மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஏப் 2018

அஸ்திவாரத்துக்கு அனல் மூட்டிய சீனிவாசன்

அஸ்திவாரத்துக்கு அனல் மூட்டிய சீனிவாசன்

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 36

இராமானுஜம்

மாபெரும் சபையில் மானம் காத்த துரியோதனனுக்கு யுத்தக் களத்தில் மரணம் தழுவும் வரை விசுவாசமாக இருந்தவன் கர்ணன் என்பது மகாபாரதக் கதை. ஆனால், சினிமாவில் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தவரைப் பின் மண்டையில் அடித்து வீழ்த்துவதும் அன்றாட நிகழ்வு. இதுபோன்ற நிகழ்வை ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளர் எல்லப்பன் சந்தித்தார் என்பது வரலாறு.

வடஆற்காடு விநியோகப் பகுதியில் விநியோகஸ்தராக 1999இல் அறிமுகமான சீனிவாசனுக்கு தியேட்டர் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட அடிப்படையாக இருந்தது ராஜேஸ்வரி தியேட்டர். அதன்பின் விநியோகம், திரையரங்கு நடத்துவது என இரண்டு துறைகளிலும் சீனிவாசன் உச்சத்தைத் தொட்டுவிட்டார். இதற்குக் காரணமான ராஜேஸ்வரி திரையரங்கம் களையிழந்து காட்சிப் பொருளாகிவிட்டது. அதற்குக் காரணமும் சீனிவாசன் என்பதுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று. அப்படி என்னதான் நடந்தது ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளருக்கும் சீனிவாசனுக்கும்.

ராணிப்பேட்டையில் பரம்பரை செல்வந்தர் எல்லப்பன். இவரது குடும்பம் கெளரவத்துக்கு தியேட்டர் நடத்தினார்களே தவிர, பிழைப்புக்காக இல்லை என்கின்றனர் மூத்த விநியோகஸ்தர்கள். அந்த ஊரில் வசூலை வாரிக் குவித்துவந்த ராஜேஸ்வரி தியேட்டரை, நண்பர் சிவக்குமார் அறிமுகத்தில் குத்தகைக்கு எடுத்த பின் சீனிவாசனுக்கு ஏறுமுகம் தொடங்கியது. இவர் தங்கையைத் திருமணம் செய்து கொடுத்த வீட்டில் மகனுக்கு எல்லப்பன் பெண் பார்த்து திருமணம் முடித்ததால் உறவு முறையில் சொந்தக்காரர் ஆனார் சீனு. எந்தவித கட்டுப்பாடு, கணக்கு வழக்கின்றி தொழிலைத் தொடர்ந்த சீனிவாசனுக்கு எல்லப்பன் எல்லையின்றி ஒத்துழைப்பு கொடுத்ததுடன், பிரதிபலன் எதிர்பாராது உதவிகள் செய்திருக்கிறார்கள்.

சுமுகமான உறவில் நடந்துவந்த தொழிலில் குழப்பத்தை உண்டாக்கி அடிதடி வரை இரு தரப்பும் போகக் காரணமாக அமைந்தது லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா - 2 திரைப்படம். தமிழகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த இந்தப் படத்தை தங்கள் தியேட்டரில் திரையிட எல்லப்பன் குடும்பம் சீனிவாசனிடம் வேண்டுகோள் வைத்தது.

காஞ்சனா - 2 படத்தின் வடஆற்காடு விநியோகஸ்தர் தனது தொழில் முறை போட்டியாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தம்பி சுரேஷ். அதனால் படத்தைத் திரையிட முடியாது என மறுத்து விட்டார் சீனு. தியேட்டர்களைக் குத்தகைக்கு அல்லது கன்பர்மேஷன் என்கிற அடிப்படையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களைத் தற்காப்பு கருதி சீனிவாசன் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதனால் எல்லப்பன் மகன் சீனு நண்பர் சிவக்குமார் உதவியுடன் காஞ்சனா - 2 படத்தை ராஜேஸ்வரியில் திரையிட ஒப்பந்தம் செய்து தியேட்டருக்கு போஸ்டர் வந்துவிட்டது. இதை அறிந்த சீனிவாசன் தந்தை கோபால் தியேட்டருக்கு வந்து, “எங்களை மீறி எப்படி படத்தை போடலாம்?” எனச் சத்தம் போட வாக்குவாதம் முற்றி எல்லப்பன் மகனை கோபால் தாக்க, அதைக் கண்ட எல்லப்பன் கோபாலை தாக்க, ரணகளமாகி காவல் துறையில் இரு தரப்பும் புகார் செய்கிறது.

உறவுக்காரர்கள் என்பதால் காவல் துறை இரு தரப்புக்கும் அறிவுரை கூறி வழக்கை முடித்து வைக்கிறது. தியேட்டரை எல்லப்பன், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு லீஸுக்குக் கொடுக்கிறார். விநியோகத்தில் உச்சத்தில் இருந்த சீனிவாசன் ராஜேஸ்வரி தியேட்டருக்குப் படங்கள் கொடுக்காமல் தவிர்க்கிறார். மற்ற விநியோகஸ்தர்கள் அந்த தியேட்டருக்குப் படம் கொடுத்தால் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களில் அந்தப் படங்களைத் திரையிட மாட்டேன் என முட்டுக்கட்டை போடுகிறார்.

பெரிய படங்கள் கிடைக்காததால் தியேட்டரை தொடர்ந்து நடத்த முடியாமல் ஆஸ்கர் குத்தகையை ரத்து செய்ய வேண்டி நிலை ஏற்படுகிறது. ராஜேஸ்வரி போட்டி தியேட்டர் DR, ஆற்காடு லட்சுமி தியேட்டரை குத்தகைக்கு எடுக்கும் சீனு அந்தத் தியேட்டர்களில் பெரிய படங்களைத் திரையிட்டதால் ராஜேஸ்வரி தியேட்டர் தொடர்ந்து நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்படுகிறது. இருப்பினும் கெளரவத்துக்காக கிடைத்த படங்களை திரையிட்டு இன்று வரை தியேட்டரை நடத்தி வருகிறது எல்லப்பன் குடும்பம்.

தியேட்டர் உரிமையாளர்களின் உரிமைக்காக வாதாடக்கூடிய சீனிவாசன் தன் முன்னேற்றத்துக்கு முன்னோடியாக இருந்த ராஜேஸ்வரி தியேட்டருக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். முட்டுக்கட்டையை மூழ்கடித்து ராஜேஸ்வரி தியேட்டர் ராஜபாட்டையில் பயணிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வியாழன் 5 ஏப் 2018