மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

தனியார் துறை வருகையால் பாதிப்பில்லை!

தனியார் துறை வருகையால் பாதிப்பில்லை!

நிலக்கரிச் சுரங்கப் பணிகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், இது இரு நல்ல வாய்ப்புதான் எனவும் கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், நிலக்கரி உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னிலை வகிப்பதோடு, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 80 சதவிகிதப் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிலக்கரிச் சுரங்க வேலைகளில் தனியார் நிறுவனங்களை இணைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதனால் கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கும் எனவும், சந்தையில் அதன் ஆதிக்கம் சரிந்து பங்குகள் குறையும் எனவும் அஞ்சப்பட்டது. ஆனால், அரசின் இந்த முடிவால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறும் கோல் இந்தியா நிறுவனம் இந்த முடிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோல் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் சிங் கொல்கத்தாவில் மார்ச் 30ஆம் தேதி ஏசியன் ஏஜ் ஊடகத்திடம் பேசுகையில், “சுரங்கத் துறையில் தனியார் நிறுவனங்களுக்கான கதவு திறக்கப்பட்டிருப்பது எங்களுக்கு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருக்கும். இதில் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை. எங்களது நிறுவனம் உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு நிலக்கரியை விற்பனை செய்து வருகிறது. உற்பத்தி மற்றும் தகுதியை அதிகரித்துக் குறைந்த விலையில் நிலக்கரியை விற்பனை செய்வதன் வாயிலாக எங்களது சந்தைப் பங்கைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான அம்சங்களும் எங்களிடம் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

வரும் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 22.13 சதவிகித உயர்வுடன் மொத்தம் 155.36 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை விநியோகம் செய்ய கோல் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon