மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

வினாத்தாள் லீக் : 12 பேர் கைது!

வினாத்தாள் லீக் : 12 பேர் கைது!

சிபிஎஸ் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உட்பட 12 பேரை போலீஸார் இன்று (மார்ச் 31) கைது செய்துள்ளனர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மார்ச் 26ஆம் தேதி, ப்ளஸ் 2 வகுப்புக்கான பொருளாதார தேர்வும், மார்ச் 28ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கான கணித தேர்வும் நடைபெற்றது. ஆனால், இந்த 2 தேர்வுகளுக்கான வினாத்தாளும், தேர்வு தொடங்கும் முன்னரே வாட்ஸ் அப்பில் வெளியானது. டெல்லி, அரியானா மாநிலத்தில் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. 28ஆம் தேதி மாலை சிபிஎஸ்இ கல்வி வாரியம், 2 தேர்வுகளையும் ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. மார்ச் 29ஆம் தேதி மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 25ஆம் தேதி ப்ளஸ் 2 பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு மட்டும் நடைபெறும் என்றும், ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் கணித பாடத்துக்கான மறுதேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடையாது எனவும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அனில் ஸ்வரூப் நேற்று(மார்ச் 30) அறிவித்தார்.

டெல்லி சிபிஎஸ்இ மாணவர்கள் மறுதேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், மறுதேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஜார்கண்டில், ஏபிவிப் மாணவர் அமைப்பின் தலைவர், 9 சிறுவர்கள் உட்பட 12 பேரை ஜார்கண்ட் போலீஸார் கைது செய்துள்ளனர். 9 சிறுவர்கள் மீது சிறார் சீர்திருத்தப் பிரிவு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏபிவிபி மாணவர் அமைப்பின் சத்ரா மாவட்ட ஒருங்கிணைப்பாளரான சதீஷ் பாண்டே டியூசன் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் மாணவர்களிடம் பணம் வாங்கி கொண்டு 28ஆம் தேதி நடைபெற்ற கணித தேர்வுக்கு 27ஆம் தேதி வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை அனுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகள், மாணவர்கள், சிபிஎஸ்இ பயிற்சி நிறுவனர் உள்ளிட்ட 60 பேரிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எஸ்எஸ்சி(மத்திய பணியாளர் தேர்வாணையம்) தேர்வின் வரலாறு (history),அரசியல் அறிவியல் (Political Science) வினாத்தாள் (part 1) வெளியானது. அது தொடர்பாக ஆசிரியர் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், எஸ்எஸ்சி வினாத்தாள் வெளியானதை எதிர்த்து தேர்வர்கள் டெல்லி பாராளுமன்ற தெருவில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், ப்ளஸ் 2 ஹிந்தி (எலக்டிவ்) கேள்வித்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானதாகத் தகவல் பரவியது. அதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது. வினாத்தாள் வெளியானதாக வரும் தகவல்கள் பொய்யானவை. யூ ட்யூப் வாட்ஸ் அப்பில் வலம் வரும் வினாத்தாள் முந்தைய ஆண்டு வினாத்தாளாக இருக்கலாம் என விளக்கமளித்துள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon