அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவான விலையில் கடுகு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சண்டிகரில் தற்போது கடுகு கொள்முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுகு கொள்முதல் நிலையங்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன. கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்த கடுகைத் தனியாரிடம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,700 முதல் ரூ.3,800 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
அரசு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்கான லாஜிஸ்டிக் செலவுகள் மிக அதிகமாக இருப்பதே விவசாயிகள் அருகிலுள்ள தனியாரிடம் விற்பனை செய்வதற்கான காரணமாக உள்ளது. விவசாயிகள் உள்ள பகுதிகளுக்கு அருகில் கடுகு கொள்முதல் நிலையங்களைத் திறப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். சண்டிகரின் மகேந்திர கார்க் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "அரசு கொள்முதல் நிலையங்கள் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. நான் தனியாரிடம் குவிண்டால் ஒன்றுக்கு 3,600 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளேன்" என்றார். இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் கடுகு உற்பத்தி செய்துள்ளார்.
ஹரியானாவில் கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசின் 100 ரூபாய் போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆனால் அங்கும் சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவான விலைக்குத்தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஹரியானாவின் சார்கி தத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "குறைந்தபட்ச ஆதரவு விலையை விடச் சற்று குறைவான விலைதான் சந்தையில் நீடிக்கிறது. பெரும்பாலான மண்டிகளில் 3,900 ரூபாய்க்கும் குறைவான விலையில்தான் கடுகு கொள்முதல் செய்யப்படுகிறது" என்றார்.