மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் நான்காம் பகுதி இன்று வெளியாகிறது _ ஆசிரியர்)

சித்திரம் 3: புலால் உண்ணாமை நிலவுதல், மாநில வாரியாக (NSSO புள்ளிவிவரங்களின் அடிப்படையில்)

இந்த வரைபடம், மாநிலங்கள் வாரியாக நிலவும் புலால் உண்ணாமையை 0% இலிருந்து 90% வரை ஒவ்வொரு பத்து விழுக்காடுகள் வாரியாக வேறுபடுத்திக் காட்டுகிறது.

புலால் உண்ணாமையில் மாநிலங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆறு மாநிலங்களில் புலால் உண்ணாமை 2%க்கும் குறைவாக உள்ளதென இதே சித்திரத்திலிருந்து தெரிகிறது. இவையனைத்தும் வடகிழக்கு மாநிலங்கள். (வடகிழக்கு மாநிலங்களுக்குள்ளேயே ஓரளவு வேறுபாடு நிலவுகிறது. நாகலாந்து, மிசோரம், திரிபுரா ஆகியவற்றில் 1%க்கும் குறைவு. சிக்கிம்மில் 12%, அருணாசலப் பிரதேசத்தில் 4.7%) மக்கள்தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்களாக NSSOவால் வரையறுக்கப்பட்டுள்ள 17 மாநிலங்களில் அசாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மூன்றில் புலால் உண்ணாமை 5%க்கும் குறைவாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில் இது 75%க்கும் அதிகமாக உள்ளது. 17 பெரிய மாநிலங்களில் 7இல் மட்டுமே, புலால் உண்ணாமை 50%க்கும் அதிகமாக உள்ளது. ஆறு மாநிலங்களில் 20%க்கும் குறைவாக உள்ளது.

மாநிலங்களுக்கிடையிலான வேறுபாடுகள் ஒரு தெளிவான பிராந்திய பாணியில் உள்ளன. சித்திரம் 3இல் உள்ள வரைபடத்திலிருந்து இது தெளிவு. மேற்கிலும் வடக்கிலும் உள்ள மாநிலங்களில் இது அதிகமாக நிலவுகிறது. கிழக்கிலும் தெற்கிலும் உள்ள மாநிலங்களில் ஒப்பீட்டளவில் இது குறைவாக நிலவுகிறது. சென்னையின் ‘தென்னிந்திய சைவ உணவு’, டெல்லியின் கபாபுகள், பஞ்சாபின் சிக்கன் டிக்கா போன்று பொதுமைப்படுத்தப்படுவது தவறு என இவை காட்டுகின்றன.

"உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் போன்ற கடலோர மாநிலங்களாக இல்லாத மாநிலங்களில்கூடப் புலால் உண்ணாமை என்பது விதிவிலக்கு. இம்மாநிழல்களில் புலால் உணவு என்றால் செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டின் கறியை உட்கொள்வது எனச் சமீப ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது. இந்திய மானுடவியல் சர்வே (Indian Anthropological Survey) நிகழ்த்திய ஆய்வின்படி, இந்தியாவிலுள்ள 4,635 சமூகங்களில் 88% பேர் புலால் உண்கின்றனர். புலால் உண்ணாமை மொத்த சமூகங்களின் கலாசார நடைமுறையாக இல்லாமல் தனிநபர்களின் முதன்மைத் தேர்வாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.

வரலாற்று ரீதியான விவரங்கள் இல்லாதிருப்பதால், இத்தகைய பிராந்திய பாணி, விவசாய சுற்றுச்சூழல் காரணமாகக் கிடைக்கும் உணவு, உள்ளூர்ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் (சாதிகள், மதங்கள் போன்ற) சமூகக் குழுக்களோடு தொடர்புடைய கலாசார அரசியல் மற்றும் உணவுப் பழக்கங்களில் நிலவும் பாலின ரீதியான வேறுபாடு ஆகிய சிக்கலான பல காரணிகளின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தை மட்டுமே எங்களால் இந்தக் கட்டத்தில் முன்வைக்க முடியும்.

மத, சாதிக் குழுக்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள்:

அடுத்து மதங்களாகவும் சாதிகளாகவும் வகைப்படுத்தப்படும் சமூகக் குழுக்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளைப் பார்ப்போம். NSSO மற்றும் NFHS மதிப்பீடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி நாம் ஏற்கெனவே விவாதித்துள்ளோம். ஆனால், குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளின் பாணி இரு மதிப்பீடுகளின் தொகுப்புக்கும் பொதுவானதாக உள்ளது. ஜைனர்களையும் (புலால் உண்ணாதவர்கள்) சீக்கியர்களையும் (பெரும்பான்மையினர் புலால் உண்ணாதவர்கள்) தவிர வேறெந்த மதப் பிரிவும் பெரும்பான்மை புலால் உண்ணாதவர்களைக் கொண்டது அல்ல. மக்கள்தொகையில் மிகப் பெரிய பிரிவாகிய இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் இறைச்சி உண்பவர்கள். NSSO மதிப்பீட்டின்படி இந்துக்களில் ஐந்தில் இரண்டு பகுதிக்குச் சற்று மேலாகப் புலால் உண்ணாதவர்கள். IHDS மதிப்பீட்டில் இது மூன்றிலொரு பங்கையும்விடக் குறைவு. கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும்பான்மையினர் இறைச்சி உண்பவர்கள். சிறு அளவிலான இனக் குழுவியல் ஆராய்ச்சிகள் சிலவும் இதற்கு முன்னர் இதே திசையில் தமது முடிவுகளைத் தெரிவித்திருக்கின்றன. ஏ.கே.சக்ரவர்த்தி (1974: 403), "இந்தியாவில் இந்துக்களில் கிட்டத்தட்ட 65 சதவிகிதத்தினர் புலால் உண்பவர்கள் என கருதப்படக்கூடும்" எனத் தெரிவித்திருந்தார்.

சமூகப் பிரிவினர் மத்தியில் உணவுப் பழக்கவழக்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது சுவாரஸ்யமான கேள்வி. இந்த விஷயத்தில், சமூகப் பிரிவுகள் மட்டத்திலான பாணியை உருவாக்கும் சமூகப் போக்குகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் எண்ணிக்கை ரீதியான ஆராய்ச்சிகளின் ஆற்றல் குறைவே. சமூகம் (community) என்ற கருத்தையும் கலாசார அடையாளம் எவ்விதங்களில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதையும் ஆராயும் செழுமையான இனக்குழுவியல் ஆராய்ச்சிகள் நமக்குத் தேவை. கலாசார அடையாளங்கள் கருத்தியல் ரீதியில் நியாயப்படுத்தப்பட்டு, நிறுவனங்கள் வாயிலாக அமலாக்கப்படுவதன் மூலம் பல்வேறு சமூகப் பிரிவுகளில் பிரத்தியேகமான நடைமுறைகளை உருவாக்கும் நியதிகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, ஜைனர்கள் மத்தியில் மதக் கருத்துகள் (அகிம்சை போன்றவை), மாறா நம்பிக்கைகள், கட்டுப்பாட்டு நியதிகள், மதகுருமார்களைக் கொண்டதொரு கட்டமைப்பு, ஆகமன நடைமுறைகள் போன்ற அமைப்பு முறைகள் ஆகியன அக்குழு உறுப்பினர்களின் சமூக அரசியல் வாழ்க்கைகளைக் கட்டமைத்து, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் உணவு நடைமுறைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதர குழுக்கள் விஷயத்தில் இது அவ்வளவு தெளிவாக இல்லை.

புலால் உண்ணாமை என்ற வகையினம் பொதுவில் தடைசெய்யப்படுதலைச் சார்ந்தது அல்ல என்பதால் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரே சீரான தன்மை நிலவுவதில் புதிரொன்றுமில்லை. முஸ்லிம்கள் ஜைனர்களைப் போன்று விலக்கப்பட்ட உணவுப் பொருள்களை (எடுத்துக்காட்டு: பன்றியிறைச்சி) தவிர்ப்பதற்கான பாணியை உருவாக்குவதற்கான சமூக ஆற்றலை எவ்வாறு எந்த அளவுக்கு வளர்த்துள்ளனர் என்பது ஆராய்ச்சி செய்யப்படக்கூடிய விஷயம். எங்களுக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட விவரங்கள் இல்லை.

மறுபுறம், உணவு நடைமுறைகள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரே சீரான தன்மையை வெளிப்படுத்தும் இந்து மக்கள் மத்தியில் குழு மட்டத்தில் ஒரு பாணி நிலவுகிறதா என்பது தெளிவாக இல்லை. சீக்கியர்கள் விஷயம் புதிராகவுள்ளது. ஏனெனில் சீக்கிய மதம் இறைச்சி உட்கொள்வதற்கெதிராகத் தடை எதையும் விதிக்கவில்லை (உணவு நடைமுறைகளை வடித்தெடுப்பதில் குருநானக் புலால் உண்ணாமையைத் தெளிவாக நிராகரித்திருக்கிறார்).

அட்டவணை 3a: மத வாரியாகப் புலால் உண்ணாமை (%)

அட்டவணை 3b: பெரும் சாதி பிரிவு வகையினங்கள் வாரியாகப் புலால் உண்ணாமை

அட்டவணை 3c: சமூக வகையினங்கள் வாரியாகப் புலால் உண்ணாமை (IHDS) (%)

இந்த விஷயத்தை மேற்கொண்டு ஆராய்கையில், அட்டவணை 3b மெகா-சாதி வகையினங்கள் குறித்து கவனம் செலுத்துகிறது. NSSO மற்றும் NFHS மதிப்பீடுகளுக்கிடையே வேறுபாடுகள் நிலவினாலும் சாதிக் குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளின் பொதுவான பாணி அனைத்து ஆய்வுகளிலும் ஒரேமாதிரி உள்ளது. ஒட்டுமொத்த NSSO மதிப்பீட்டில் (column I), இந்த நான்கு வகையினங்கள் விஷயத்தில், புலால் உண்ணாமை நிலவுவது ஷெட்யூல்டு பழங்குடியினர் (STs) மத்தியில் இருப்பதிலேயே மிகக் குறைவாக உள்ளது. அடுத்து ஷெட்யூல்டு சாதியினர் (SCs) வருகின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBCs) மத்தியில் இன்னும் அதிகமாக உள்ளது. இதர சாதியினர் (SC, ST, OBC அல்லாதவர்கள்) மத்தியில் இருப்பதிலேயே மிக அதிகமாக உள்ளது.

ஒட்டுமொத்த NFHS மதிப்பீடு (column II) வகையினங்கள் விஷயத்தில் ஒரே வரிசைக்கிரமத்தைக் கொடுக்கிறது. மேலும், புள்ளிவிவரவியல் ரீதியில் கணிசமானதாக இருந்தாலும் இருப்பதற்குள்ளேயே பெரிய இடைவெளி (அதாவது STக்களுக்கும் எஞ்சிய சாதி வகையினங்களுக்கும் இடையிலான இடைவெளி முறையே NSSO, NFHS ஆய்வுகளில் 13.4 மற்றும் 16.1 சதவிகிதப் புள்ளிகள் மட்டுமே. இது மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மத வகை இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

நன்றி: epw.in

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை…)

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 3-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் ([email protected]) அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் [email protected] உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

தமிழில்: பா.சிவராமன்

ஞாயிறு, 8 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon