மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

ஐசிஐசிஐ அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

ஐசிஐசிஐ அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய விவகாரத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என அவ்வங்கி அதிகாரிகள் சிலரிடம் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி 2012ஆம் ஆண்டில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியுள்ளது. வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத், ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சரும் நிறுவனம் ஒன்றின் பங்கு மாற்றத்தில் நிதி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ அவர்களிடம் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில் வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்துள்ள சிபிஐ அமைப்பினர் ஐசிஐசிஐ வங்கியிடம் தனது விசாரணையைத் தற்போது தொடங்கியுள்ளனர்.

அதன்படி, ஐசிஐசிஐ வங்கியின் சில உயரதிகாரிகளிடம் சிபிஐ கடன் விவகாரம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், 2012ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.3,250 கோடி கடனுக்கான ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதாக சிபிஐ அதிகாரிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். கடன் வழங்கியதில் மோசடி நடந்திருப்பதாக இந்த விசாரணையில் கண்டறியப்பட்டால் சாந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு அடுத்தகட்ட விசாரணைக்கான சம்மன் அனுப்பப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடியோகான் நிறுவனம் பெற்ற மொத்தக் கடனில் ஐசிஐசிஐ வங்கி வழங்கிய கடன் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே. கடன் வழங்கிய இதர வங்கிகளிடமும் விரைவில் சிபிஐ விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon