மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி மக்கள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஆலைக்குச் சொந்தமான சொத்துகளைச் சேதப்படுத்துவோம் என மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று (ஏப்ரல் 4) விசாரணைக்கு வந்தது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘குமரெட்டியபுரம் மக்கள் தவறான தகவல் பரப்பி தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆலையின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப் போவதாக அச்சுறுத்தல், மிரட்டல் வருகின்றன. எஸ்.பியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு, ‘ஸ்டெர்லைட் ஆலைக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆலை முன் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஆலை நிர்வாகம் புதிய மனு அளிக்கலாம் எனக் கூறியுள்ளது.

வியாழன், 5 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon