மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் இரண்டாம் பகுதி இன்று வெளியாகிறது – ஆசிரியர்.)

முதலில், நாங்கள் கண்டறிந்த முக்கிய விஷயங்களைச் சுருக்கமாக முன்வைக்கிறோம்.

(i) பொதுவாகக் கோரப்படுவதோடும் கீறல் விழுந்த ரெக்கார்டைப்போல முழங்கப்படுவதோடும் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாகப் புலால் உண்ணாமையின் அளவு மிகவும் குறைவு (மக்கள்தொகையில் 30 சதவிகிதத்துக்கும் மேல் இல்லை, இன்னும் யதார்த்தமாகப் பார்த்தால் 20 சதவிகிதத்துக்கு நெருக்கமாக இருக்கும்).

(ii) பொதுவாகக் கோரப்படுவதோடு ஒப்பிடுகையில் மாட்டிறைச்சி உட்கொள்ளப்படுவதன் அளவு மிகவும் அதிகம் (மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் இருக்கும். மேலும், யதார்த்தமாகப் பார்த்தால் 15 சதவிகிதத்துக்கு நெருக்கமாக இருக்கும்).

(iii) உணவுப் பழக்கவழக்கங்கள் (உட்கொள்ளப்படும்) அளவு, பிராந்தியம், சமூகப் பிரிவு, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகிய ரீதியில் கணிசமாக வேறுபடுகின்றன.

(iv) உணவு நடைமுறைகள் குறித்து எந்தவொரு சமூகப் பிரிவுக்கு உரித்தான முறையில் குறிப்பாகச் சொல்லப்படுபவை உண்மையில் எடுபடாது என்பதை சமூகப் பிரிவுகளுக்குள்ளேயே கணிசமான அளவுக்கு நிலவும் பிராந்திய வேறுபாடுகள் காட்டுகின்றன.

(v) சமூகப் பிரிவுகளின் பாரம்பரியம் அல்லது பிராந்திய பாரம்பரியம் எனக் கூறப்படுபனவற்றை சமூகப் பிரிவுகளுக்குள்ளேயும் பிராந்தியங்களுக்குள்ளேயும் நிலவும் கணிசமான பாலின ஏற்றத்தாழ்வுகள் சிக்கலானதாக்குகின்றன.

(vi) கலாச்சார - அரசியல் ரீதியான நிர்பந்தங்கள், உணவுப் பழக்கங்களாக ஆய்வில் தெரிவிக்கப்படுபனவற்றையும் உண்மையில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களையும் பாதிக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள எந்த விவரமும் இறைச்சி, மாட்டிறைச்சி ஆகியன உட்கொள்ளப்படுவது குறித்துக் குறைவாகவும் மரக்கறி உணவை உட்கொள்வது குறித்து அதிகமாகவும் தெரிவிக்கப்படுவதற்குமான பாரபட்சத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் (எனவே, புலால் உண்ணாமை உள்ளூர் ரீதியானதாகப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது).

புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?

புலால் உண்ணாமையை மதிப்பிடுவதற்கான ஆதாரங்களாக மூன்று பெரும் ஆய்வுகள் உள்ளன: அவை NSSO, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS), மற்றும் இந்திய மனிதவள மேம்பாட்டு அறிக்கை (IHDR) ஆகியன. அவை பல கட்ட அடுக்குகளாக வேறுபடுத்தப்பட்ட வடிவமைப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டவை.

NSSO ஆய்வு இந்திய அரசின் புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இது பொதுவாக, தரமான புள்ளிவிவர ஆதாரமாகக் கருதப்படுகிறது. நுகர்வுக்கான சமீபத்திய NSSO ஆய்வு 2011-12ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 68ஆம் சுற்று ஆய்வின் விவரங்கள். அது 7,469 கிராமங்களிலும் 5,268 நகர்ப்புற பிளாக்குகளிலும் பரவியுள்ள 1,01,651 குடும்பங்களை மாதிரிகளாகக் கொண்டு நடத்தப்பட்டது (NSSO 2013). நுகரப்படுவதிலேயே மிகப் பரந்த எண்ணிக்கையிலான அம்சங்களைப் பற்றி இந்த ஆய்வில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. புள்ளிவிவரங்களுக்கான மூன்று ஆதாரங்களில் இந்த ஆய்வில்தான் குறிப்பான வகை புலால் உணவுகளில் பல அயிட்டங்களைப் பற்றி (முட்டைகள், மீன் மற்றும் இறால், செம்மறியாட்டுக் கறி மற்றும் வெள்ளாட்டுக் கறி, மாட்டிறைச்சி, எருமை மாட்டிறைச்சி, பன்றிக் கறி, கோழியிறைச்சி, இதர பறவைகள் மற்றும் நண்டு வகைகள் போன்றவற்றைப் பற்றி) விரிவான தனிக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் முந்தைய ஐந்து நாள்களிலும் (தனியாக) 30 நாள்களிலும் நுகரப்பட்ட மேற்கண்ட இந்த அம்சங்கள் மற்றும் இதர உணவுப் பொருள்கள் அளவு குறித்தும் ஆய்வில் பதிலளித்தவர்களிடம் கேட்கப்பட்டது.

NFHS ஆய்வு நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நடத்தப்படும் மக்கள்தொகை மற்றும் சுகாதார ஆய்வுகளுக்கு (Demographic and Health Surveys) நிகரானது (ஐஐபிஎஸ் மற்றும் மேக்ரோ இன்டர்நேஷனல் = IIPS and Macro international 2007). NFHS மூன்றாவது சுற்றுப் புள்ளிவிவரங்கள் (2005--06) 15இலிருந்து 40 வயதுக்குட்பட்ட பெண்களிடமிருந்தும் 15 இலிருந்து 54 வயதுக்குட்பட்ட ஆண்களிடமிருந்தும் (1,24,385 பெண்கள், 74,369 ஆண்கள்) பெறப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மாதிரிகளின் அடிப்படையிலானவை. உணவு உட்கொள்ளுதல் குறித்து இந்த ஆய்வு பால் மற்றும் தயிர், பருப்பு வகைகள் மற்றும் வித்து வகைகள் (beans), கரும்பச்சை இலைத்தழை, காய்கறிகள், பழங்கள், முட்டைகள், மீன் மற்றும் கோழி அல்லது இறைச்சி ஆகிய குறிப்பான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி ஒவ்வொரு அயிட்டமும் நுகரப்படுவதற்கு (தினமும், வாரத்துக்கொரு முறை, எப்போதாவது அல்லது எப்போதுமே இல்லை என்ற) நான்கு வாய்ப்புக்களைக் கொடுத்து அவற்றிலொன்றுக்கு பதிலளிக்குமாறு ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் கேட்கிறது. IDHS அப்ளைட் பொருளாதார ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கவுன்சில் (Indian Council of Applied Economic Reasearch) என்ற அமைப்பாலும் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. 2001இல் அனைத்து மாநிலங்களிலுமிருந்த 612 மாவட்டங்களில் 382இல் பரந்திருந்த 27,010 கிராமப்புற குடும்பங்களையும் 13,126 நகர்ப்புற குடும்பங்களையும் மாதிரிகளாகக்கொண்டு நடத்தப்பட்டது. NSSOவில் ஆய்வு செய்யப்படும் 400 அயிட்டங்களுக்குப் பதிலாக IHDs இல் 47 அயிட்டங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன என்பதையும் ஆய்வுக்கான மாதிரிகளின் எண்ணிக்கை NSSO மாதிரிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவு என்பதையும் நினைவில் கொள்க.

இந்த ஆய்வின் கவனம் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து இருந்தாலும், 2011--12இல் நடத்தப்பட்ட இரண்டாவது சுற்று IDHS ஆய்வு, “உங்களது குடும்பத்தில் எவரேனும் புலால் உணவு உட்கொள்கின்றனரா?” என்ற கேள்வியையும் கேட்டது. IHDSஇன் மாநில வாரியான மதிப்பீடுகள் மிகச்சிறிய அளவிலான மாதிரிகளின் அடிப்படையில் இருப்பதால் இது முழுமையாகச் சரியாக இராது என்பதையும் கவனிக்கவும்.

இறைச்சி உட்கொள்ளுதல் மற்றும் புலால் உண்ணாமை பற்றிய இந்த மூன்று ஆய்வுகளின் மதிப்பீடுகளையும் நாங்கள் கீழே தருகிறோம். மாதிரிகள் எண்ணிக்கையின் அளவு மற்றும் மாதிரிக் குடும்பங்களின் சராசரி அளவு ஆகியவற்றைக் கணக்கிலெடுத்த பின்னரே இந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சித்திரம் 1: மாநில வாரியாகப் புலால் உண்ணாமை, முட்டைகளைச் சேர்த்தும் சேர்க்காமலும் (NSSO)

செங்குத்து வரிசை: இறைச்சியும் மீனும் இல்லாமல்

கிடைமட்ட வரிசை: இறைச்சியும் மீனும் முட்டையும் இல்லாமல்

NOTE: சிறுசிறு கோடுகளாகப் போடப்பட்டுள்ள கோடு சமத்துவக்கோடு (line of equality), புள்ளி புள்ளியாகப் போடப்பட்டுள்ள கோடு சரிவைக் காட்டும் கோடு (linear regression line).

சித்திரம் 2: புலால் உண்ணாமை நிலவும் அளவு, NSSO , NFHS மற்றும் IHDS மாநிலவாரியான மதிப்பீடுகளை ஒப்பிடுதல்

இரு வரைபடங்களிலுமே, சிறுசிறு கோடுகளாகப் போடப்பட்டுள்ள கோடு சமத்துவக் கோடு (line of equality), புள்ளி புள்ளியாகப்போடப்பட்டுள்ள கோடு பின்முகச் சரிவு நேர்கோடு (linear regression line). மக்கள்தொகையின் அடிப்படையில் 17 பெரிய மாநிலங்களாக NSSOவால் இனம்காணப்பட்டுள்ள மாநிலங்களின் பெயர்கள் சுருக்கி கொடுக்கப்பட்டுள்ளன.

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை...)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் ([email protected]) அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் ([email protected]) உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: http://www.epw.in/journal/2018/9/special-articles/provincialising-vegetarianism.html

தமிழில்: பா.சிவராமன்

வெள்ளி, 6 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon