பரோல் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கையில், முன் கூட்டியே தஞ்சையில் இருந்து இன்று (மார்ச் 31) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா. கடந்த 20-ம் தேதி தனது கணவர் நடராஜனின் மறைவை ஒட்டி 15 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து நேரடியாக தஞ்சைக்கு வந்தார் சசிகலா.
இந்நிலையில் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்ட சசிகலா, இன்னும் நான்குநாள் பரோல் இருக்கும் நிலையில் இன்று காலை சிறைக்குப் புறப்பட்டார். சனிக்கிழமை ராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை என்பதால், சரியாக காலை 8.45க்கெல்லாம் தஞ்சை அருளானந்த நகர் வீட்டில் இருந்து புறப்பட்டார் சசிகலா.
அவர் அங்கிருந்து புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு திமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு அருளானந்த நகரில் இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த நடராஜனின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். சசிகலா சிறைக்குப் புறப்படும் சமயம், திமுக முன்னாள் அமைச்சரான நேரு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதுகுறித்து விசாரிக்கையில், ‘படத்திறப்பு நிகழ்ச்சிக்கு நேருவுக்கும் அழைப்பிதழ் தரப்பட்டிருக்கிறது. நிகழ்வில் நேருவால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த நிலையில்தான் இன்று தஞ்சை வந்தவர் நடராஜனின் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டார். ஆனால் காலை வேளையில் அங்கு சசிகலாவின் உறவினர்கள் யாரும் இல்லை, என்று தகவல் வந்ததால் நடராஜன் இல்லத்தில் உள்ள அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது எதேச்சையாக சசிகலாவை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் வைத்துக் கொண்டனர். வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை’’ என்றனர் திமுக வட்டாரங்களில்.
இதுகுறித்து நேரு மதுரையில் இருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் தகவல் தெரிவிக்க, அவரும் இதுகுறித்து ஒன்றும் பிரச்னை இல்லை என சொல்லிவிட்டாராம்.
தஞ்சையில் இருந்து ராகு காலத்துக்கு முன் புறப்பட்ட சசிகலா நேராக நடராஜன் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிறைக்கு செல்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதனால் சிலர் நடராஜன் நினைவிடத்துக்கு சென்று காத்திருந்தனர். ஏற்கனவே சிறைக்கு சென்றபோது சென்னையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சபதம் எடுத்துச் சென்றார் சசிகலா. அதுபோலவே இப்போதும் தன் கணவர் நினைவிடத்துக்குச் சென்று சபதம் எடுத்துக் கொள்வார் என்று கருதிதான் சிலர் அங்கே குழுமினர். ஆனால் சசிகலா அங்கே செல்லாமல் சபதமும் எடுக்காமல் சென்றது அவர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.