோர்களும் குழந்தைகளுமாக இருந்த 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். ஆந்திராவில் காஞ்சிகச்சேர்லா எனுமிடத்தில் 1969இல் கொலைகள் நடந்தன. அதை ஒரு மத்திய அமைச்சர் நியாயப்படுத்தவும் செய்தார்.

இந்தியாவின் பல பகுதிகளில் வன்கொடுமைகள் பரந்த அளவில் வேகமாகப் பரவின. அதனால் அப்போது நாடாளுமன்றம் அதில் அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் வந்தது.

வன்கொடுமைகளை மத்திய அரசு எப்படி எதிர்கொண்டது?

இந்திய அரசுக்குத் தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்தனர். அதனால் தலித்துகள் மீதான தாக்குதல், கொலை, பாலியல் பலாத்காரம், தீ வைத்தல் ஆகியவற்றைக் கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க தலித் மக்களுக்கான அமைப்பு 1974இல் மத்திய அரசில் உருவானது. பழங்குடிகளுக்கான அமைப்பு 1981இல் ஆரம்பிக்கப்பட்டது.

1977லும் வன்கொடுமைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. அப்போதைய உள் துறை அமைச்சர் “வன்கொடுமைகள் அப்படி ஒன்றும் மற்றவர்கள் சொல்வது போலக் கவலைப்பட வேண்டிய பிரச்சினை இல்லை” என வெளிப்படையாகச் சொன்னார். நாட்டில் நடைபெறுகின்ற கொலைகளில் தலித்துகள் கொல்லப்படுவது 15 சதவிகிதம்கூட இல்லை என்றும் அவர் விசித்திரமாக வாதம் புரிந்தார். இந்திய மக்கள் தொகையில் 15 சதவிகிதமாக அப்போது தலித் மக்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நில உரிமை, தேசியச் செல்வம் உள்ளிட்டவற்றில் எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. ஆனாலும்கூட, கொல்லப்படுபவர்களில் 15 சதவிகிதம் அவர்கள் இருக்க வேண்டும் என்ற அவரது வாதம் அதிர்ச்சியானதாக இருந்தது.

அவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரால் உள் துறை அமைச்சராக நீடிக்க முடியவில்லை. பிரதமரே உள் துறையை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு வேறு ஒரு உள் துறை அமைச்சர் வந்தார். அந்த நேரத்தில் உள் துறை அமைச்சகத்துக்கு உள்ளே பட்டியல் சாதியினர் உள்ளிட்டோர் மீதான வன்கொடுமைகளைக் கண்காணிப்பதற்கென்றே இணைச் செயலாளர் அந்தஸ்தில் ஒரு பதவியை மத்திய அரசு உருவாக்கியது. அப்போது வணிகத் துறையின் (பிற்பாடு தொழில் துறையாக மாறியது) இணைச் செயலராக நான் இருந்தேன்.

உள் துறையில் புதிதாக உருவாக்கப்படுகிற அந்தப் பொறுப்புக்கு நான் வருகிறேன் என்று நானே முன்வந்து தெரிவித்தேன்.

அரசு அதிகாரி என்ற முறையில் வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்க உங்கள் முன்முயற்சிகள் என்ன?

நான் உள் துறை அமைச்சகத்தில் பதவியில் இருந்த காலத்தில் வன்கொடுமைகளைக் கண்காணிப்பதிலும் நான் கூடுதல் முன்னுரிமை எடுத்துக்கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் உள் துறை அமைச்சகத்தில் வன்கொடுமைகளை வெறுமனே பதிவு செய்வார்கள். புள்ளிவிவரங்களைச் சேகரிப்பார்கள் அவ்வளவுதான். ஒவ்வொரு வன்கொடுமைச் சம்பவத்தையும் கடைசிவரை கண்காணிக்க வேண்டும் என்ற நிலைக்கு அதை மாற்றினேன்.

பெல்சி, போதிகயா, சயின்பூர், மராத்வாடா, சிக்கபசவனஹள்ளி, இந்திரவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த வன்கொடுமைகளும் இவ்வாறே கடைசி வரை கண்காணிக்கப்பட்டன. சிறப்பு நீதிபதிகளுடன் கூடிய சிறப்பு நீதிமன்றங்கள், கவனமாகப் பரிசீலித்துத் தேர்வு செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்கள், விரைவான விசாரணைகள், தீர்ப்புகளைத் தாமதமின்றி நிறைவேற்றல் எனப் பல கட்டங்களில் கண்காணிப்பு தொடர்ந்தது. இத்தகைய முயற்சிகளுக்கு அப்போதைய உள் துறை இணை அமைச்சர் தானிக்லால் மண்டல் முழுமையான ஆதரவு அளித்தார்.

1980இல் மத்திய ஆட்சி மாறிய பிறகும் நான் எனது பொறுப்பில் தொடர்ந்தேன்.

புதிய அரசாங்கம் வந்த பிறகும் வடஇந்தியாவில் பிப்ரா, கபால்டா, ஜெட்லால்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த வன்கொடுமைகளையும் கண்காணிக்க முடிந்தது.

பெல்சியில் நடந்த வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்தது. அது உள்ளிட்டுப் பல வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகளும் தண்டனைகளும் பெற முடிந்தது. அந்த நேரத்தில் உள் துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங்கும் உள் துறை இணை அமைச்சராக இருந்த யோகேந்திர மக்வானாவும் மிகுந்த ஆதரவை அளித்தனர்.

இந்த நேரத்தில் மத்திய உள் துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதத்தை மாநில முதலமைச்சர்களுக்கும் மாநில ஆளுநர்களுக்கும் 10.03.1980 அன்று எழுதினார். அதில் வன்கொடுமைகளின் காரணம் நேர்மையான முறையில் தொடப்பட்டிருந்தது.

வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான, தண்டனை அளிப்பதற்கான, மறுவாழ்வு அளிப்பதற்கான மற்றும் இத்தகைய பணிகளைச் செய்யக்கூடிய பணியாட்களின் விவரங்கள் ஆகிய எல்லாவற்றையும் தெளிவாக வரையறை செய்வதாக அந்தக் கடிதம் இருந்தது (அந்தக் கடிதம் தற்போது மறக்கப்பட்டுவிட்டாலும், அதன் பகுதிகள்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும் அதன் விதிகளிலும் உள்ளன). பிப்ரவரி 27, 28 தேதிகளில் 1980ஆம் வருடம் பிப்ரா என்னுமிடத்தில் நடந்த வன்கொடுமைகள் ஏற்படுத்திய உணர்ச்சிகள் அடங்குவதற்கு முன்பாக நான் தயாரித்த கடிதம் அது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி...?

நாட்டில் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தன. மத்திய, மாநில அரசாங்கங்கள் வன்கொடுமைகளுக்குக் காரணமான அடிப்படையான முரண்பாடுகள், பாதிப்புகள், காரணிகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அதற்குப் பதிலாக வெளிப்படையாகத் தெரிந்த காரணங்களால் வன்கொடுமைகளைப் பற்றிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் மனநிலையே அரசாங்கத்தில் நீடித்தது. வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான, புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக அடையாளபூர்வமாகவும் மேம்போக்கானதாகவும் பிரச்சினைக்கான காரணங்களை அகற்றுவதற்குப் பதிலாக வன்கொடுமைகளால் ஏற்பட்ட வலியைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசுகளின் நடவடிக்கைகள் இருந்தன.

தலித் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மத்திய அரசுக்குத் தொடர் நெருக்கடி தந்தனர். அதனால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1987ஆம் வருடம் சுதந்திர தின விழா உரையைச் செங்கோட்டையிலிருந்து பேசும்போது, ”வன்கொடுமைகளை ஒழிப்பதற்காக, தேவையானால் தனிச் சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.

இதைக் கேட்டதுமே எனக்கு வேலை வந்துவிட்டது என உணர்ந்தேன். ஆந்திர மாநிலத்திலிருந்து டெல்லிக்கு வரவழைக்கப்பட்டேன். பட்டியல் சாதியினருக்கான சிறப்பு ஆணையராக ஆக்கப்பட்டேன். 2.10.1987 முதல் எனது பணியைத் துவக்கினேன். இந்தக் காலகட்டத்தில் உள் துறை அமைச்சகத்திலிருந்து பட்டியல் சாதியினர் நலமும் பழங்குடியினர் நலமும் தனியாகப் பிரிக்கப்பட்டு, நல்வாழ்வு அமைச்சகமாகத் தனியாக அமைக்கப்பட்டது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் உள்ளடக்கம், அதன் வடிவம் பற்றிய ஏராளமான விவாதங்கள் நடந்தன. வன்கொடுமைகளுக்கு எதிரான தனிச் சட்டம் தயார் செய்யப்படுவது நான் அதிகாரபூர்வமாகப் பணியில் இருந்த நல்வாழ்வுத் துறை அமைச்சகத்துக்குப் பிடிக்கவில்லை.

இரண்டு துறைகளையும் சேர்ந்த செயலாளர்கள் இருவரும் சிறந்த வழக்கறிஞர்கள். என்னிடம் மிக நீளமான விவாதங்களை நடத்தினர். நான் வன்கொடுமைகளின் தன்மையை அவர்களுக்கு விளக்கினேன். இந்திய தண்டனைச் சட்டத்தை இயற்றிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பட்டியல் சாதியினருக்கும் பழங்குடிகளுக்கும் மட்டுமே நடக்கக்கூடிய சிறப்புத் தன்மையான குற்றங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தனர். எனவே, இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகள் தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்குப் போதுமான தீர்வைத் தராது எனவும் விளக்கினேன்.

இத்தகைய விவாதங்களுக்குப் பிறகு, 1989 செப்டம்பரில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவானது. ஆனால், பிரிவு 1(3)ன் கீழ் உடனடியாக அது அமலுக்கு வரவில்லை.

(நேர்காணலின் தொடர்ச்சி நாளை...)

பாகம் 1-சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?

செவ்வாய், 10 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon