மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: பொருளாதார வசதியும் புலால் உண்ணாமையும்!

சிறப்புக் கட்டுரை: பொருளாதார வசதியும் புலால் உண்ணாமையும்!

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் ஆறாம் பகுதி இன்று வெளியாகிறது - ஆசிரியர்)

சித்திரம் 5: OBCக்கள் மற்றும் SCக்களின் மக்கள்தொகைக்கேற்ப அவர்கள் மத்தியில் புலால் உண்ணாமை

சித்திரம் 5a: பாலினம் மற்றும் மாநிலம் வாரியாக புலால் உண்ணாமை நிலவுதல் (NFHS)

சித்திரம் 5b: பாலினம் மற்றும் மாநிலம் வாரியாக எழுத்தறிவின்மை நிலவுதல் (2011 மக்கள்தொகையின்படி)

சித்திரம் 5இல் SCக்கள் விஷயத்தில் மக்கள்தொகை பங்குக்கும் புலால் உண்ணாமை நிலவுதலுக்குமிடையே நேரடி இணக்கம் எதுவுமில்லாமலிருப்பதும் SCக்கள் மத்தியில் நிலவும் புலால் உண்ணாமைக்கும் முற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் நிலவும் புலால் உண்ணாமைக்குமிடையே கணிசமான இடைவெளி எல்லா மாநிலங்களிலும் நிலவுவதும் SCக்கள் மத்தியில் புலால் உண்ணாமை என்பது இதர காரணிகளைப் பொறுத்தது எனக் காட்டுகின்றன. மாநிலங்களில் நிலவும் தலித் இயக்கங்களின் துடிப்புமிக்க வலிமை மற்றும் அடையாள உருவாக்கத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய அடையாளச் சின்னங்களாக இருப்பது அல்லது இல்லாமலிருப்பது ஆகிய காரணிகளாக இருக்கக்கூடும்.

நுகர்வும் பொருளாதார வசதியும்

குடும்பங்களின் பொருளாதார நிலைக்கேற்ப புலால் உண்ணாமை நிலவுவது வேறுபடுகிறதா என்னும் கேள்வி எழுகிறது. NSSO மற்றும் IHDS புள்ளிவிவரங்கள்படி புலால் உண்ணும் குடும்பங்களோடு ஒப்பிடுகையில் புலால் உண்ணாத குடும்பங்கள் அதிக வருமானத்தையும் நுகர்வையும் கொண்டுள்ளனர் என அட்டவணை 5a காட்டுகிறது (இந்த வேறுபாடுகள் புள்ளியியல் ரீதியாக முக்கியமானதாக இருந்தாலும், புள்ளியியல் சோதனை முடிவுகள் இங்கு முன்வைக்கப்படவில்லை). பொருளாதார அந்தஸ்து வகையினங்களுக்கேற்ப புலால் உண்ணாமை நிலவுகிறது என அட்டவணை 5bயில் காட்டப்பட்டிருப்பதோடு இது ஒத்துப்போகிறது. அதாவது பொருளாதார அந்தஸ்து உயர உயர புலால் உண்ணாமையும் அதிகரிக்கிறது.

இத்தகைய கண்டுபிடிப்புகள் வைத்தியநாதன் மற்றும் நாயர் (1980: 381) கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போகின்றன. இவர்கள் நீண்ட நாள்களுக்கு முன்பே, “மொத்த பிராணி புரதச்சத்தை உட்கொள்வது தலையொன்றுக்கு கிடைக்கும் அசல் வருமானத்தோடும் வெவ்வெறு புரத உணவுகளுக்கு ஒப்பீட்டளவில் எவ்வுளவு செலவாகிறது என்பதோடும் தொடர்புடையது” என்று கூறியிருந்தனர். மலிவான புரதச்சத்து (மாட்டிறைச்சி உள்பட) கிடைப்பது குறிப்பான இறைச்சி வகைகளை வாங்கி உட்கொள்வதற்கு எத்தகைய சமூக இயக்கப்போக்கு வாயிலாக இட்டுச்செல்கிறது என்பதை அவர்கள் கண்டறியவில்லையாயினும் இவை இரண்டுக்கும் இத்தகைய உள்தொடர்பு இருப்பது (மத அல்லது சாதி அடையாளம் போன்ற) ‘கலாசார’ காரணிகள் மனிதர்கள் உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பதற்குக் கொடுக்கும் முன்னுரிமையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளின் ஒரு பகுதியாகும் எனக் காட்டுகிறது.

பாலினம் மற்றும் இதர காரணிகளுக்கு உள்ள தொடர்பு நிலை

பாலின ரீதியாகப் புலால் உண்ணாமை நிலவுவதற்கான தனித்தனியான மதிப்பீடுகள் NFHSஇலிருந்து மட்டுமே கிடைக்கிறது. அட்டவணை 5a அடிப்படையான மதிப்பீட்டை முன்வைக்கிறது. புலால் உண்ணாமை ஆண்களைவிட பெண்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளது (கிட்டத்தட்ட 50%க்கும் அதிகம்). கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை ஒப்பிடும்போதும் வெவ்வேறு பாணி நகரங்களை ஒப்பிடும்போதும்கூட பாலின இடைவெளி அதேபோல உள்ளது.

சித்திரம் 5a வெவ்வேறு மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவும் புலால் உண்ணாமையை முன்வைக்கிறது: மாநிலங்களூடாகப் பார்த்தால் இவை இரண்டுக்குமிடையே சாதகமான உறவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. புள்ளி புள்ளியாகப்போடப்பட்டுள்ள பின்முகச் சரிவு இருமடிக்கோடு (quadratic regression line) சிறு சிறு கோடுகளாகப் போடப்பட்டுள்ள சமத்துவக்கோட்டிலிருந்து (line of equality) கீழே விலகிச் செல்கிறது. இது ஆண்கள் (மற்றும் பெண்கள்) விஷயத்தில் புலால் உண்ணாமை நிலவுவது அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கிடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது எனக் காட்டுகிறது.

பாலின இடைவெளியும் புலால் உண்ணாமை அதிகரிக்க அதிகரிக்க இந்த இடைவெளியும் அதிகரிப்பதும் ஆணாதிக்கக் கட்டமைப்புகள், நடைமுறைகள் ஆகியவற்றாலும் அவற்றிலுள்ள பிராந்திய ரீதியான வேறுபாடுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கலாம். இது குறித்து இந்தக் கட்டத்தில் சில கருதுகோள்களை மட்டுமே நாங்கள் முன்வைக்க முடியும். இந்த இடைவெளியின் ஒரு பகுதி ஆண்கள் பெண்களைவிட அதிகமாக வீட்டுக்கு வெளியே உணவருந்துகின்றனர் என்பதோடு தொடர்புடையதாக இருக்கலாம். ஆணாதிக்கச் சூழ்நிலை சில சமூகக் கட்டுப்பாடுகளை நெளிவுசுளிவுடன் அனுபவிக்க ஆண்களை அனுமதிக்கிறது.

இதன் மறுபக்கம் என்னவென்றால், புலால் உண்ணாமை என்ற பாரம்பரியத்தைத் தக்கவைப்பதற்கான பாரம் ஒப்பீட்டளவில் கூடுதலாகப் பெண்கள் மீது விழுகிறது. இருப்பினும், வெளியே உணவருந்துவது என்பதே இறைச்சியை உண்பதில் போய் முடிந்துவிடுவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இறைச்சி உண்பதற்கும் ‘ஆண்மை’ கருத்துகளுக்குமிடையே உள்ள தொடர்பை நாம் கண்டறிய வேண்டும். அப்போதுதான் ஆண்கள் அதிகம் புலால் உண்பதற்கான காரணத்தை ஆணாதிக்கத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். இந்துத்துவ அரசியல் கருத்தியல் எங்கு வலுவாக நிலவுகிறதோ அங்கு புலால் உண்ணாமையில் பாலின இடைவெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்தக் கருத்துகள் எழுத்தறிவின்மைக்கான பாலின இடைவெளியிலும் பிரதிபலிக்கின்றன. 2011 மக்கள்தொகை மதிப்பீடுகளிலிருந்து வடிவமைக்கப்பட்ட சித்திரம் 5b எழுத்தறிவின்மையில் பாலின இடைவெளி உள்ளது என்றும் (அனைத்துப் பெரிய மாநிலங்களிலும் எழுத்தறிவின்மை ஆண்களைவிடப் பெண்கள் மத்தியில் அதிகமாக நிலவுகிறது என்றும்) ஒட்டுமொத்தமான எழுத்தறிவின்மை அதிகரிக்க அதிகரிக்க இந்த இடைவெளியும் அதிகரிக்கிறது என்றும் (புள்ளிகளால் வரையப்பட்டுள்ள இருமடிப் பொருத்தப்பாட்டுக் கோடு (quadratic fit line) சிறு சிறு கோடுகளால் வரையப்பட்டுள்ள சமத்துவக் கோட்டிலிருந்து கீழ்நோக்கி விலகுவதையும்) காட்டுகிறது. எழுத்தறிவின்மைக்கான வரைபடம் (graph) (சித்திரம் 5b) புலால் உண்ணாமைக்கான வரைபடத்துடன் (சித்திரம் 5a) பளிச்சென்று தெரியுமளவுக்கு ஒத்துப்போகிறது. இது (எழுத்தறிவின்மை மற்றும் பாலினம் பற்றிய ஆராய்ச்சிகளில் செழுமையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி) ஆணாதிக்கத்தின் மாறுபட்ட வலிமை, புலால் உண்ணாமை மாறுபட்ட அளவில் நிலவுவதன் மைய காரணமாக இருக்கலாம் எனக் காட்டுகிறது.

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை...)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் [email protected] அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் [email protected] உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: epw.in

தமிழில்: பா.சிவராமன்

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 3-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 4-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 5-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

செவ்வாய், 10 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon