மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் மூன்றாம் பகுதி இன்று வெளியாகிறது - ஆசிரியர்.)

கீழே தரப்பட்டுள்ள அட்டவணை 1, மூன்று ஆய்வுகளிலிருந்தும் புலால் உண்ணாமை குறித்துக் கிடைத்த மதிப்பீடுகளை முன்வைக்கிறது. இந்த மூன்று ஆய்வுகளிலும் நுகர்வு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால் இந்த மதிப்பீடுகள் உடனடியாக ஒப்பிட்டுப் பார்க்கப்படக் கூடியன அல்ல. இருப்பினும், எந்த ஒரு மதிப்பீடும் மூன்றிலொரு பங்கைவிடக் கணிசமாக அதிகமாக இல்லை என்பதையும் NFHS மற்றும் IHDS மதிப்பீடுகள் மக்கள்தொகையில் கால் பங்குக்கும் குறைவாக இந்த எண்ணிக்கையைக் காட்டுகின்றன என்பதையும் நாம் காண்கிறோம். (NFHS ஆய்வில் எந்தக் காலஅளவுக்கேற்ப மீன், இறைச்சி அல்லது முட்டைகளை உட்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு "ஒருபோதும் இல்லை" என்று பதிலளிப்பவர்களுக்கான மதிப்பீடுகள் அட்டவணை 1இல் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. மீனையும் இறைச்சியையும் மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டால் மதிப்பீடுகள் ஓரளவுக்கு அதிகரிக்கின்றன. பெண்கள் விஷயத்தில் 32.61%; ஆண்கள் விஷயத்தில் 24.30%.)

மேலும் சில குடும்பங்கள் இறைச்சி உட்கொள்வது குறித்து ஆய்வாளரிடம் தெரிவிக்கத் தயங்கக்கூடும். இறைச்சி உட்கொள்வதை மூடிமறைக்க வேண்டிய நிர்பந்தத்தை உணரக்கூடிய சாதிகள் அல்லது சமூகப் பிரிவினர்கள் மத்தியிலிருந்து வரும் சில குடும்பங்கள் அவ்வாறு தயங்கக்கூடும். எனவே, இந்த மதிப்பீடுகள் மிகையானவையாக இருக்கலாம். மேலும், NSSO ஆய்வு விஷயத்தில், இது ஆய்வுக்கு முந்தைய 30 நாட்களுக்குப் புலால் உண்ணாதவர்களாக இருந்தவர்களைப் பற்றிய மதிப்பீடு மட்டுமே. புலால் உட்கொள்பவர்களில் பலர், குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், முந்தைய 30 நாட்களில் புலால் உண்ணாமலிருந்திருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கலாம். (4. NSSO ஆய்வு விஷயத்தில், அட்டவணை 1, ஆய்வுக்கு முந்தைய 30 நாட்களில் மீனோ, இறைச்சியோ, முட்டையோ உட்கொள்ளாதவர்கள் குறித்த மதிப்பீடுகளை அளிக்கிறது. இதில் மீனையும் இறைச்சியையும் மட்டுமே எடுத்துக்கொண்டால் மதிப்பீடு 40.08% என சற்றே அதிகரிக்கிறது.)

அப்படியிருப்பின், அட்டவணை 1இல் கொடுக்கப்பட்டிருக்கும் புலால் உண்ணாமைக்கான NSSO மதிப்பீடுகள் கிட்டத்தட்ட நிச்சயமாக மிகையான கணக்காக இருக்கும். இதேபோன்ற மதிப்பீடுகள் தி இந்து – சிஎன்என் - ஐபிஎன் நடத்திய ஆய்வைப் பரவலாக பரவலாக மேற்கொள்காட்டுகின்றன. "இந்தியாவில் புலால் உண்ணாமை குறித்துப் பரவலாக நிலவும் இமேஜ் யதார்த்தத்திலிருந்து மிகவும் விலகியது, ஏனெனில் 31 சதவிகிதம் இந்தியர்களும் (குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே புலால் உண்ணாதவர்களாக இருக்கும் பட்சத்தில்) 21 சதவிகிதம் குடும்பங்களும் மட்டுமே புலால் உண்ணாதவர்களாகக் காணப்பட்டனர்” என அந்த ஆய்வு கூறியது (யாதவ் மற்றும் குமார் 2006).

அட்டவணை 1: இந்தியாவில் புலால் உண்ணாமை

இந்த மதிப்பீடுகள் NSSO விஷயத்தில் ஆய்வுக்கு முந்தைய 30 நாட்களில் மீனோ இறைச்சியோ அல்லது முட்டைகளையோ உண்ணாதவர்கள் விஷயத்திலானது; NFHS விஷயத்தில் மதிப்பீடுகள் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மீனோ இறைச்சியோ முட்டைகளையோ உட்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு ஒருபோதுமே இல்லை என்று பதிலளித்தவர்கள் பற்றியது; IHDS விஷயத்தைப் பொறுத்தவரை "குடும்பத்தில் புலால் உண்ணும் இருவராவது இருக்கின்றாரா" என்ற கேள்விக்கு "இல்லை" என்று பதிலளித்தவர்களைப் பற்றியது. NFHS மதிப்பீடு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி மதிப்பீடுகளின் சராசரியாகும். மேற்கண்ட இதே குறிப்புகள், பின்வரும் அட்டவணைகள் அனைத்திற்கும்கூடப் பொருந்தும்.

உணவில் இறைச்சி, மீன் மற்றும் முட்டைகள் சேர்த்துக்கொள்ளாமை என்று வரையறுக்கப்படும் புலால் உண்ணாமை குறித்த மதிப்பீடுகளை எங்கெல்லாம் சாத்தியமோ அங்கு தருகிறோம். முட்டைகளைக் கணக்கிலெடுக்காமல் புலால் உண்ணாமை என்றால் உணவில் இறைச்சி மற்றும் மீன் சேர்த்துக்கொள்ளாமை என்று வரையறுக்கப்பட்டால்கூட நாங்கள் தெரிவிக்கும் உணவு உட்கொள்ளும் பாணிகளும் அவற்றுக்குப் பின்னாலுள்ள வாதங்களும் பொருந்தும் எனக் கருதுகிறோம்.

இந்த இரண்டு விதமான வரையறைகளுக்கான மாநில அளவிலான NSSO மதிப்பீடுகளை வரைபடமாகக் கோடிட்டுக் காட்டும் சித்திரம் 1 இந்த இரு மதிப்பீடுகளும் மிக நெருக்கமாக உள்ளன எனக் காட்டுகிறது. சிறு சிறு கோடுகளாக வரையப்பட்டிருக்கும் கோடு சமத்துவக் கோடாகும் (line of equality); ஆய்வில் கிடைத்த விவரங்கள் புள்ளிகளாகக் குறிக்கப்படும்போது. இப்புள்ளிகளனைத்தும் இந்த சமத்துவக்கோட்டிற்கு மேலே விழுகின்றன. புள்ளிகளாக வரையப்பட்டிருக்கும் கோடு சரிவைக் காட்டுவதாகும் (linear regression). இந்த இரு கோடுகளும் மிக நெருக்கமாகவும் ஓரளவு இணைகோடுகளாகவும் உள்ளன. புலால் உண்ணாமை குறித்த இரு வரையறைகளின்படி விநியோகிக்கப்படும் புள்ளிகளை இணைக்கும் கோடுகளுக்கிடையே மிகச் சொற்பமான வேறுபாடே உள்ளது என இது காட்டுகிறது. பிராந்திய வேறுபாடுகள்: அட்டவணை 2a (கிராமப்புறம்/ நகர்ப்புறம் என்று இரண்டாகப் பிரித்து வகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளைக் காட்டுகிறது.

அட்டவணை 2a: இடம்வாரியாகப் புலால் உண்ணாமை

அட்டவணை 2b : நகர மாதிரிவாரியாகப் புலால் உண்ணாமை

இந்த மூன்று ஆய்வுகளிலுமே, உணவுப் பழக்கவழக்கங்களில் பெரிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற அடிப்படையிலான இடரீதியான வேறுபாடுகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நகர்ப்புறப் புள்ளிவிவரங்களை மேற்கொண்டு பகுத்துப் பார்த்தால் அது அதிக வேறுபாடுகளைக் கொண்ட சித்திரத்தைக் காட்டுகிறது. குறிப்பாக, அட்டவணை 2b காட்டுவதுபோல, பெருநகரங்களில் புலால் உண்ணாமை குறைவாக உள்ளது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேர்த்து எந்த அளவுக்குப் புலால் உண்ணாமை உள்ளதோ அதில் சரிபாதியை விடச் சற்றே அதிகமாகப் பெரிய ஆறு பெருநகரங்களில் உள்ளது என IHDS மதிப்பீடுகள் காட்டுகின்றன. தொழிலாளர் வர்க்கம் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் அனைத்துச் சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வருவதை அடிப்படையாகக் கொண்டே இது குறித்த விளக்கத்தை நாம் அளிக்க முடியும். பெருநகரங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், NFHS மதிப்பீடுகள் (அட்டவணை 2b) புலால் உண்ணாமை நகரங்களின் அளவுக்கேற்ப சிறிய டவுன்களைவிட பெரிய டவுன்களிலும் சிறு நகரங்களை விட பெரிய நகரங்களிலும் அதிகரிக்கிறது. இது புலால் உண்ணாமை குறித்த பொதுவான ஊகத்திற்கு மாறானது. நகரத்தின் அளவிற்கும் புலால் உண்ணாமைக்கும் உள்ள பரஸ்பர உறவைத் தீர்மானிப்பது எது என எங்களால் கூற முடியாவிட்டாலும், புலால் உண்ணாமை நிலவுவதில் கணிசமான வேறுபாடுகள் நிலவுவதைக் காண முடிகிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் நகரங்களின் அளவுக்கேற்ப வேறுபாடுகள் இருப்பதை உறுதிசெய்ய இது உதவுகிறது.

நாட்டில் புலால் உண்ணாமை நிலவுவதில் இடரீதியான வேறுபாடுகள் இன்னமும் பளிச்சென்று தெரிவதைச் சித்திரம் 2 காட்டுகிறது. NFHS மற்றும் IHDS ஆய்வுகளைவிட NSSO ஆய்வு புலால் உண்ணாமை குறித்து வழக்கமாக அதிக மதிப்பீடுகளைக் காட்டும் வண்ணம் மூன்று ஆய்வுகளிலும் சில வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் வேறுபாடுகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக உள்ளன என்பதைக் கவனிக்கவும். புள்ளிகளால் வரையப்பட்டுள்ள இருமடிப் பொருத்தப்பாட்டுக் கோடு (quadratic fit line) சிறுசிறு கோடுகளால் வரையப்பட்டுள்ள சமத்துவக் கோட்டிற்குக் கிட்டத்தட்ட இணைக்கோடாக இருப்பதிலிருந்து இது தெரியவருகிறது. வரையறுப்பதில் உள்ள வேறுபாடுகளே மூன்று ஆய்வுகளிலிருக்கும் மேற்கண்ட இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொரு ஆய்வின் புள்ளிவிவரத் தொகுப்பிலும் மாநிலரீதியான வேறுபாடுகள் நிலவுவதை இது மேலும் உறுதி செய்கிறது.

அடுத்து, NSSO மதிப்பீடுகள் மீது கவனம் செலுத்துவோம்.

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை…)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் ([email protected]) அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் ([email protected]) உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: http://www.epw.in/journal/2018/9/special-articles/provincialising-vegetarianism.html

தமிழில்: பா.சிவராமன்

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சனி, 7 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon