மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

ஆரத்தி தட்டில் சிக்கிய சித்தராமையா

ஆரத்தி தட்டில் சிக்கிய சித்தராமையா

கர்நாடகா மாநிலம் மைசூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகத் தகவல் வெளியானது. இதற்குப் பதிலளித்துள்ள சித்தராமையா, தட்சணை அளிப்பதில் தவறில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில், வரும் மே 12ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் என மும்முனைப்போட்டி அங்கு நிலவுகிறது. ஆனால், காங்கிரஸும் பாஜகவும் ஒன்றையொன்று எதிர்த்துக் குரல் கொடுப்பதன் மூலமாக மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகின்றன.

கடந்த 29ஆம் தேதியன்று, மைசூரில் நடந்த காங்கிரஸ் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டார் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா. அப்போது, காரில் நின்றவாறே கீழே இருந்தவர்களில் சிலருக்கு அவர் பணம் கொடுத்த வீடியோ ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து, தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி பணம் அளிப்பதாகக் குற்றம்சாட்டியது பாஜக.

இதற்குப் பதிலடியாக, பாதிப்புக்குள்ளான ஆர்எஸ்எஸ் தொண்டர் மைசூர் ராஜூவின் குடும்பத்திற்கு பாஜக தலைவர் அமித் ஷா, கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா மற்றும் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஆகியோர் ரூபாய் 5 லட்சம் வழங்கியதைக் குறைகூறியது காங்கிரஸ். பலமுறை மைசூரு வந்தபோதும், தேர்தல் பிரசாரத்தையொட்டி அக்குடும்பத்திற்கு அமித் ஷா நிதியுதவி செய்தது விதிகளுக்கு எதிரானது என, அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 31) தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் சித்தராமையா. அதில், ”ஆரத்தி எடுக்கும்போது தட்சணை அளிக்கும் பாரம்பரிய வழக்கத்தையே நானும் பின்பற்றினேன். ஆனால், சில ஊடகங்கள் இதுபற்றி முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன” என்று கூறியுள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon