மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

தீக்குளித்த தொண்டர்!

தீக்குளித்த தொண்டர்!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைகோ இன்று நடைபயணம் செல்லத் தயாரான நிலையில், மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 1O நாட்கள் நடைபயணம் அறிவித்திருந்தார். அதன் தொடக்க விழா இன்று மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பயணத்தைத் துவக்கிவைத்தார்.

முக்கிய வேலை இருப்பதால் சீக்கிரமே பேசிவிட்டுச் செல்வதாக ஸ்டாலின் கேட்க, வைகோவும் அதற்கு இசைந்தார். அதன்படி பயணத்தைத் துவக்கிவைத்துப் பேசிவிட்டு ஸ்டாலின் சென்றுவிட்டார். அதன் பிறகு மற்ற தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். மதியம் 1.20 மணிக்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழக தலைவர் தெகலான் பாகவி பேசிக் கொண்டிருந்தார். வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

அப்போது மேடைக்கு 100 அடி தூரத்தில் இருந்த ஒரு கிரானைட் கடைக்குள் இருந்து ஓர் உருவம் எரிந்தபடியே கூட்டத்துக்குள் நுழைந்தது. ‘மோடியே நியூட்ரினோ திட்டத்தை நிறுத்து...’ என்ற குரல் நெருப்புக்குளிருந்து முழக்கமாகக் கேட்டது. உடனே மேடையில் இருந்த வைகோ உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அதிர்ந்துவிட்டனர். அதற்குள் சுற்றியிருந்தவர்கள் கையில் இருந்த பதாகைகளால் விசிறித் தீயை அணைத்தனர். வைகோ அவசர அவசரமாக மேடையை விட்டு இறங்கி ஓடி வந்தார். பயணத்தில் முதலுவிதவிக்காக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸைப் பிடித்து சட்டென அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடனடியாக செல்போன் மூலம் மதுரை அப்பல்லோ டாக்டர்களிடம் பேசிய வைகோ, கூட்டத்திலேயே, ‘ஜிஹெச்சுக்கு கூட்டிப் போகாதீங்க. காப்பாத்த முடியாது. அப்பலோவுக்கு கூட்டிட்டிப் போங்க’ என்று அங்கேயே காவல் துறைக்கு வேண்டுகோள் வைத்தார் வைகோ. அதன் பிறகுதான் அந்தத் தொண்டர் ரவி என்றும் விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் என்றும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மேடையில் கண்ணீருடன் பேசிய வைகோ, "ரவியை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுபோகக் கூறியுள்ளேன். எந்த நேரமும் சிரித்த முகத்தோடு வந்து வருடா வருடம் சொந்த செலவில் காலண்டர் அச்சடித்து கொடுக்கிறவன். இப்போகூட என்னுடைய வைகோ கடிதங்கள் புத்தகத்த அவன்தான் அச்சடிச்சி கொடுத்தான். இயற்கைத் தாயே அந்தத் தம்பியைக் காப்பாற்றம்மா" என்று வேண்டிக்கொண்டார்.

மேலும் அவர், யாரும் தீக்குளிப்பு முயற்சியில் இறங்க வேண்டாம் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். இவ்வாறு தீக்குளிக்காதீர்கள். உங்களை மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ரவி இதுபோன்று செய்தது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது" என்று வேண்டுகோளும் விடுத்தார்.

இன்றைய நடைபயணத்தை முடித்த பிறகு மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ரவியை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக என்னையே நான் பலியிட்டுக்கொண்டால் தடுக்கலாம் என்பதால் தீக்குளித்தேன் என்று ரவி மாஜிஸ்ட்ரேடிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உன் குடும்பத்தை நிர்கதியாக்குவது போல இப்படிச் செய்துகொண்டாயே என்று நான் அழுதேன். ரவியின் உடலில் 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. குரல் மட்டும் உள்ளது. இயற்கை அன்னை தம்பி ரவியைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதன் பின் நடைப் பயணத்தைத் தொடர்கிறார் வைகோ.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon