மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிப் பொதுவில் மிகப் பரவலாகக் கூறப்படும் கருத்துகள், மிகப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இட ரீதியாகவும் குழுக்கள் வாரியாகவும் வர்க்கம் மற்றும் பாலின ரீதியிலும் எண்ணற்ற வகையில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்தியாவின் குணச்சித்திரங்களாகப் பொதுமைப்படுத்தப்படும் தன்மைகள் இந்தத் தகவல்களின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சாதி மதம் போன்ற அனைத்து சமூகப் பிரிவுகளிலும் கணிசமான உட்பிரிவு வேறுபாடுகள் நிலவுகின்றன. உணவுப் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் சமூகப் பிரிவுகளின் உள்ளார்ந்த அடையாளத்தையே வரையறுப்பதைப் பிரச்சினைக்குரிய விஷயமாக ஆக்கும் அளவுக்கு இந்த வேறுபாடுகள் இருக்கின்றன. உணவுப் பழக்கவழக்கங்களை முன்னிறுத்தி வன்முறை நியாயப்படுத்தப்படும் ஒரு சமூகச் சூழலில், கலாசார - அரசியல் நிர்பந்தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை வடிவமைக்கின்றன. இந்திய உணவுப் பழக்கங்களை இது இப்படித்தான் என்று கறாராக வகைப்படுத்திப் பார்க்க முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது – ஆசிரியர்)

நடப்பிலுள்ள சட்டங்களை மீறாமல் மக்களின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய கொள்கையொன்றை வகுப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பின்னணியில், நமது நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, ஆனால் கொள்கைரீதியான அல்லது அரசியல்ரீதியான முடிவுகளில் கணிசமாக ஈடுபடுத்தப்படாத, உரிமையொன்றைப் பற்றிப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். மே 2016இல் வழங்கப்பட்ட முக்கியத் தீர்ப்பு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் மகாராஷ்டிர பிராணிகள் பாதுகாப்புச் சட்டம் 1976இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் ஒன்றை (1995இல் நிறைவேற்றப்பட்டு 2015இல் குடியரசுத் தலைவர் அனுமதியைப் பெற்றது) செல்லாததாக்கியது. அந்தச் சட்டத் திருத்தம் மாநிலத்துக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சியைக்கூடத் தடை செய்திருந்தது. அந்தச் சட்டத் திருத்தத்தின் பிரிவைச் செல்லாததாக்கிய நீதிபதிகள் பின்வருமாறு கூறினர்:

ஒரு குறிப்பிட்ட வகை உணவை உண்ணக் கூடாது என்று அரசு குடிமக்களுக்குக் கூறுமேயானால் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை உணவை வைத்திருக்கவோ, உண்ணவோ விடாமல் குடிமக்களைத் தடுக்குமேயானால் அது நிச்சயம் தனிநபரின் அந்தரங்க உரிமையை (Right to Privacy) மீறும் செயலாகும். (ஷேய்க் சாஹித் முக்தாருக்கும் மற்றும் மகாராட்டிர அரசாங்கம் மற்றும் இதரர்களுக்குமிடையிலான வழக்கு 2016)

அவரவர் விருப்பத்துக்கு விடப்பட்டால் இந்திய மக்கள் எதைச் சாப்பிடுகிறார்கள், வெவ்வேறு சமூகப் பிரிவுகளுக்கிடையேயும் ஒரே சமூகப் பிரிவுக்குள்ளேயும் நிலவும் வேறுபாடுகள் இந்தச் சமூகப் பிரிவின் உணவுப் பழக்கவழக்கங்களை வரையறுப்பதன்மீது செலுத்தும் தாக்கங்கள் என்ன ஆகியவற்றை இந்தக் கட்டுரை ஆராய முற்படுகிறது.

மேற்கண்ட தீர்ப்பு ‘தன் விருப்பப்படி விடப்படுவதற்கான உரிமை’ உள்ளவராகத் தனிநபரை இனங்காட்டினாலும், நடைமுறையில் அந்த உரிமை பலருக்குக் கிடைப்பதில்லை. எனவே தன் விருப்பத்துக்கு விடப்படுவதற்கான உரிமை, ஒரு பிரிவு அல்லது சமூகத்தின் கலாசாரம் அல்லது தனிநபர்களின் சொந்த அனுபவங்களைப் பற்றித் துளியும் பொருட்படுத்தாத ‘தேசிய’ கலாசாரத்தின் மேலாண்மைக்கு உட்படுத்தப்படும் தனிநபர்களுக்குக் கிடைப்பதில்லை. இத்தகைய மேலாண்மையானது ஊடகங்களாலும் சமூக அமைப்புகளாலும் சட்டமியற்றுவோரின் உதவியுடன் செயல்படும் பசு பாதுகாவலர்கள் என்ற தனியார் படை போன்றவர்களாலும் சமூகத்தில் தக்கவைக்கப்படுகிறது. இவர்கள் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய பொது வாதங்களையும் பிரதிநிதித்துவங்களையும் (எடுத்துக்காட்டாக, புலால் உண்ணாமையைப் பெரிதுபடுத்தி நியாயப்படுத்துவது மற்றும் மாட்டிறைச்சி தின்பதை கிரிமினல் குற்றமாக்குவது ஆகியன) முன்வைக்கின்றனர். தமது வாதங்களுக்குச் சமூக ஒப்புதலைக் கோருகின்றனர். பலப் பிரயோகத்தின் மூலமோ அல்லது அதற்கான அச்சுறுத்தலின் மூலமோ அனைவர் மீதும் அதைத் திணிக்கப் பார்க்கின்றனர். இந்தப் பின்னணியில் ஒவ்வொருவரும் ‘தன் விருப்பப்படி விடப்படுவதற்கான’ உரிமையை ஆராய வேண்டும்.

தனிநபர் அவர் விருப்பத்துக்கேற்ப விடப்படாத அத்தகையதொரு சூழ்நிலையானது, அந்த மேலாண்மையை (தயக்கத்துடன்) ஏற்றுக்கொள்வது, நியதிகளை யாருக்கும் தெரியாமல் மீறுவது, ஆதிக்கத்தை வெளிப்படையாக எதிர்ப்பது போன்ற பலவிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது. புலாலுண்ணாமையின் மேலாண்மை மற்றும் மாட்டிறைச்சி தின்பதை இழிவான செயலாகச் சித்திரித்திருப்பது ஆகிய இரண்டுமே இணைந்திருப்பதால் இந்தியா எதை உணவாகக் கொள்கிறது எனப் பார்ப்பதில் எச்சரிக்கை தேவைப்படுகிறது. உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி மக்கள் ஆய்வில் தெரிவிக்கும்போது, புலாலுண்ணாமை குறித்து மிகையாக மதிப்பிடுவதற்கும் மாட்டிறைச்சியை உண்பது குறித்து (ஏன், இறைச்சியைச் சேர்த்துக்கொள்வது குறித்தேகூட) அதிகம் குறிப்பிடாமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

பார்க்கப்போனால், பரவலாகப் பயன்படுத்தப்படுகிற, இந்தியாவுக்கே உரித்தான நான்-வெஜிடேரியன் என்ற சொல்லே இந்தியாவில் புலாலுண்ணாமையின் வரலாற்று மேலாண்மைக்குச் சான்றாக விளங்குகிறது. ஆனால், யதார்த்தத்தில், புலாலுண்பது எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்பதற்கான விவரங்கள் இந்நிலையை மறுக்கின்றன. எனவே, இந்த மேலாண்மையைத் தக்கவைக்க வன்முறையைப் பயன்படுத்துவது அதிகரிக்கிறது. எனவே, நான்-வெஜிடேரியன் எனக் குறிப்பிடப்படுபவர்களை இனங்காட்ட ‘புலாலுண்பவர்கள்’ என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்த முற்படுகிறோம். எனினும், நான்-வெஜிடேரியன் என்பதும் ஆய்வில் ஓர் அதிகாரபூர்வமான வகையினமாக இருப்பதால், இந்தச் சொல்லையும் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். மாமிசத்தைத் தெளிவாகத் தவிர்ப்பதன் மூலமே அன்றாட நடைமுறைகளில் வெஜிடேரியன் என்ற வகையினம் யதார்த்தமாக்கப்படுகிறது. ஆனால் நான்-வெஜிடேரியன் என்ற வகையினம் அத்தகைய தடை எதையும் சார்ந்திருக்கவில்லை என்பதை அங்கீகரிப்பது அவசியம். இதன் விளைவாக, இந்த வகையினங்களை முறையே இறைச்சி-தவிர்ப்பவர்கள் மற்றும் இறைச்சி-உண்பவர்கள் எனப் பார்ப்பது தர்க்கரீதியாக அதிகப் பொருத்தமாக இருக்கும்.

இந்தக் கட்டுரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) நிகழ்த்துவதைப் போன்று பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்தியில் உணவுப் பழக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து கிடைத்த விவரங்களையும், இவ்விவரங்கள் பொருள்படுத்தப்படுவதற்கான பின்னணியையும் முன்வைக்கிறது. இதன் முக்கிய குறிக்கோள்களாவன:

1. மாட்டிறைச்சித் தடைகள் மற்றும் அவற்றின் விளைவாக எழும் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் பின்னணியில் தனிநபர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சமூகப் பிரிவுகளின் உணவுப் பழக்கவழக்க நடைமுறைகள் ஆகியவை குறித்து கூறப்படுபவற்றை மதிப்பீடு செய்ய வலுவான ஆதாரமாக விளங்கக்கூடிய அடிப்படை அளவீடு (baseline) ஒன்றை நிறுவுவது;

2. புலாலுண்ணாமை, இறைச்சி உட்கொள்வது, குறிப்பாக மாட்டிறைச்சி உட்கொள்வது ஆகியவை குறித்து முக்கியமாகச் சொல்லப்படுபவற்றைக் கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் மாட்டிறைச்சி உட்கொள்வது பற்றிய பொதுவிவாதத்தின் அறிவுநிலை மட்டத்தை உயர்த்துவது.

எனவே, நாங்கள் இந்தக் கேள்விகளை முன்வைக்கிறோம்:

இந்தியாவில் மரக்கறி உணவு எந்த அளவுக்குப் பரவலாக உள்ளது? குறிப்பிட்ட மதத்தினரிடையே சாதிப் பிரிவினரிடையே எந்த அளவுக்குப் பரவலாக உள்ளது?

இறைச்சி உண்பது எந்த அளவுக்குப் பரவலாக உள்ளது? குறிப்பாக இந்துக்கள் மத்தியிலும் பல்வேறு சாதிப் பிரிவினர் மத்தியிலும் எந்த அளவுக்குப் பரவலாக உள்ளது?

இந்தியாவில் எந்த அளவுக்கு மாட்டிறைச்சி உட்கொள்ளப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியுமா?

இக்கேள்விகள் ஒவ்வொன்றுமே சமூகப் பிரிவுகளுக்குள்ளேயும் அவற்றுக்கிடையேயும், பிராந்தியங்கள், பாலினங்கள் ஆகியவற்றுக்கிடையேயும் நிலவும் வேறுபாடுகளைக் கணக்கிலெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. உணவுப் பழக்கவழக்கங்கள் போன்ற சமூக நிகழ்வுப் போக்குகள் குறித்து அளிக்கப்படும் எந்த விளக்கத்துக்கும் இன்று இந்தியாவில் உணவு தொடர்பான கலாசாரக் கொள்கைகளோடு ஈடுகொடுப்பதற்கும் இந்த மாறுபாடுகள் மிகத் தீர்க்கமானவை என நாங்கள் காண்கிறோம். இதன் விளைவாக, பின்வரும் கேள்வியை நாங்கள் கேட்க விரும்புகிறோம்:

ஒரு சமூகப் பிரிவினருக்குள்ளேயே நிலவும் வேறுபாடுகளால் சமூகப் பிரிவுகளின் கலாசார நடைமுறைகள் எனச் சொல்லப்படுபனவற்றுக்கு என்ன நேர்கிறது? ‘தேசிய’ உணவு நடைமுறைகள் எனச் சொல்லப்படுவனவற்றுக்கு பிராந்திய வேறுபாடுகள் பொருள்படுத்துவது என்ன?

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை...)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் ([email protected]) அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் ([email protected]) உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: http://www.epw.in/journal/2018/9/special-articles/provincialising-vegetarianism.html

தமிழில்: பா.சிவராமன்

வியாழன், 5 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon