மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

தமிழகத்துக்குப் பணிய வேண்டாம்!

தமிழகத்துக்குப் பணிய வேண்டாம்!

‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அழுத்தத்துக்கு மத்திய அரசு பணிய வேண்டாம்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உரிய காலத்துக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்ற நிலையில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைதும் செய்யப்பட்டனர். அடுத்தகட்டமாகக் காவிரி உரிமை மீட்புப் பயணம் நாளைத் தொடங்கவுள்ளது. மேலும் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தலைவர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக அதிமுக சார்பில் கடந்த 3ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

முழு அடைப்பு நடந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று (ஏப்ரல் 5) பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “காவிரி விவகாரத்தில் தமிழகத்திலிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்துக்கு மத்திய அரசு பணிய வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காவிரி நீர் பங்கீட்டுக்காக ஒரு ஸ்கீமை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியது. ஸ்கீம் என்றால் ஒரு திட்டம். அது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை. எனவே, நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும்” என்றும் கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “தமிழகப் போராட்டங்களுக்குச் செவி சாய்க்க வேண்டாம் என்று கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கடிதம். அண்ணன் ஸ்டாலின் அவர்களே காங்கிரஸைக் கண்டிக்கப் போகிறீர்களா? கூட்டணியில் இருந்து விலகப் போகிறீர்களா? திருநாவுக்கரசரை அருகில் வைத்துக்கொண்டு நீங்கள் ஆடும் போலி நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 5 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon