மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் ஐந்தாம் பகுதி இன்று வெளியாகிறது - ஆசிரியர்)

மெகா சாதி வகையினங்கள்

மெகா சாதி வகையினங்கள் மத வகையினங்களின் உட்பிரிவுகளாகவும் அமைந்துள்ளன. STக்கள், SCக்கள், OBCக்கள், மற்றும் இதரர்கள் ஆகியோர் மத்தியில் பொதுவாகப் பார்க்கையில் நிலவும் பாணி குறிப்பாக இந்துக்கள் மத்தியில் பார்க்கும்போதும் அப்படியே நிலவுகிறது. அட்டவணை 3b இன் மூன்றாவது, நான்காவது மேல்-கீழ் பத்திகள் (columns) இந்த மதிப்பீடுகளை முன்வைக்கின்றன. குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளின் பாணி ஒட்டுமொத்த மதிப்பீடுகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. (ஒன்றாம் மற்றும் இரண்டாம் மேல்-கீழ் பத்திகளில் உள்ளபடி. ஒரே வித்தியாசம் என்னவென்றால் STக்கள் மத்தியில் நிலவுவதைவிட SCக்கள் மத்தியில் புலால் உண்ணாமை நிலவுவது இப்போது சற்றுக் குறைவாக உள்ளது. ஆனால். இது முன்பு சற்று அதிகமாக இருந்தது. (அம்பேத்கரால் வழிநடத்தப்பட்டு மதம் மாறிய நீண்ட வரலாறு இருப்பதால், புத்த பதத்தைச் சேர்ந்த SCக்கள் மத்தியில் நிலவும் புலால் உண்ணாமையை தனியாகக் கணக்கிட்டோம். (90% புத்த மத ஆண்களும் பெண்களும் SCக்கள், SCகளில் 90% பேர் இந்துக்கள் என்பதைக் கவனத்தில் கொள்க.) NSSO மதிப்பீடும் (24.63%) NFHS மதிப்பீடும் (7.38%) கணிசமாக வேறுபடுகின்றன. மாதிரிகள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியதாகவும் ஒவ்வொரு ஆய்விலும் மாதிரிகளைத் தேர்ந்தடுக்கும் முறை வேறுபடுவதாலும் இந்த வேறுபாடு நிலவரம். எனவே, நாங்கள் இந்த முடிவுகளை மேற்கொண்டு ஆராயவுமில்லை, முக்கிய அட்டவணையில் அவற்றைக் கொடுக்கவுமில்லை.

IHDS ஆய்வு மட்டுமே "பார்ப்பனர்கள்" மற்றும் "முற்படுத்தப்பட்ட சாதிகள்" ஆகிய வகையினங்களுக்குத் தனித்தனியான மதிப்பீடுகளைத் தரும் ஆய்வு. (IHDS இல், "முற்படுத்தப்பட்ட சாதியினர்" SCக்கள், STக்கள், OBCக்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள்.) பார்ப்பனர்களின் மூன்றில் இரு பகுதியினர் மட்டுமே புலால் உண்ணாதவர்கள் என்று அட்டவணை 3c காட்டுகிறது. இது தவறாகப் பொதுமைப்படுத்திக் கூறப்பனவற்றைவிட (stereotypes) மிகவும் குறைவு. ஆனால் அட்டவணையிலுள்ள இதர குழுக்கள் விஷயத்தில் உள்ளதைவிட எதிர்பார்த்தபடி அதிகம். பார்ப்பன சமூகங்களின் மத்தியில் இறைச்சியை உட்கொள்ளல் நிலவுகின்றதென்பதைப் பதிவுசெய்துள்ள இனக்குழுவியல் ஆராய்ச்சிகளால் இத்தகைய குணச் சித்திரிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர, வங்காள மற்றும் கொங்கணி பார்ப்பனர்கள் இறைச்சி, மீன் ஆகியவற்றை உண்கிறார்கள் என்பது தெரிந்ததே. புலால் உண்ணாதவர்கள் என்று அறியப்படும் உத்தரப் பிரதேசத்திலுள்ள கன்யா - குப்ஜா பார்ப்பனர்கள் என்ற ஒரு கோத்திரத்தை சேர்ந்தவர்கள் இறைச்சி உட்கொள்வதைப் பற்றி காரே (1966ஆம் ஆண்டு) ஆராய்ச்சி செய்திருக்கிறார். இறைச்சியை உட்கொள்வது கார்வால் (உத்தராகண்ட்) பார்ப்பனர்கள் மத்தியில் மிகவும் சகஜமானது என மற்றோர் ஆராய்ச்சி பதிவுசெய்கிறது (ஜோஷி மற்றும் இதர சிலர் 1994).

மேலும், முற்படுத்தப்பட்ட சாதியினரில் மூன்றில் ஒரு பகுதியினரே புலால் உண்ணாதவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான (OBCs) எண்ணிக்கையிலிருந்து இது பெரிதும் மாறுபட்டதல்ல. இதிலிருந்து பெறப்படுகின்ற ஒரு முடிவு என்னவென்றால், புலால் உண்ணாமைக்கான கருத்தியல் அழுத்தம் முற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற வகையினருக்கு மாறாகப் பார்ப்பனீயராலேயே தக்கவைக்கப்படுகிறது. முற்படுத்தப்பட்ட சாதிகளில் பெரும்பான்மையினர் இறைச்சி உண்பவர்களாக இருப்பது புலால் உண்ணாமை என்ற வகையினம் சாதி மற்றும் பார்ப்பனீயத்தால் மிக நெருக்கமாக உருவாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. மறுபுறம் பார்த்தால், SCக்கள் மற்றும் STக்களுக்கான IHDS மதிப்பீடுகள் NFHS மதிப்பீடுகளையும்விடக் குறைவாக உள்ளன. அதேபோல, முஸ்லிம்களுக்கான மதிப்பீடுகள் குறைவாகவும் NFHS மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் கிறிஸ்துவர்களுக்கான மதிப்பீடுகள் அவர்களுக்கான NSSO அல்லது NFHS மதிப்பீடுகளைவிட புதிராகவுள்ள அளவுக்கு மிகவும் அதிகமாகவும் உள்ளன. அது IHDS இல் முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் OBCயினருக்கும் உள்ள மதிப்பீடுகளைவிட மிகக் குறைவானதாகவொன்றும் இல்லை.

இறுதியாக, குறிப்பிட்டதொரு சமூகப் பிரிவுக்குள்ளேயே புலால் உண்ணாமையில் கணிசமான இடரீதியான வேறுபாடுகள் இருப்பதை நாம் காண்கிறோம். சித்திரம் 4 பெரிய மாநிலங்களாக NSSOவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 17 மாநிலங்களில் SCக்கள் விஷயத்திலும் (செங்குத்து அச்சு) இந்து SC-ST-OBC அல்லாதவர்கள் விஷயத்திலும் (கிடைமட்ட அச்சு) மாநிலவாரியாக நிலவும் புலால் உண்ணாமையைக் காட்டுகிறது. SCக்கள் விஷயத்தில் NSSO மதிப்பீடுகளின்படி மொத்தத்தில் 31% புலால் உண்ணாதவர்களாக இருந்தாலும் (அட்டவணை 3b, மேல்-கீழ் பத்தி/column 1), 17 பெரிய மாநிலங்களில் நான்கில் புலால் உண்ணாமை நிலவுவது 5% ஐயும்விடக் குறைவாக உள்ளது (மேற்கு வங்கம், அசாம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளம்) எனவும் ஒன்பது மாநிலங்களில் 20%க்கும் குறைவாக உள்ளது எனவும் அதே நேரத்தில் மூன்று மாநிலங்களில் (பஞ்சாப், அரியணை மற்றும் ராஜஸ்தான்) புலால் உண்ணாமை SCக்கள் மத்தியில் 70%க்கும் அதிகமாக நிலவுகிறது எனவும் சித்திரம் 3 காட்டுகிறது. SC வகையினத்திற்குள்ளேயே நிலவும் இந்த இடரீதியான மாறுபாடு பளிச்செனத் தெரிவது உண்மைதான். இது எந்தளவிற்கு விசாலமாக வியாபித்திருக்கிறது என்பதற்கு மேற்கு வங்கமும் பஞ்சாபும் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி இம்மாநிலங்களில் SC மக்கள்தொகை முறையே 24% மற்றும் 32% ஆக உள்ளது. இருப்பினும் SC மக்கள் புலால் உண்ணாமை அலைவரிசையில் (முறையே 1% மற்றும் 74% என்ற அளவில்) எதிரெதிர் முனைகளில் உள்ளனர். இந்து SC-ST-OBC அல்லாதவர்கள் மத்தியிலும் இதுவே உண்மை.

NSSO மதிப்பீட்டின்படி 41 சதவிகிதத்தினர் புலால் உண்ணாதவர்களாக இருந்தாலும் (அட்டவணை 2b, மேல்-கீழ் பத்தி 1), 17 முக்கிய மாநிலங்களில் இரண்டில் (அசாம் மற்றும் மேற்கு வங்கம்) இது 5%க்கும் குறைவாக உள்ளது, இரு மாநிலங்களில் (ராஜஸ்தான் மற்றும் அரியானா) இது 90%க்கும் மேலாக நிலவுகிறது எனச் சித்திரம் 3 காட்டுகிறது.

சித்திரம் 4 இல், SCக்கள் மத்தியிலும் முற்படுத்தப்பட்ட சாதியினர் (அதாவது இந்து SC-ST-OBC அல்லாதோர்) மத்தியிலும் புலால் உண்ணாமை நிலவும் நிலை பொதுவாக மாநிலங்களுக்கிடையே இணக்கமாக அமைந்திருப்பது தெரிவிக்கப்பட்டுள்ள புலால் உண்ணாமை சாதி காரணிகளால் எந்தஅளவுக்குத் தீர்மானிக்கப்படுகிறதோ அந்த அளவுக்குப் பிராந்திய காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது எனக்காட்டுகிறது. ஒருபுறம் SCக்களுக்கும் OBCக்களுக்குமிடையே கணிசமான இடைவெளி இருக்கிறது. மறுபுறம் OBCக்களுக்கும் முற்படுத்தப்பட்ட சாதியினருக்குமிடையே ஒப்பீட்டளவில் மிகக்குறுகிய இடைவெளி இருக்கிறது (அட்டவணை 3b மற்றும் அட்டவணை 3c). எனவே, புலால் உண்ணாமை என்பது சாதிகளுக்கிடையிலான உறவில் நிலவும் கலாச்சாரரீதியாக புனையப்பட்ட கருத்தியல் அதிகாரம் என்ற வகையில் SCக்களின் நடத்தையைத் தீர்மானிப்பதைவிட OBCக்களின் நடத்தையை அதிகம் தீர்மானிக்கிறது என்ற கருதுகோளுக்கு (hypothesis) ஒருவர் வர முடியும். இது, ஒரு மாநிலத்தில் உணவு உட்கொள்வது தொடர்பான நியதிகளைத் திணிப்பதில் முற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கும் அதிகாரமும் உள்ளது என்பதைப் பொறுத்தது. எங்கெல்லாம் முற்படுத்தப்பட்ட சாதியினர் சமூக அரசியல்ரீதியாக ஆதிக்க நிலையில் உள்ளனரோ அங்கு OBCக்கள் மத்தியிலும் அதைவிடச் சற்றுக் குறைவாக SCக்கள் மத்தியிலும் புலால் உண்ணாமை கணிசமாக அதிகரிக்கிறது.

இது சித்திரம் 5இல் ஆராயப்படுகிறது. இடது பக்க வரைபடம், இந்து "முற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும்" இந்து OBCக்களுக்குமிடையிலான வேறுபாடுகள் அம்மாநிலத்தில் OBCக்களின் மக்கள் தொகைக்கேற்ப எவ்வாறு மாறுபடுகிறது எனக் கோடிட்டுக் காட்டுகிறது. (மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் OBC பற்றிய விவரங்களைத் தொகுப்பதில்லையாதலால் துல்லியமான OBC விவரங்கள் எண்களிடமில்லை. சித்திரம் 5க்காக, இந்திய மானுட வளர்ச்சி அறிக்கை 2912--சமூக உட்சேர்க்கையை நோக்கி (திட்டக் கமிஷன் 2011) என்ற அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களைச் சார்ந்து நிற்கிறோம்.)

மாநிலங்கள் வாரியாக OBCக்களின் மக்கள் தொகையின் அதிகரிப்புக்கேற்பப் புலால் உண்ணாமையில் இந்து "முற்படுத்தப்பட்ட சாதியினருடன்" அவர்களுக்கு உள்ள இடைவெளியும் அதிகரிக்கிறது என்ற அளவில் இவை இரண்டுக்குமிடையே இணக்கம் நிலவுகிறது. இது OBCக்கள் கருத்தியல்ரீதியாக விடுவித்துக்கொள்வதைக் குறிக்கிறது. இதற்கு நேர்மாறாக, இதற்கு நிகரான SCக்கள் விஷயத்திலான நிலையைக் காட்டும் சித்திரம் 5இன் வலதுபக்க வரைபடத்தில், இத்தகைய நேர்முக உறவு எதுவும் இல்லை.

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 3-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 4-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை…)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் ([email protected]) அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் ([email protected]) உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: இ.பி.டபிள்யூ

தமிழில்: பா.சிவராமன்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

திங்கள், 9 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon